வரலாறு

மே தினம்: தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம்

டி. ராஜா

மே தினம் ஒரு சடங்கு, சம்பிரதாயம் அல்ல. அது போராட்டம், தியாகம் மற்றும் உழைப்பின் மரியாதைக்கான, இன்னும் நிறைவு பெறாத போரின் உயிரோட்டமுள்ள நினைவு. இது, எதிர்ப்பில் தோன்றி ரத்தத்தில் தோய்ந்தது.

சிகாகோவில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹேமார்க்கெட் சம்பவத்தில், எட்டு மணி வேலை நாளுக்கான ஒருமித்த கோரிக்கையுடன் தொழிலாளர்கள் எழுந்தனர். 1886 மே மாதத்தில், அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அடக்குமுறையால் எதிர்கொள்ளப்பட்டனர். மே 4 அன்று ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற அமைதியான கூட்டம் தாக்கப்பட்டது; வன்முறை வெடித்தது; அரசு கடுமையான ஒடுக்குமுறையைத் தொடங்கியது. தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, பொய்யான குற்றச்சாட்டுகளில் விசாரிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களின் தியாகம் ஒரு உள்ளூர் போராட்டத்தை உலகளாவிய சின்னமாக மாற்றியது. மே தினம் கொண்டாட்டமாக அல்ல, சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பிலிருந்தே பிறந்தது.

அந்த கோரிக்கை எளிமையான தாயிருந்தாலும் புரட்சிகரமானது. எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு,‌ மீதி எட்டு மணி நேரம் சமூக தொடர்புகளுக்கானது. எல்லையற்ற மணி நேரம் வேலை வாங்கி உபரி மதிப்பைச் சுரண்டும் மூலதன வாதத்துக்கு எதிராக, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தின் சாராம்சத்தை எடுத்துரைத்தது.

கார்ல் மார்க்ஸ் விளக்கியபடி, வேலைநேரத்தை நீட்டித்தலும், உழைப்பை தீவிரப்படுத்தலும் மூலதனவாதத்தின் லாபத்தை அதிகரிக்கும் அடிப்படையாகும். எனவே வேலை நேரத்தை கட்டுப்படுத்தும் போராட்டம் வெறும் பொருளாதாரப் போராட்டம் மட்டுமல்ல; அது அரசியல் போராட்டமாகும். அது மூலதனத்தின் அடிப்படைக்கு எதிரான சவாலாகும்.

இதனால் மே தினம் உலகளாவிய தொழிலாளர் ஒற்றுமையின் நாளாக மாறியது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தங்களது போராட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை உணர்ந்தனர். மே தினத்தை தொழிலாளர் தினமாக நிறுவியது தன்னேற்பான தொழிலாளர் சர்வதேசவாதத்தின் வெளிப்பாடாகும். சோவியத் ஒன்றியம் மே தினத்தை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்தது. இதன் மூலம் வரலாற்றை உருவாக்குவது உழைப்பே என்று அங்கீகரித்தது.

சமூகத்தில் உழைப்பு ஒரு பண்டமாக அல்ல, சமுதாயத்தின் அடித்தளமாகக் கருதப்பட்டது. மே தினம், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை குறிக்கிறது.

இந்தியாவில் தொழிலாளர் உரிமைகளின் வரலாறு தெருக்களில் நின்று களம் கண்ட போராட்டங்களிலும், சட்ட ரீதியான தலையீடுகளிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒருங்கிணைந்த, போராட்ட மனப்பான்மையுள்ள தொழிலாளர் இயக்கம் காலனித்துவ ஆட்சிக்குள்ளேயே கூட உரிமைகளை வென்றெடுத்தது.

புதுச்சேரியில், அப்போது பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்குள் இருந்தபோது, வ. சுப்பையாவின் தலைமையிலான போராட்டம் தென் ஆசியாவில் எட்டு மணி வேலை நாளை நடைமுறைப்படுத்திய ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. இது அரசின் சலுகையாக கிடைக்கவில்லை; நீண்டகால போராட்டம், வேலைநிறுத்தம் மற்றும் அரசியல் அழுத்தம் மூலம் வென்றெடுக்கப்பட்டது. புரட்சிகர மாற்றங்களால் உரிமைகள் எவ்வாறு பெறப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.

