கட்டுரைகள்

காணிக்கைக்கு கணக்கு கேட்டால் கல்தாவா?

கிராமத்தான்

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட வன்முறைத் தலைவர்கள் தலைமையில், பெருங்கூட்டம் கடப்பாரையைக் கொண்டு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன, நாளேடுகள் முதல் பக்க தலைப்பு செய்தியாக படத்துடன் வெளியிட்டன. இடிக்கப்பட்டது பாபர் மசூதியா? இந்தியாவின் இதயமான “மதச்சார்பின்மை” கொள்கையா?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மசூதி உடைத்தது தவறு என்று கூறியது. ஆனால், இவர்கள் தான் செய்தார்கள் என்பதற்கு போதுமான சாட்சி இல்லை என்று, அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்தது.

அத்வானி அலட்டிக்கொள்ளாமல் புன்னகை பூக்க, நீதி வென்றது என்று கூறி மகிழ்ந்தார்.

மசூதி இருந்த இடம் அரசுக்கு சொந்தமானது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அங்கேயே ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து ஓர் தீர்ப்பை வழங்கியது.

நீதிமன்றத்தின் பால் நம்பிக்கை வைத்திருந்த நாட்டு மக்களுக்கு…..?

மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட ஆயத்தமாகினர், கமிட்டியும் போட்டனர். அப்பகுதியில் உள்ள நிலங்களை எல்லாம், மிகக் குறைந்த விலைக்கு, ஆர்.எஸ்,எஸ்.வகையறாக்கள் வாங்கி குவித்தனர்.

அதே நிலத்தைப் பன்மடங்கு விலையை உயர்த்தி, கோவில் கட்டும் டிரஸ்டுக்கு வழங்கி, பெரும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை நாடு நன்கறியும்.

ராமருக்குப் பெருங்கோவில் கட்டுவதற்கு, கோடிக்கணக்கில் காணிக்கை கேட்டார்கள்.

இராமன் மீது நம்பிக்கை கொண்ட இராம பக்தர்கள், பல்லாயிரம் கோடி ரூபாய்களை வாரி வழங்கினார்கள். எல்லையற்ற வசூல், மலைபோல் குவிந்தது காணிக்கை.

கோவிலும் கட்டி முடித்தார்கள். மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியார், கோவில் கும்பாபிஷேக விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மகிழ்ந்தார்.

பல நூறு ஆண்டுகளாக குடிசையில் இருந்த குழந்தை இராமர், கோட்டையாய் உயர்ந்து நிற்கும் கோவிலுக்குள் அமர்த்தப்பட்டார் என்று பெருமிதம் கொண்டார் பிரதமர் மோடி.

 ராமனின் பெயரால் மசூதி இடிப்பு,

 ராமனின் பெயரால் நில மோசடி, பெரும் மோசடி,

 ராமனின் பெயரால் காணிக்கை வசூல் – கணக்கின்றி,

 ராமனின் பெயரால் காணிக்கை பல்லாயிரம் கோடி கொள்ளை இதனை நாம் சொல்லவில்லை, வேண்டா வெறுப்பாகக் கூறவில்லை, மாறாக, சொல்ல வேண்டியவர் உண்மையை சொல்கிறார்.

மஹிபால் சிங், இவர் ராமர் கோவிலுக்கு வரும், ராமனின் பெயரால் வரும் காணிக்கைகளை எண்ணும் குழு உறுப்பினர்களில் ஒருவர்.

இவர் கூறுவதைப் படியுங்கள், கவனமாகப் படியுங்கள். காணிக்கையில் நடைபெற்று வரும் முறைகேடுகளை, கொள்ளையை குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “ராமர் கோவில் பணம் எண்ணும் போது, பெட்டியில் 10 கட்டுகள் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் வங்கி ஊழியர்கள் உண்மையில் 13 கட்டுகளைப் பெட்டியில் வைத்திருந்தனர். இந்த முரண்பாட்டை உணர்ந்து, பெட்டியில் இருந்த கட்டுகளை சரிபார்த்த போது, பத்து இருக்க வேண்டிய இடத்தில், 13 பணக்கட்டுகள் இருந்தன.

