புதுச்சேரி ஜனநாயக திருவிழா. பணம் வென்றது. மக்கள் அரசியல் தோற்றது.
எல்லை சிவக்குமார், புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் முப்பது உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
நான்கு பிராந்தியத்திலும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 9,44,211. முன்னெப்போதும் இல்லாத வகையில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகின. முப்பது தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை 294.இவற்றில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். காரணம் இங்கு அரசியல் செல்வாக்கை விட தனிநபர் செல்வாக்குக்கு மவுசு அதிகம். ஒவ்வொரு தேர்தலிலும் சுயேட்சைகள் ஒரிரு இடங்களில் வெற்றி பெறுவதும் அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதும் வாடிக்கை. கடந்த தேர்தலில் நான்கு சுயேட்சைகள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
நீண்ட இழபறிகளுக்கு இடையில் பிஜேபி நிர்பந்தத்தால் கடந்த முறையைப் போல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையில் பிஜேபி, அதிமுக, இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சி பண பலத்துடன் புதியதாக இந்த கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
கடந்த ஜந்து ஆண்டு கால என்.ஆர்.காங்கிரஸ் பிஜேபி கூட்டணி அரசு மீது கடுமையான அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் தவறினர்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? என்பதில் காங்கிரஸ் திமுக கட்சிகளுக்கு இடையில் நிலவிய போட்டி காரணமாக கூட்டணியை ஒருங்கிணைத்து தொகுதி பங்கீடு சுமூகமாக பேசி தீர்வு காண்பதற்கு பதிலாக இரண்டு கட்சிகளும் காலம் கடத்தின.
திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அழைத்து பேசினர். அழைத்து பேசி உறுதியளித்தபடி தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை. சிபிஎம் அழைத்து பேச நாம் வலியுறுத்தியும் அவர்கள் அக்கறை காட்டவில்லை.
காங்கிரஸ் திமுக இரண்டு கட்சிகள் மட்டுமே தங்களுக்குள் பேசி காங்கிரஸ் 16 , திமுக 14 (இதில் சிபிஐ 1,விடுதலை சிறுத்தைகள் 1) என்று உடன்பாடு கண்டனர். ஆனால் நாம் வலியுறுத்திய தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். உழவர் கரை தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பிஜேபி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. காங்கிரஸ் வேட்பாளராக இந்த முறை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திமுக காலம் கடந்து அந்த தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவித்தது. திமுக போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரண்ட்லி கண்டெஸ்ட் என்று களம் கண்டனர்.
ஆக மொத்தத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி என்பது எண்ணெயில் கலந்த தண்ணீர் போல் ஒட்டாமல் இருந்து மறைமுகமாக ரங்கசாமி க்கு ம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் துணை நின்றது.
காங்கிரஸ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு இடங்கள் ஒன்றானது. திமுக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஆறு இடங்களில் ஒன்றை இழந்து தற்போது ஜந்தானது. தனது அரசியல் சுய லாபத்திற்காக கூட்டணியை சீர்குலைத்த காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் டெபாசிட் இழந்தார். திமுக மாநில அமைப்பாளர் சிவா படுதோல்வி அடைந்தார்.
திமுக காங்கிரஸ் கட்சிகளின் இந்த அரசியல் சித்து விளையாட்டு கடுவெளி சித்தரின் பாடல் வரிகளை நினைவூட்டுகிறது
நந்தவனத்தில் ஒர் ஆண்டி- அவன்
ஜந்தாம் மாயமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒர் தோண்டி
அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
என்பதாக அந்த பாடல் வரிகள் தொடரும்.
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா என்பது பகிரங்கமாக நடந்தது. தேர்தல் ஆணையம், காவல் துறை இதை தடுக்க முயற்சிக்கவில்லை. ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை வாக்கு ஒன்றிற்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் தமிழ் நாட்டில் இருந்து வந்த லாட்டரி மார்ட்டின் 10305 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மக்கள் நிலத்திட்டுக்களை அமுல்படுத்தி பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றவர் என்று சொல்லப்படுகின்ற ரங்கசாமி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றிற்கு ரூ.2500 வழங்கியுள்ளார். அவரது சார்பாக மங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த நபர்களை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்யும் நடவடிக்கை இல்லை.
முப்பது சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பிஜேபி 4 இடங்களிலும், லஜக ஒரு இடத்திலும், அதிமுக 1 இடத்திலும் என 18 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், தவெக இரண்டு இடங்களிலும், தவெக ஆதரவு மக்கள் இயக்கம் ஒரு இடத்திலும் மூன்று இடங்களில் என்.ஆர். ஆதரவு, பிஜேபி ஆதரவு, மாகேவில் சிபிஎம் ஆதரவு சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
30 உறுப்பினர்களில் 14 பேர் முதல் முறையாக சட்டமன்றத்தில் நுழைகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நில வணிகர்கள் (ரியல் எஸ்டேட்), மது பானம் விற்பனையாளர்கள், லாட்டரி அதிபர் என பணம் படைத்த பெரும் பண திமிங்கலங்கள். தேர்தலில் பல கோடி முதலீடு செய்துள்ள இவர்கள் மக்கள் நலன் குறித்து சிந்திப்பார்களா?
ஏற்கனவே கடந்த என்.ஆர். காங்கிரஸ் பிஜேபி கூட்டணி அரசு ஒன்றிய அரசின் திட்டங்களை அமுல்படுத்தி சோதிக்கும் சோதனை களமாக புதுச்சேரியை மாற்றியுள்ளது. ஏனாம் கோதாவரி ஆற்றின் கரைகள், காரைக்கால் துறைமுகம், மின் துறை ஆகியவை அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பணபலத்தாலும், அதிகார பலத்தாலும்,காங்கிரஸ் திமுக கட்சிகளின் போட்டி சுயநல அரசியலிலும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
எனவே எதிர்காலத்தில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை புதுச்சேரி மண்ணில் வலுவாக முன்னெடுத்து செல்ல கட்சி அமைப்பு நிலைகளை அரசியல் ரீதியாக ஸ்தாபன ரீதியாக வலுப்படுத்தி முன்னெடுத்து செல்லவும் சிபிஐ சிபிஎம் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிணைந்து மக்களுக்கான மாற்று அரசியலை முன்னெடுத்து செல்வதும் காலத்தின் கட்டாயம் ஆகும்.