
மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா? என்ற வினாவிற்கு உரிய விடை காண வேண்டும்.
12 ஆண்டுகால மோடியின் ஆட்சி- மக்களுக்கானது அல்ல.
2014ல் தொடங்கி இன்று வரை அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள மோடி நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து, அலட்சியப்படுத்தி வருகின்றார்.
அண்டை நாட்டின் மீது படையெடுப்பது போன்று, சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக போர் நடத்தி வருகின்றார்.
“நாடு முன்னேற்ற பாதையில் மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றது, எந்த ஆட்சியும் மேற்கொள்ளாத (வாஜ்பாய் ஆட்சி உட்பட) சாதனைகளை சாதித்து வருகின்றோம். நாடு வல்லரசாக போகின்றது. நாட்டின் வளர்ச்சியை ஏற்காத, விரும்பாத கட்சிகள் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு, அரசுக்கு எதிராக எதிர்ப் பரப்புரை செய்கின்றார்கள்” இவ்வாறாக மோடி மட்டுமல்ல அவரது அமைச்சரவை சகாக்கள், பாஜக, அகில இந்திய மாநிலத் தலைவர்கள் மட்டுமின்றி எந்த பொறுப்பிலும் இல்லாத சங்கிகளும் ஒருமித்த குரலாகப் பேசி வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதனை உண்மையாக்கி தங்களை, தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
பொய் நிலைக்கும்- உண்மைகள் வெளிவராது என்று நம்புகின்றார்கள்- செயல்படுகின்றார்கள்.
அத்தகைய பொய் மூட்டைகளை டன் கணக்கில் சுமந்து கொண்டு, தங்களின் ஆட்சியைக் காட்டிலும் வேறொரு சிறந்த ஆட்சி இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இல்லை என்று எவ்வித கூச்சமும் இன்றி உரக்க பேசி வருகின்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் எண்ணிலடங்காத துணை அமைப்புகள், பாஜக ஆகியன அச்சு, காட்சி ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் திறம்பட பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் கோடிகளை தங்கு தடை இன்றி செலவழித்து வருகின்றனர்.
தாங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எத்தகைய வாக்குறுதிகளையும் வாரி வழங்குவார்கள். 2014ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திருவாளர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தியது.
இவர் எந்த அகில இந்திய தலைமைப் பொறுப்பிலும் இல்லாதவர்.
தலைமைப் பொறுப்பில் பாஜகவில் இருந்து பிரகாசித்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்காரி, ராம்நாத் போன்றவர்களை ஓரங்கட்டி, மோடிக்கு வாய்ப்பளிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்- குஜராத் மாநில முதலமைச்சர் என்பதனைக் காட்டிலும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் – அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய பெருமக்களை கொன்றொழித்து இஸ்லாமியர்களை ‘இந்துக்களின் விரோதிகள்!’ என்ற பரப்புரையை மிக வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்தார் என்பதனைப் பாராட்டி ஆர்.எஸ்.எஸ். வழங்கிய சன்மானம்தான் பிரதமர் வேட்பாளர்.
பிரதமர் வேட்பாளர் ஆன நரேந்திர மோடியார் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை தங்கு தடையின்றி வாரி வழங்கினார்.
அவற்றுள் மிக முக்கியமான வாக்குறுதிகள்
1. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை
2. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டு, ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும்.
3. விவசாயிகள் இன்னல் போக்க, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை ஏற்று, விவசாய விலை பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும்.
இம்மூன்று வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டனவா எனில், இல்லை என்பது எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரியும்.
நீட் நுழைவுத் தேர்வு என்கிற பெயரால் மாணவர்களை- மாணவிகளை அச்சமூட்டி தற்கொலைக்கு (கொலை) தள்ளியது ஏற்புடையதா?