இந்தியாவில் மே தினம் தனித்துவமான போராட்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 1923ஆம் ஆண்டு சென்னையில் சிங்காரவேலரால், முதல் மே தினக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இது வெறும் சின்னமாக இருந்ததல்ல; இந்திய தொழிலாளர்களை உலகளாவிய இயக்கத்துடன் இணைக்கும் முயற்சியாகவும், உள்ளூர் போராட்டங்களை உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக அமைக்கும் முயற்சியாகவும் இருந்தது.

தேசிய மட்டத்தில், ஆட்சியில் தலையீட்டின் மூலம் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன. வைஸ்ராய் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் உறுப்பினராக இருந்த பி. ஆர். அம்பேத்கர் தொழிலாளர் பாதுகாப்புகளை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா முழுவதும் எட்டு மணி வேலை நாளை அறிமுகப்படுத்தினார்; மகப்பேறு கால நலன்களை விரிவுபடுத்தினார்; சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அடித்தளத்தை அமைத்தார். இவை தனித்தனி சீர்திருத்தங்கள் அல்ல; தொழிலாளர் இயக்கத்தின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவுகளாகும். வீதிகளில் நிகழ்த்தப்பட்ட போராட்டங்களும், அரசு நிறுவிய அமைப்புகளில் பிரதிநிதித்துவமும் ஒன்றோடொன்று இணைந்து இந்திய தொழிலாளர் உரிமைகளின் பாதையை வடிவமைத்தன.

உரிமைகள் எவராலும் தரப்படுவதில்லை; அவை போராடி வெல்லப்பட வேண்டும், அவை பாதுகாக்கப்படவும் வேண்டும்.

இன்று அந்த பாதுகாப்பே கடுமையான அச்சுறுத்தலுக்குள் உள்ளது. இந்திய தொழிலாளர்கள் இரட்டை சவால்களை எதிர்கொள்கிறார்கள். முதல் சவால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியின் தாக்குதல். சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், கடின உழைப்பால் பெற்ற உரிமைகளைபா பலவீனப்படுத்துகின்றன. இவை கூட்டுப் பேரத்துக்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன; தொழிற்சங்கங்களை அமைப்பதையும், நிலை நிறுத்துவதையும் கடினமாக்குகின்றன; நிரந்தர தொழிலாளர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை விரிவுபடுத்துகின்றன; நினைத்த நேரத்தில் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை எளிதாக்குகின்றன. அதிகாரம் நிர்வாகத்தின் கைகளில் மையப்படுத்தப்படுகிறது; தொழிற்சாலை ஆய்வுகள் குறைக்கப்படுகின்றன; மூலதனத்திற்கு சாதகமாக சமநிலை மாற்றப்படுகிறது.

இதனுடன் இணைந்து தொழிலாளர்களை மத அடிப்படையில் பிரிப்பதற்கான திட்டமிட்ட முயற்சியும் நடைபெறுகிறது. வர்க்க ஒற்றுமை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது; அதனால் மத வெறி ஊக்குவிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மதம் மற்றும் அடையாளத்தின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தப்படுகிறார்கள். தொழிலாளர்கள் சங்கமாக சேர்வதும், மூலதனத்தை எதிர்த்து கேள்வி கேட்பதும் குற்றமாக்கப்படுகிறது.

நொய்டா போன்ற தொழிற்சாலை மையங்களில் தொழிலாளர் போராட்டங்கள், அரசாங்கத்தின் காவல்துறை தலையிட்டால் மிரட்டி, கொடுக்கப்படுகின்றன. அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுகிறது. அரசின் பேச்சு வெளிப்படையாகவே விழாவிற்கு விரோதமாக அமைகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மே தினத்துக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுத்தது ஒழுங்கமைந்த தொழிலாளர் இயக்கத்தின் மீது உள்ள அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய கருத்துக்கள் தனிப்பட்டவை அல்ல; தொழிற்சங்கங்களை குற்றமாக்கி, தொழிலாளர் கோரிக்கைகளை ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக காட்டும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தொழிலாளர்களும் கடுமையான விலை உயர்வு, சம்பளம் பல ஆண்டுகள் உயராத தேக்க நிலை, இதனால் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல் ஆகிய மோசமான எதிர்விளைவுகளை எதிர் கொள்கிறார்கள்.

