Uncategorizedகட்டுரைகள்

ஒன்றிய அரசின் கடன் 201.17 லட்சம் கோடி ரூபாய்! யாருடைய நலனுக்காக வாங்கப்பட்ட கடன்? அதன் சுமை யார் மீது?

ம.இராதாகிருஷ்ணன்

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது.

அந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் 10 லட்சம் கோடி ரூபாய். தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் கடன் 3.18 லட்சம் கோடி ரூபாய். இவை இரண்டையும் சேர்த்து மொத்தக் கடன் பொறுப்பு 13.18 லட்சம் கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 1,28,934 ரூபாய் கடன் சுமை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை முன்வைத்து மாநில அரசின் நிதி நிர்வாகம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், தற்போது மாநிலங்களவையில் ஒன்றிய அரசே வெளியிட்டுள்ள தகவல்கள் நாட்டின் நிதிநிலை குறித்து இன்னும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

ஒன்றிய அரசின் பதிலின்படி, 2025–26 நிதியாண்டில் ஒன்றிய அரசின் மொத்தக் கடன் ரூ.201.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் உள்நாட்டுக் கடன் மட்டும் ரூ.173.55 லட்சம் கோடி. மேலும், ஒன்றிய அரசின் கடன்–மொத்த உள்நாட்டு உற்பத்தி (Debt–GDP) விகிதம் 58.2 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டில் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.12.43 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2020–21 முதல் 2025-–26 வரை ஆறு நிதியாண்டுகளில் வட்டி மற்றும் அசல் கடன் திருப்பிச் செலுத்துவதற்காக மட்டும் ரூ.81.17 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.58.37 லட்சம் கோடி வட்டியாகவும், ரூ.22.80 லட்சம் கோடி அசல் கடனைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களை கடந்த ஒரு பத்தாண்டு காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கடன் சுமை எவ்வளவு வேகமாக உயர்ந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது ஒன்றிய அரசின் மொத்தக் கடன் சுமார் ரூ.64.11 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.201.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த 11 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் கடன் சுமார் 213 சதவீதம், மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில், ஆண்டுதோறும் செலுத்தப்படும் வட்டித் தொகையும் ரூ.4.02 லட்சம் கோடியில் இருந்து ரூ.12.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடனின் அளவு மட்டுமல்ல; அதன் நிதிச் சுமையும் வேகமாக அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் வெறும் கணக்குகள் அல்ல. நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் திசையைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான குறியீடுகள் ஆகும்.

மாநிலங்களின் கடன், அதன் மொத்த உற்பத்தியில் சுமார் 30 சதவீத அளவுக்குள் இருக்க வேண்டும் என்ற இலக்கை ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநிலங்களின் கடன் வாங்கும் திறனையும் பல்வேறு நிபந்தனைகள் மூலம் கட்டுப்படுத்துகிறது. ஆனால், அதே ஒன்றிய அரசு, நாட்டின் மொத்த உற்பத்தியில் கடன் விகிதம் 58.2 சதவீதமாக உள்ளது. அதாவது மாநிலங்களுக்கு ஒரு நிதி ஒழுங்கு; ஒன்றிய அரசுக்கு வேறொரு நிதி ஒழுங்கா?

2025–26ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூ.22.27 லட்சம் கோடி. ஜிஎஸடி என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அனைவரும் செலுத்தும் மறைமுக வரியாகும். வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் செலுத்துவதால், அதன் சுமையை அதிகமாகச் சுமப்பவர்கள் சாதாரண மக்கள் மற்றும் உழைக்கும் மக்களே.

இந்த நிலையில் 2025-26 ஆம் ஆண்டில் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.12.43 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை மொத்த ஜிஎஸ்டி வசூலில் 56 சதவீதத்திற்கும் அதிகம் என்ற நிலையில் நாட்டின் மிகப்பெரிய வரி வருவாயுடன் ஒப்பிடும்போதும், வட்டிச் சுமையின் அளவு எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஒருபுறம் மக்களிடமிருந்து வரிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மறுபுறம் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் விற்கப்படுகின்றன. தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், மின்வலையமைப்பு உள்ளிட்ட பொதுச் சொத்துகள் தனியார் நிறுவனங்களிடம் நீண்டகால அடிப்படையில் ஒப்படைக்கப்படுகின்றன. பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. வங்கிகளில் பெருநிறுவனங்களின் வாராக்கடன்கள் இலட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

எனவே, உழைக்கும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணமும், மக்களின் பெயரில் பெறப்படும் கடனும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் அளவில்லாமல் வாங்கிவைத்துள்ள கடனுக்கான வட்டிக்கும்தான் போய்ச் சேருகிறது.

இதன் விளைவுகளையே இன்று மாணவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காகவும், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகவும், விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காகவும், பெண்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காகவும், தொழிலாளர்கள் தனியார்மயமாக்கல் மற்றும் உரிமைப் பறிப்புக்கு எதிராகவும் நடத்தும் போராட்டங்களில் காண முடிகிறது.

இவை தனித்தனியான பிரச்சினைகள் அல்ல. மக்களின் தேவைகளைவிட பெரு மூலதனத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் சமூக விளைவுகளாகவே அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களிடம் பெரும் செல்வத்தை வசூலித்து கார்ப்பரேட்டுகளுக்குத் தருவதா அரசின் வேலை என்ற கேள்விக்குத் தெளிவான பதிலளிக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. அதேநேரத்தில் இந்தக் கேள்விகளுக்கான பதிலை ஜனநாயக வழியில் தீர்மானிக்கும் அதிகாரமும், தங்களுக்கான அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் மக்களிடமே உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button