இது எவ்வளவு காலமாக நடைபெறுகிறது என்பதை விசாரிக்க, ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தேன். பின்னர் நன்கொடைகளை சரிபார்த்து எண்ணுவதற்காக, மேலும் இருவர் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகும் குறைகள் சரி செய்யப்படவில்லை. ஆனால் என்னைப் பணியிலிருந்து நீக்கி விட்டனர்” என்று கூறியுள்ளார். (இந்து தமிழ் திசை 14.6.2026 பக்கம் 11)

ராமருக்குரிய காணிக்கைக்கு கணக்கு கேட்ட பணம் எண்ணும் குழு உறுப்பினருக்கு, அறக்கட்டளை அளித்த வெகுமதி “கல்தா”!

அவரது வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் இணைத்து, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் “இன்று உலகம் அறிந்து கொண்ட இந்தச் செய்தி, உண்மையில் மிகவும் பழையது”

அறக்கட்டளை என்றால் “நம்பிக்கை”, இந்த விவகாரத்தை அறக்கட்டளையே தீவிரமாக எடுத்துக்கொண்டு நீதித்துறை விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். அரசு ஏன் மௌனம் காக்கிறது. விசாரணை கோரிக்கையை கண்டு முக்கிய புள்ளிகள் அஞ்சுகிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

(தகவல்.. ராமர் கோவில் வளாகத்தில் உள்ள 15 கோவில்களில், 44 காணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர அறக்கட்டளையின் 2 அலுவலகங்களிலும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன)

இத்தகைய காணிக்கை முறைகேடு குறித்து, அறக்கட்டளையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மஹந்த் கமல் நயன்தாஸ் கூறும்போது “தவறு நடந்திருந்தால் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பினரும் அதை நம்புவார்கள் என்றும், உண்மைகள் வெளிவரக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் கோயில் நன்கொடை சர்ச்சை குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன், சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் என்று புனிதம்(?) நிறைந்த ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.

காணிக்கை களவாடல் குறித்து தினமலர் ஏடு 12.6.2026 ஆம் நாளிட்ட இதழின், பத்தாம் பக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை வசூலில் மோசடி எனும் தலைப்பில், வெளியிட்டுள்ள செய்தியில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சிங் கூறுகையில், “நன்கொடையில் முறைகேடு நடந்தது தொடர்பாக. எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால், அந்த உண்மைகளை வெளியே சொன்னால், எனக்குத்தான் பிரச்சனை. இதில் தொடர்புடையவர்கள் எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்த நபர்கள்” என்றார்.

ஆனால் பாஜகவின் மூத்த தலைவர், ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் என்ன கூறுகிறார். “ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை” என்று கூறுகின்றார்.

ஒன்றிய அமைச்சரே, அகிலேஷ் கூறவில்லை.

பணம் எண்ணும் குழு உறுப்பினர் கூறுகின்றார்!

அறக்கட்டளை தலைவர் கூறுகின்றார்!

பாஜகவின் முன்னாள் எம்பி கூறுகின்றார்!

ஆர்எஸ்எஸ் கூறுகின்றது!

இவர்களையும் நம்ப வேண்டாம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படலாமா ஒன்றிய அமைச்சரே?

தசரத மன்னனின் புதல்வனை, உங்களின் கூற்றுப்படி மக்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டு காணிக்கை செலுத்தினார்கள்.

ராமனின் பெயரால் வசூலித்த காணிக்கைகளை களவாடலாமா? களவாடலை கண்டுபிடித்தவர்களுக்கு கல்தா கொடுக்கலாமா? இதுவும் தெரியும், இதற்கு மேலும் தெரியும் என்று கூறும் முன்னாள் எம்.பி. உண்மைகளை சொன்னால் எனக்குத்தான் பிரச்சனை என்று வெளிப்படையாகக் கூறிய பின்னரும், மூடிமறைக்கலாமா? கடவுள் ராமனுக்கு துரோகம் செய்யும் கூட்டம் தான் இராம பக்தர்களா? தெய்வ பக்தர்களா? இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்கள் நாத்திகர்களா?

ராமனை பெற்று, பேணி வளர்த்த தசரத மன்னனும் மாண்டு விட்டார். அவன் பெற்ற ராமனோ, குழந்தையாக இன்னும் அயோத்தி கோவிலில் வீற்றிருக்கின்றான். குழந்தைக்கு விவரம் தெரிய நியாயம் இல்லை. ஏனெனில், யாதும் அறியாத குழந்தை!

குழந்தையை கடவுளாக ஏற்று காணிக்கை வழங்கிய வள்ளல் பெருமக்களாவது தன் பகுத்தறிவைக் கொண்டு கணக்கு கேட்பார்களா?

கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் கூறுவார்

“தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லை” என்று.

முண்டாசு கவிஞன் பாரதி பொங்கி எழுந்து கூறினான்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button