வினாத்தாள் கசிவு- பெரும் ஊழல்- இவைகளுக்கு எதிராக போராடிய மாணவர்களை- இளைஞர்களை கொடூரமாக தாக்கியது நேர்மையான செயலா? ஆளுயரத் தடிக்கம்புகளில் ஆணிகளை அடித்து அதனைக் கொண்டு தாக்கியது நேர்மையா? தண்ணீரைப் பீய்ச்சியடித்தது என்ன வகை நேர்மை? பெல்லட் குண்டுகளைக் கொண்டு தாக்கியது கொடூரக் குற்றமில்லையா? சீருடை அணியாத நபர்களைக் கொண்டு பேரணியில் தாக்கச் செய்தது யார்? அவர்கள் காவலர்களா? அல்லது ஆர்.எஸ்.எஸ். குண்டர்களா? இத்தகைய அநியாய அட்டூழியங்கள் நடந்ததற்கு யார் பொறுப்பு? அரசின் பொறுப்பில் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணைகளுக்கு இணங்கி செயல்படுத்தப்பட்டதா? அல்லது உள்துறை அமைச்சரும் பிரதமரும் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார்களா?
அரசு காவல்துறை மூலம் மேற்கொண்ட கொடிய வன்முறையை தாக்குதலை அனைத்து அரசியல் கட்சிகள்- அமைப்புகள்- ஊடகங்கள் என அனைவரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
வன்முறை குறித்து, நேர்மையான அரசாக மோடி அரசு இருக்குமேயானால் உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணையை நடத்தி தீர்வு காணலாமே! மோடி அரசு அதற்கு தயாரா?
வேலையின்மையால் அவதிப்படுவது மட்டுமல்ல, நமது இளைஞர்கள் அவமானப் படுத்தப்படுகின்றனர் – என்றும், எதற்கும் ஆகாத தறுதலை என்றும், ஊர் சுற்றி என்றும், பொறுப்பற்றவன் என்றெல்லாம் அவமானத்திற்கு ஆட்பட்டுள்ள இளைய தலைமுறையை காக்க அரசு என்ன செய்யப் போகின்றது?
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22. அம்மொழிகள் அனைத்தும் வளர்க்கப்பட வேண்டாமா? அது என்ன சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் மட்டும் சலுகைகள்? ஏன் இந்தப் பாரபட்சம்?
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி ஆகும். ஆனால், ஒன்றிய மோடி அரசு தங்களது கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதி – ஏன் இந்தப் பாரபட்சம்?
விலைவாசி உயர்ந்து கொண்டே போகின்றது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்கின்றன – உயர்ந்து வருகின்றன. கட்டுப்படுத்த வேண்டாமா?
வேலை இல்லை- வருமானத்திற்கு வழி இல்லை- வேலை பார்ப்பவர்கள் பெறும் ஊதியம் இருந்த நிலையிலேயே உள்ளது- விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே போகும் என்றால் மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக மாட்டார்களா? அம்மக்களை காப்பது யார்?
நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் கௌரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தெளிவாகவும் உறுதிப்படவும் கூறுவது நமது அரசியல் அமைப்புச் சட்டம்.
அத்தகைய கௌரவமான வாழ்க்கை இல்லாமல் இல்லை- அதானி, அம்பானி போன்ற நபர்களுக்கு இருக்கின்றது. மக்களுக்கு இருக்கின்றதா? மக்களுக்காக அரசா, அரசுக்காக மக்களா?
விடை காண வேண்டாமா? யாரிடத்தில் விடை காண்பது?
நாட்டில் நடைபெறும் ஒன்றிய ஆட்சி – மோடி ஆட்சி – மூர்க்கத்தனமான ஆட்சி – மக்கள் விரோத ஆட்சி- ஜனநாயகத்தை அவமதிக்கும் ஆட்சி – சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி – இத்தகைய ஓர் அராஜகம் பிடித்த ஒன்றிய அரசு குறித்து நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டாமா?
விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இவர்கள்தானே மக்கள் – இவர்களுக்கு மோடி ஆட்சியின் அலங்கோலமான அருவருக்கத்தக்க முகத்தை தெரியப்படுத்த வேண்டாமா?
நல்லவர்கள் போன்று தேச பக்தர்கள் வேடமிட்டு நடித்துக் கொண்டிருக்கும் நடிப்புச் சுதேசிகளை தோலுரித்துக் காட்ட வேண்டாமா?
விடுதலைப் போர்க்களத்தில் முன்னத்தி ஏரா(றா)க வீரநடை போட்ட மாவீரர்களின் வாரிசுகள் அல்லவா நாம்!
இரண்டாம் சுதந்திரப் போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம் – ஜனநாயகத்தை காப்பாற்ற, நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற!
அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கித் தரப்பட்டுள்ள தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக சுயேச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்திட களம் காண்கின்றோம்.