எல்பிஜி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் வேலை இழந்த புலம்பெயர்ந்து தொழிலாளர்கள், பாதுகாப்பில்லாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். செல்வத்தை உருவாக்குபவர்கள் தாங்களே நிலைத்தன்மையற்ற வாழ்க்கைக்கு தள்ளப்படும்போது, வளர்ச்சி என்ற வாக்குறுதி வெறும் வெற்றுச் சொற்களாக மாறுகிறது.

இரண்டாவது சவால் தானியங்கி முறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி ஆகிய தொழில்நுட்ப மாற்றத்திலிருந்து உருவாகிறது. பாரம்பரிய வேலைகள் மறைந்து வருகின்றன. ‘கிக்’ பொருளாதாரம் போன்ற பாதுகாப்பற்ற வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் மற்றும் கட்டுப்பாடற்ற வேலைகளில் தள்ளப்படுகின்றனர்.

இந்த மாற்றங்களுக்கு ஏற்ற தெளிவான கொள்கையை அரசு உருவாக்கவில்லை. வேலை இழப்புகள், திறன் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை.

கிராமப்புற நெருக்கடி தொழிலாளர்களை நகரங்களுக்குத் தள்ளுகிறது; அங்கு அவர்கள் பாதுகாப்பு இல்லாத துறைகளில் இணைக்கப்படுகின்றனர். இது சமூக நலனுக்கான தொழில்நுட்ப முன்னேற்றம் அல்ல; மூலதன நலனுக்காக பயன்படுத்தப்படும் மாற்றமாகும்.

இந்த இரட்டைச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தெளிவான அரசியல் சிந்தனையும், எதார்த்தமான செயல்பாடும் அமைய வேண்டியது அவசியமாகிறது. தொழிலாளர்கள் தனியாக இதை எதிர்கொள்ள முடியாது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒற்றுமை அவசியம். விவசாய நெருக்கடியும் தொழிலாளர் பாதுகாப்பின்மையும் ஒரே கொள்கை அமைப்பின் விளைவுகளாகும்.

இந்த நிலையில் மே தினம் அந்த ஒற்றுமையை மீட்டெடுக்க அழைக்கிறது. தொழிலாளர் வலிமை கூட்டுச் செயல்பாட்டில்தான் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. பொருளாதாரப் போராட்டங்களுடன் அரசியல் போராட்டங்களும் இணைந்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

சிகாகோ, சோவியத் ஒன்றியம், சிங்காரவேலர், வ.சுப்பையா, அம்பேத்கர் ஆகியோரின் பாரம்பரியம் வார்த்தைகளால் மட்டுமே நினைவுகூரப்பட வேண்டியதல்ல. அதை நடைமுறையில் முன்னெடுக்க வேண்டும்.

எட்டு மணி வேலை நாள், மகப்பேறு கால நலன், சமூகப் பாதுகாப்பு, அமைப்பதற்கான உரிமை, இவை அனைத்தும் கடுமையான போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டவை. போராட்டம் பலவீனமானால் இவை குறையக்கூடும்.

மே தினம் உழைப்பு ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. செல்வத்தை உருவாக்குபவர்கள் தங்கள் உழைப்பின் நிபந்தனைகளில் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

ஜனநாயகம், வாக்குச்சாவடியைத் தாண்டி வேலை இடங்களிலும் பொருளாதாரத்திலும் விரிய வேண்டும். அதிகரித்து வரும் சமத்துவமின்மை, ஆட்சித்துறை அதிகாரமயமாக்கல், வேகமான தொழில்நுட்ப மாற்றம் ஆகிய காலகட்டத்தில் மே தினத்தின் முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளது. முன்னேறும் பாதை ஒற்றுமை, தெளிவு மற்றும் துணிச்சலைத் தேடுகிறது. தொழிலாளர் வர்க்கம் பிளவுகளை மீறி, உரிமைகள் குறையச் செய்யும் முயற்சிகளை எதிர்த்து, நியாயமான சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் கண்ணோட்டத்தை முன்வைக்க வேண்டும்.

அதுவே மே தினத்தின் உள்ளார்ந்த உணர்வாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button