தமிழகம்

நிதிக் கூட்டாட்சி எங்கே இருக்கிறது? பியூஸ்கோயல் பதிலளிப்பாரா?

டி.ராஜா சவால்

மாநிலங்களின் நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு பறித்து வருவதால், நிதிக் கூட்டாட்சி எங்கே இருக்கிறது திரு.பியூஸ் கோயல்? அதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க முடியுமா? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து டி.ராஜா 13.4.2026 அன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது வருமாறு:

இந்திய வரலாற்றில், தமிழக வரலாற்றில் இந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். இந்தியாவினுடைய பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமிய மதிப்புகள் காப்பாற்றப்பட வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் நெறிமுறைகள் காப்பாற்றப்பட வேண்டும். சமத்துவம், சமூகநீதிக் கொள்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்கான ஒரு தீவிரமான போராட்டத்தில் பாஜகவை, அதனுடன் கூட்டணி சேர்ந்திருப்பவர்களை வீழ்த்தி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர். நம்முடைய அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொழுது அம்பேத்கர் எதையெல்லாம் எச்சரித்தாரோ, அவற்றையெல்லாம் நாம் இப்பொழுது எதிர்கொண்டிருக்கிறோம்

அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல், ஒரு பேரிடர் இந்தியாவைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பேரிடர் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கியபொழுது இந்தியாவை ஒரு மதவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்தியாவை ஒரு இந்துத்துவ நாடாக, இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தனர்.

அம்பேத்கர் சொன்னார், “இந்திய நாடு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. இந்துத்துவா நாடாக இந்தியா மாறிவிட்டால், அதைவிடப் பேரிடர் இந்தியாவுக்கு எதுவுமில்லை” என்று எச்சரித்தவர் டாக்டர் அம்பேத்கர்.

அந்தப் பேரிடரை இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி இந்திய நாட்டை மதத்தின் பேரால், சாதியின் பேரால், மொழியின் பேரால் மக்களைப் பிளவுபடுத்தி கூறுபோட விரும்புகிறார்கள். இது முறியடிக்கப்பட வேண்டும். இந்திய நாடு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாகத்தான் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். இதைதான் இன்றைக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர், நம்முடைய அன்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாகத்தான் இந்தியா இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

ஆனால், பாஜகவிலிருந்து பிரதமர் மோடி, பியூஸ் கோயல் போன்ற பலர் இங்கே வந்து பேசுகின்றனர். தமிழ்நாடு பின்தங்கியிருக்கிறது என்று சொல்லுகின்றனர். மோடிக்கும், பியூஷ் கோயலுக்கும் நான் சவால் விடுக்கிறேன். எந்த தளத்தில் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது?

கல்வித்துறை என்று எடுத்துக்கொண்டால், இந்தியாவில் முன்வரிசையில் இருக்கிற மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக இருக்கிறது.

மருத்துவம் என்று சொன்னால், அந்தத் துறையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

மக்களுடைய குடியிருப்பு வசதிகள், மக்களுடைய வாழ்வாதார உரிமைகளில் முன்னணியில் இருக்கிற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இதை திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் அவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.

அதனால்தான் இந்திய நாடே போற்றுகிற, பாராட்டுகிற ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.

நாடு எதிர்கொண்டிருக்கிற பல்வேறு இடர்பாடுகளில் இருந்து நம்முடைய நாடு காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும்.

டாக்டர் அம்பேத்கரை நாம் போற்றுகிற இந்த நேரத்தில் டாக்டர் அம்பேத்கருடைய கருத்துகளை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்திய நாடு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒன்று, இந்தியாவை ஆளுகின்ற அரசு மக்கள் நலன் காக்கிற அரசாக இருக்க வேண்டும் என்பது மற்றொன்று.

அம்பேத்கர் எழுதுகிறார், “இந்திய குடிமக்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அவர்களுடைய வாழ்வாதாரங்களை உறுதி செய்கிற அரசுதான் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டவர்.

ஆனால், மோடியின் ஆட்சி எப்படி இருக்கிறது? பியூஷ்கோயலுக்கு சொல்ல வேண்டும். சப்கா சாத், சப்கா விகாஸ் – எல்லோருக்குமான அரசு, எல்லோருக்குமான நீதி என்று பீற்றிக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், நடைமுறையில்

ஏழை மக்களுக்கு எதிரான ஆட்சி மோடியின் ஆட்சி. உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு விரோதமான ஆட்சி மோடியின் ஆட்சி. விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி மோடியின் ஆட்சி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மோடியின் ஆட்சி அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. அவர்களின் கொள்ளைக்காக, சுரண்டலுக்காகப் பாடுபடுகிற ஆட்சிதான் மோடி ஆட்சி.

பியூஷ் கோயல் அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன்.

தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் பியூஸ் கோயல் பொய் பேசுகிறார். மோடி பொய் பேசுகிறார். இங்கே இருக்கிற பாஜகவினர் பொய் பேசுகிறார்கள். அவர்களோடு அனுசரித்து பழனிசாமி தலைமையில் இருக்கிற அதிமுகவும் ஆதாரமில்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களுடைய கலாச்சாரம், தமிழ் மக்களுடைய உயர்ந்த நெறிகள், மதிப்புகள் இவற்றையெல்லாம் பாஜகவின் காலடியில் போட்டு, பழனிசாமி சபதம் செய்கிறார் என்றால், அவரை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர்கிறது என்று சொன்னால், அது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்திருக்கும் ஆட்சியினுடைய நல்ல கொள்கைகள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் சொன்னதைப் போல், இந்தியா என்பது ஒன்றிய அரசு. மாநிலங்களின் ஒன்றியம்தான் ஒன்றிய அரசு. India that is Bharath Union of States. என்றுதான் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

மாநிலங்களின் நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு பறிக்கிறது.

நிதி கூட்டாட்சி எங்கே இருக்கிறது திரு.கோயல்? அதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க முடியுமா? (Where is Fiscal Federalism Mr.Goyal? Can you Expalin it to the people of Tamilnadu?) மாநிலங்கள் தங்களுடைய நிதியைப் பெற முடியாமல் ஏன் தவிக்கின்றன? தேசிய கல்விக் கொள்கை-2020 என்ற பெயரில் இந்தியைத் திணிப்பதற்காக நெருக்கடி கொடுப்பது. இதற்காக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்திவைப்பது யாருடைய ஆட்சி? டெல்லியில் இருக்கிற மோடியின் ஆட்சிதானே.

எனவேதான், தமிழ்நாட்டு மக்கள் அளிக்கிற தீர்ப்பு, மோடியினுடைய ஆட்சிக்கு கொடுக்கிற ஓர் எச்சரிக்கையாக அமையவேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் தீர்ப்பு, மாற்றத்துக்கான, ஒன்றிய அரசை அகற்றுவதற்கான தீர்ப்பாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். தமிழ்நாட்டுக்காகவும், இந்தியாவுக்காகவும் நீங்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button