ஆகஸ்ட் 6ஆம் நாள் துவங்கி ஆகஸ்ட் 15ஆம் நாள் முடிய மக்களை சந்திக்கும் மகத்தான இயக்கம்.
நம் ஊரில் மட்டுமல்ல, நமது வட்டாரத்தில் மட்டுமல்ல, நமது மாவட்டத்தில், மாநிலத்தில் மட்டுமல்ல- நாடு தழுவிய பேரியக்கத்தில் பங்கேற்போம்.
மக்களைச் சந்திப்போம்- அச்சந்திப்பின் மூலமாக நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அத்தகைய விழிப்புணர்வுதான் நாட்டில் மாற்றத்தை உருவாக்கும்!
மக்களிடத்தில் ஏற்படும் மாற்றம்தான் மோடி ஆட்சியை அகற்றும்!
புதிய மாற்றம், உண்மையான மாற்றம் – மக்களுக்கான மாற்றம் ஏற்பட வழி வகை காணும்!
குக்கிராமத்திலும், நகர்ப்புறங்களிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து, அதன் நிறைவாக செப்டம்பர் திங்கள் முதல் நாள் தலைநகர் டெல்லி நோக்கி அணி வகுப்போம்!
செங்கொடி இயக்கத்தின் போராளிகள் தலைநகர் டெல்லியில் சங்கமிக்கும் நாள்தான் செப்டம்பர் முதல் நாள் – தலைநகர் டெல்லி மாநகரம் செப்டம்பர் முதல் நாளில் செம்மையாகட்டும்!
எங்கெங்கு காணினும் செங்கொடி மயமாகட்டும்!
டெல்லி சிவந்தது!
அத்தகைய சிவப்பின் மூலம் மூர்க்கத்தனமான மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுத தொடங்கி விட்டது செம்படை – ஊரும், உலகும் அறியட்டும்!
திருட்டுத்தனமும்- தில்லுமுல்லுகளும் நிறைந்த மோடியின் ஆட்சியின் அவலங்களை- அலங்கோலங்களை நாட்டு மக்கள் நன்கு அறியட்டும்.
வருகுது பார், வருகுது பார், செம்படை வருகுது பார்- வந்து விட்டது பார் என பார்போற்றும் பெரும் பேரணி!
லட்சக்கணக்கான மக்கள் – ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், மாணவர்களும் – பெரும் பேரணியாக பங்கேற்று போர் முழக்கம் எழுப்பிடுவோம்!
நாம் எழுப்பும் முழக்கம் நாட்டின் எட்டு திசையிலும் எதிரொலிக்கட்டும்!
மாற்றத்திற்கான போர் ஒலியாக- போர்ப்பரணி பாடிட- போர்க்களம் காண ஆயத்தமாவீர்!
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கொண்டு கரைந்து போய்விட்டது கம்யூனிஸ்ட் கட்சி என்கிற அர்த்தமற்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டாமா?
எம் படையினைப் பார்! சுயநலமற்ற படையைப் பார்! நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற, போர்க்குணம் பெற்ற, புரட்சிப் படையைப் பார்!
இனி ஒரு விதி செய்வோம், அதனை எந்நாளும் காப்போம் என புதிய விதியை உருவாக்க- புதிய சமூகத்தை உருவாக்க- முதலாளித்துவ சமூக அமைப்பை தகர்த்தெறிந்து, பொதுவுடமை சமுதாயம் படைத்திட பொங்கி எழுந்த பெருங்கூட்டம்.
அச்சுறுத்தல்- அடக்குமுறை- ஒடுக்குமுறை என எதனையும் கண்டு அஞ்சிடாத, சிங்கங்கள் எங்கள் படை – கம்யூனிஸ்ட் படை, பெரும் படை- போர்குணமிக்க படை- காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து, புற்றீசல்போல் புறப்பட்ட பெரும்படையாய் அணி வகுப்போம்.
ஒன்றாய், பத்தாய், நூறாய், ஆயிரமாய் – லட்சமாய் என லட்சக்கணக்கில் அணிவகுப்போம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
வெல்லற்கரிய தத்துவம்- வென்று காட்டும் பெரும் படை!
ஒவ்வொரு தோழரும் கரங்களில் செங்கொடி ஏந்தி, முஷ்ட்டி உயர்த்தி எழுப்பும் முழக்கம் -நாட்டுக்கானது -நாட்டு மக்களுக்கானது.