தலையங்கம்

தங்கம் வாங்கக் கூடாதா?

தலையங்கம்

“தங்கம் வாங்குவதை நிறுத்தினால் பொருளாதார நெருக்கடி தீரும் என்று யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?” என்று பேசி கைதட்டுகளை அள்ளியவர் குஜராத் முதலமைச்சர் மோடி.

இன்று அவரே, “மேற்காசிய நெருக்கடியால், பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இந்தியாவை வலுப்படுத்த இனி தங்கம் வாங்காதீர்கள்” என்று மக்களை வலியுறுத்துகிறார்.

“கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்து விட்டது, அதிக எரிபொருளை செலவழிக்காதீர்கள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள், ஓராண்டு வெளிநாட்டுக்கு செல்லாதீர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள், விவசாயிகள் உரப் பயன்பாட்டைக் குறைத்து இயற்கை உரம் இடுங்கள், இதையெல்லாம் செய்தால்தான் 2047ல் வளர்ந்த இந்தியாவை (விக்ஸித் பாரத்) நாம் பார்க்க முடியும்” என்று அறிவுரை தந்துள்ளார் மோடி.

2008ல் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தபோது, இந்தியாவில் பெட்ரோல் விலை 51 ரூபாய் தான் என்பது மோடிக்கு தெரியாதா? கச்சா எண்ணெய் விலை 42 டாலராக இறங்கிய போது, இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைய விடாமல், வரிபோட்டு உயர்த்தியதும் இதே மோடி அரசுதான்.

வீட்டில் இருந்து வேலை பாருங்கள் என்று பணியாளரிடம் எதற்கு மோடி சொல்கிறார், முதலாளிகளுக்கு அல்லவா உத்தரவிட வேண்டும்?

ரஷ்யாவும், ஈரானும் நமக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொடுத்து வந்தன. அதிலும் கச்சா எண்ணெய் விலையை டாலராக செலுத்த வேண்டியது இல்லை என்றும், ரூபாயாக செலுத்தினால் போதும் என்றும் ஒப்புக்கொண்டன.

டாலர் வழியாக வணிகம் நடைபெறாததால் அமெரிக்காவுக்கு கிடைக்கும் லாபம் பறிபோவதைக் கண்டு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீதான வரியை 50 சதவீதம் வரை உயர்த்துவதாக ட்ரம்ப் மிரட்டினார். மறுபேச்சின்றி அடிபணிந்து ஈரான், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினார் மோடி.

மேலும், குறைந்த விலையில் ரஷ்யாவில் இருந்து வாங்கிய கச்சா எண்ணெயைக் கூட, அதன் மூலம் இந்திய மக்கள் பயன்பெற விடாமல், ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தந்து, அம்பானியை பெரும் பணக்காரனாக்கினார் மோடி.

மிகப்பெரும் சந்தையை கொண்ட நாடு இந்தியா. அதனால் தான் அயல்நாடுகள் இந்தியாவுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதில் அதிக விருப்பம் காட்டுகின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வெறும் ஏற்றுமதியை மட்டுமே நம்பாமல் உள்நாட்டிலேயே விற்பனை செய்வதற்கான சந்தை நமக்கு இருக்கிறது.

ஆனால், மோடியின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கையின் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் தாண்டவம் ஆடுகிறது. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசிக்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருளுக்கு, கட்டுபடியான விலை கிடைக்காமல், விவசாய வேலைகள் குறைந்து, 100 நாள் வேலை திட்டமும் நிறுத்தப்பட்டு, கிராமப்புற பொருளாதாரம் நசிந்து கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய அடாவடிச் செயல்களால், சிறு குறு நடுத்தரத் தொழில்கள் சரிபாதிக்கும் மேல் மூடப்பட்டு விட்டன. அவற்றில் பணிபுரிந்த கோடிக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.

மக்கள் கையில் பணம் குறைந்து வாங்கும் சக்தி இழந்ததால், இந்தியாவுக்குள் உற்பத்தியாகும் பொருள்களை வாங்க ஆளில்லாமல் சந்தையில் தேங்கிக் கிடக்கின்றன. பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான குடும்பங்கள் சேர்த்து வைத்த சேமிப்புத் தொகைகள் கரைந்து விட்டன என்பதை ரிசர்வ் வங்கி ஒப்புக் கொள்கிறது. இந்த நெருக்கடியிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சலுகைகளை எள்முனையளவும் குறைப்பதற்கு மோடி தயாராக இல்லை.

கார்ப்பரேட்டுகளுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி பிரம்மாண்டமாக அதிகரித்துவிட்டது. ஏற்கனவே நசுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களிடம், இன்னும் நசுங்குங்கள் என்று வெட்கமில்லாமல் அறிவுரைக்கிறார் மோடி.

மாற்று எரிபொருளுக்கான திட்டங்களை மோடியின் அரசு விரிவுபடுத்தவில்லை. ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்று விளம்பரச் சத்தம் கேட்கும் அளவுக்கு, இந்தியத் தொழில்களும் உற்பத்தியும் விரிவுபடுத்தப்படவில்லை.

சர்வதேசச் சந்தையில் ரூபாயின் மதிப்பு மிக வேகமாக விழுந்து கொண்டே இருக்கிறது. அயல்நாடுகளுக்கு தர வேண்டிய கடனையும் வட்டியையும் இது உயர்த்துகிறது. நமது ஏற்றுமதிகளையும் மதிப்பிழக்கச் செய்கிறது.

மோடி அரசின், உள் முரண்பாடுகள் நிறைந்த கொள்கைகளாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் இந்தியப் பொருளாதாரம் அழிந்து கொண்டிருக்கிறது. அதை மறைக்க, மோடி மேற்காசிய போரை காட்டுகிறார். ஆடத் தெரியாத ஆரணங்கு, தெரு கோணல் என்றாராம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button