தலையங்கம்

வணிக எரிவாயு விலை உயர்வு

ஜனசக்தி தலையங்கம்

வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி எரிவாயு விலை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதிலும் இப்போது ஒரே தடவையில் ரூ.1739லிருந்து ரூ.3527ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதைப்பற்றி பாஜக தலைவர்கள் பேசும் போது, ஈரான் போர் காரணமாக உலகமெங்கும் எரிவாயு எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஈரானுடன் பேசி இந்தியாவுக்கான எரிவாயு, எண்ணெய்க் கப்பல்களை அனுமதிக்குமாறு ஒப்புதல் பெற்றிருக்கிறோம்.

வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையை அப்படியே வைத்துக் கொண்டு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையைத்தான் உயர்த்தி இருக்கிறோம். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மானியம் தருகிறோம். எங்களைப் பாராட்டக் கூட வேண்டாம், ஏன் குழப்பம் ஏற்படுத்துகிறீர்கள், தீய எண்ணத்தை விதைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சிகளை பார்த்து குமுறித் தீர்த்து இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் பேசுவதற்கும் உண்மைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஈரானோடு பேசி உடன்பாடு கண்டதாக எந்த ஆதாரமும் இல்லை.‌

உலகத்திலேயே இந்தியாவில்தான் எரிவாயு விலை குறைவாக இருக்கிறது. ஜெர்மனியில் ரூ.1600 அமெரிக்காவில் ரூ.2000 என்று பாஜக பேசுவது கேலிக்கூத்தாகும். இந்தியர்களின் சராசரி வருவாயை விட ஜெர்மனியில் 14 மடங்கும், அமெரிக்காவில் 18 மடங்கும் அதிகச் சம்பளம் கிடைக்கிறது.

2012ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மானிய விலையில் 6 சிலிண்டர்கள் மட்டுமே வீட்டுப் பயன்பாட்டிற்கு கொடுக்கலாம் என உச்சவரம்பு விதித்தது.

அப்போது பாஜக குதியாய்க் குதித்தது. தமிழிசை சௌந்தர்ராஜனில் தொடங்கி, ஸ்மிருதி இரானி வரை தெருவுக்கு சிலிண்டர்களோடு வந்து, ஒப்பாரி வைத்தார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான நிர்வாகத்தால் குடும்பப் பொருளாதாரம் சீரழிந்து போனது என்று கண்டித்தார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு, மானிய விலையில் சிலிண்டர் தருவதற்கு பதிலாக, முழு விலையைக் கொடுத்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், மானியத்தை அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பி விடுவதாகவும், 2015ல் அறிவித்தது. 410 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை 570ஆக உடனடியாக உயர்த்தப்பட்டது.

ஆனால் சிலிண்டரின் விலை உயர்ந்து கொண்டே சென்று, 1100 ரூபாயைத் தொட்டது. சில மாதங்களுக்கு வங்கி வழியாக மானியத் தொகை படிப்படியாக குறைந்து இப்போது வெறும் 24 ரூபாயாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, உலகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 140 டாலர் என்று உச்சத்தில் இருந்தது. ஆனால் அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை 51 ரூபாய் தான். வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 304 ரூபாயாகவும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 658 ரூபாயாகவும் இருந்தது.

2014க்குப் பிறகு கச்சா எண்ணையின் விலை வெகு வேகமாகக் குறையத் தொடங்கியது 140 டாலர்களில் இருந்து 42 டாலராக விலை கீழே விழுந்தாலும், அதன் பயனை பாஜக அரசு மக்களுக்குக் கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்ந்து கொண்டே வந்தது.

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு மக்களைப் பாதிக்காது என்று பாஜக பேசுவது பெரும் ஏமாற்று வித்தை! ஹோட்டல்கள் டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. டீ, வடை விலைகள் உயர்த்தப்பட்டு விட்டன. எரிவாயுவைப் பயன்படுத்தும் தொழில்கள் முடங்கி, வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிறு தொழில்கள், பேக்கரி, ஹோட்டல், கேட்டரிங், ஸ்வீட் கடைகள் எல்லாம் வணிக எல்பிஜி-யில் தான் இயங்குகின்றன.

இட்லி, தோசை, சாப்பாடு விலை உயர்ந்து விட்டது. பொருட்களின் விலை உயர்வால், பொதுமக்களின் செலவு அதிகரிக்கிறது.

தினக்கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். வணிக சிலிண்டர்கள் தான் விலை ஏறியது, மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று பாஜக பிதற்றுவது, மக்களை ஒரு பொருட்டாகவே கருதாத, குழப்புகிற தீய எண்ணம் கொண்ட செயலாகும்.

சாதாரண மக்களின் வாழ்க்கையை பாஜக முடக்கிப் போடுகிறது. ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்தின் மீதும் நேரடியான தாக்குதல் தொடுக்கிறது. அதன் மக்களுக்கு விரோதமான, கார்ப்பரேட் ஆதரவு நிர்வாகத்தால் குடும்பங்களின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு விட்டது.

உடனடியாக விலைஉயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்கான மக்கள் இயக்கம் வலுப்பெற வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button