இந்தியா

மோடியின் தவறான ஆட்சியால் சீரழியும் இந்தியப் பொருளாதாரம்

டி.ராஜா

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மோடி அரசு, இந்தியா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், விஸ்வகுரு, உலக முதலீட்டாளர்களின் விருப்ப நாடு, 2047-க்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கி முன்னேறுகிறது என்பன போன்ற பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், உண்மையில் இந்தியப் பொருளாதாரம் ஆழமான கட்டமைப்புப் பலவீனங்களையும், எதிர்காலத்தை அச்சுறுத்தும் சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய பலவீனம், வெளிநாட்டு எரிசக்தியை, அதிகமாகச் சார்ந்திருப்பதாகும். நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதமும், இயற்கை எரிவாயு தேவையில் பெரும் பகுதியும் இறக்குமதியைச் சார்ந்துள்ளன.

இதனால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும்போதெல்லாம், அதன் தாக்கம் நேரடியாக இந்தியப் பொருளாதாரத்தில் பிரதிபலிக்கிறது. எரிபொருள் விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகரிக்கிறது; வர்த்தகப் பற்றாக்குறையை விரிவுபடுத்துகிறது.

இதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. ரூபாயின் சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி மிகப்பெரிய அளவில் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, பொருளாதாரத்தை இன்னும் பலவீனப்படுத்துகிறது.

வேளாண்மையிலும் இதேபோன்ற அபாயம் நிலவுகிறது. உர உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றதாகக் கூறப்பட்டு வந்தாலும், இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு மற்றும் பிற மூலப்பொருட்களைப் பெரிதும் சார்ந்த நிலையில் தான் யூரியா உள்ளிட்ட உரங்களின் உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் உலகளாவிய விநியோகத் தடைகள் அல்லது விலை உயர்வுகள் ஏற்பட்டால், இந்திய விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும்.

அதனுடன், எல்நினோ காரணமாக பருவமழை பொய்த்து விடும் அபாயமும் இணைந்தால், வேளாண் உற்பத்தி குறையும்; கிராமப்புற வருமானம் வீழ்ச்சியடையும்; நுகர்வு குறையும்; உணவுப் பணவீக்கம் அதிகரிக்கும்.

இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில், மோடி அரசு திட்டக் குழுவைக் கலைத்ததோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) போன்ற கிராமப்புற பாதுகாப்பு அமைப்புகளையும் பலவீனப்படுத்திவிட்டது.

ஐ.டி. உள்ளிட்ட சேவைத்துறை, பொருட்கள் ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணம் ஆகியவற்றின் மூலமே இந்தியா அந்நியர் செலாவணியை ஈட்டுகிறது. அண்மை ஆண்டுகளில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் சாதனை அளவை எட்டியிருந்தாலும், அதன் பெரும்பகுதி தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் உயர்திறன் வாய்ந்த தொழில்முறை நிபுணர்களிடமிருந்து வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் ஆட்சியாளர்கள் முன்னெடுக்கும் வலதுசாரி அரசியல், குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் ஆகியவற்றாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியாலும் எதிர்காலத்தில் அந்த நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் வேலை இழந்து தாய் நாட்டுக்குத் திரும்பக்கூடும். இதனால் அவர்களிடமிருந்து வரும் அன்னியச் செலாவணி வருவாய், பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் ரூபாயின் மீதான அழுத்தமும் மேலும் அதிகரிக்கக்கூடும்.

சர்வதேச முதலீட்டாளர்களின் அணுகுமுறையும் அபாய எச்சரிக்கை விடுக்கிறது. இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையைத் தாங்கி நிறுத்தினாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச நம்பிக்கை மெல்லக் குறைந்து வருவதாக இந்த நிலை சுட்டிக்காட்டுகிறது.

எதிர்கால உலகப் பொருளாதாரத்தை செயற்கை நுண்ணறிவு, குறைகடத்தி தொழில்நுட்பம், உயர்தர உற்பத்தி, ரோபோட்டிக்ஸ் மற்றும் அறிவியல் புதுமைகள் தீர்மானிக்கப் போகின்றன. ஆனால் இந்தியா இந்தத் துறைகளில் உலக முன்னணியில் இடம்பெறவில்லை. நாட்டில் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, டிஜிட்டல் தளங்கள் வழியாக மலிவான உழைப்பாளர்களை ஒழுங்குபடுத்தும் வணிக மாதிரிகளையே பின்பற்றுகின்றன.

தைவான், தென்கொரியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தொழில்நுட்பத் துறையில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா இன்னமும் குறைகடத்திகள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி உபகரணங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது.

இந்தியாவில் தொழில் உற்பத்தி வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக பத்தாண்டுகளுக்கும் மேலாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் வாக்குறுதி அளிக்கப்பட்ட உற்பத்தித் துறைப் புரட்சி எதுவும் நிகழவில்லை.

எந்த நாட்டையும் விட இந்தியாவில் மனிதவளம் கொட்டிக் கிடக்கிறது. அதுவும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக கோடிக்கணக்கான இளைஞர்கள் நிலையான வேலைவாய்ப்பின்றி, பாதுகாப்பற்ற வேலைகளிலும், வாழ்வதற்குப் போதாத உயராத ஊதியங்களுடனும் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் செல்வமும் பொருளாதார வாய்ப்புகளும் சில பெருநிறுவனங்களின் கைகளில் மட்டுமே மலைபோலக் குவிந்து வருகின்றன.

இந்த பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மதவெறி, சமூகப் பிளவு மற்றும் செயற்கையாக உருவாக்கப்படும் சர்ச்சைகள் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகின்றன.

தேர்தல் வெற்றி பெற்றதாலேயே பொருளாதார வெற்றி பெற்றதாகக் கருத முடியாது; தேர்தல் முடிவுகளை பல்வேறு அரசியல் மற்றும் சமூகக் காரணிகள் தீர்மானிக்கின்றன. ஆனால் நீண்டகால பொருளாதார அடித்தளத்தை பலவீனப்படுத்தும் கொள்கைகள் தொடர்ந்தால், அதன் விளைவுகளை மக்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவிடம் இயற்கை வளங்களும், மனித வளமும், உற்பத்தித் திறனும் போதுமான அளவில் உள்ளன.

எனவே மாற்றுப் பொருளாதாரப் பாதையை உருவாக்கும் திறன் நாட்டுக்கு உள்ளது. அதற்கு பொதுத்துறை முதலீட்டை அதிகரித்தல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதலீடு, வெளிநாட்டு சார்பைக் குறைத்தல் ஆகியவை அவசியம்.

சில பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுக்கும் கொள்கைகளுக்கு எதிராக, இடதுசாரி, ஜனநாயகப் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பரந்த மக்கள் இயக்கம் கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும்.

தமிழில்: டி.எம். மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button