தமிழகம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றி

மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உறுதி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியை தமிழக மக்கள் அளிப்பார்கள். இதனை மக்களைச் சந்திக்கும் போது உணர முடிகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சன் தொலைக்காட்சியில் வெளியான நேர்காணலில், செய்தியாளர் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

  • கேள்வி: தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறீர்கள். மக்களுடைய உணர்வு எப்படி இருக்கிறது?

பதில்: மக்கள் மிகுந்த விழிப்போடு இருக்கிறார்கள். நல்ல தீர்ப்பை அவர்கள் அளிப்பார்கள். அந்தத் தீர்ப்பு திமுக தலைமையிலான எங்கள் கூட்டணிக்குத்தான் சாதகமாக அமையும். நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்திருக்கின்றன.

இந்த நலத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசு எதிராக இருப்பதை தமிழக மக்கள் உணர்கிறார்கள். பிரதமரே எதிராக இருக்கிறார். ஒன்றிய நிதி அமைச்சரே எதிராக இருக்கிறார். நலத்திட்டங்கள் கூடாது என்கிறார். விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை கூடாது என்கிறார். விவசாயிகளுக்கு சலுகைகள் கூடாது என்கிறார். ரேஷன் முறையே கூடாது என்று சொன்னவர்கள்தான் அவர்கள். எனவே, எளிய மக்களுக்கு, ஏழைகளுக்கு வழங்குகிற நலத்திட்டங்கள் கூடாது என்கிற கொள்கை உடையது பாஜக. எனவே, பாஜகவின் ஆபத்தை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வரலாறு காணாத வெற்றியை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அளிப்பார்கள். மக்களை நேரடியாகச் சந்திக்கும் போது இதனை உணர முடிகிறது.

  • கேள்வி: இந்தத் தேர்தலில் த.வெ.க.வின் தாக்கம் எப்படி இருக்கும்?

பதில்: இப்பொழுது விஜய், ரசிகர் மன்றத்தின் தலைவர் அல்ல. நடிகர் அல்ல, ஒரு கட்சியின் தலைவர். அவரை மதிக்கிறோம். த.வெ.க.வில் ரசிகர்கள் மட்டுமல்ல, படித்த சிந்தனை உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் த.வெ.க.வுக்கு அளிக்கும் வாக்குகளால் எதுவும் சாத்தியப்படவோ எந்தக் கொள்கையும் ஈடேறவோ போவதில்லை. அது வீண்.

இன்றைய போர் தமிழ்நாட்டிற்கும், ஒன்றிய அரசுக்கும் இடையில்தான். ஒன்றிய அரசு அதிகாரத்தைக் குவித்துக்கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது. நலத்திட்டங்களை முடக்குகிறது. ஒன்றிய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே நெருக்கடி தருகிறது. அது பேராபத்து. எனவே, அதை வீழ்த்த வேண்டும் என்று சொன்னால், தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும். அதுதான் சரியென்று த.வெ.க.வில் இருக்கிறவர்கள், பிற கட்சியில் இருக்கிறவர்கள், பகுத்தறிவாளர்கள், நல்ல சிந்தனையாளர்கள், நடுநிலையாளர்கள் எல்லோருமே திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள்.

  • கேள்வி: த.வெ.க. பிரிக்கக்கூடிய வாக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கும்? யாருக்கு பாதகமாக அமையும்?

பதில்: திமுக வாக்கு, கம்யூனிஸ்ட்டுகளின் வாக்கு, காங்கிரஸ் வாக்கு, விடுதலை சிறுத்தைகளின் வாக்கு – இவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது. இது அரசியல். நீண்ட நெடுங்காலமாக உதயசூரியன் வாக்கு பல ஆண்டுகளாக நிலைபெற்றுவிட்ட ஒன்று. எம்.ஜி.ஆர். தோன்றியபோதே அதை உடைக்க முடியவில்லை.

எனவே, எங்கள் வாக்கு வங்கி கொள்கைக்கானது, அரசியலுக்கானது, நாட்டு நலனுக்கானது. இதை சிதைக்க முடியாது. மற்றவர்களின் வாக்குகளை சிதைக்கலாம். சிதைக்க முடியும்.

  • கேள்வி: விஜய் பிரிக்கும் வாக்குகள் அதிமுகவைப் பாதிக்கும் என்கிறீர்களா?

பதில்: எங்களை எதிர்த்து யாரெல்லாம் களத்தில் இருக்கின்றார்களோ, அவர்களின் வாக்குகள்தான் பிரியுமே தவிர, எங்கள் கூட்டணியிலிருந்து ஒருவர்கூட மாற்றி வாக்களிக்க மாட்டார். அவர்கள் அரசியலை உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையில்தான் இன்றைய போர். இந்தக் கட்சி தோற்க வேண்டும், அந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லவில்லை. தமிழகம் வெல்ல வேண்டும் என்கிறார். தமிழகம் வெல்ல வேண்டும் என்பதின் உட்பொருள், அரசியல் – தமிழ்நாட்டின் உரிமைகள் வெல்லப்பட வேண்டும், நமது இறையான்மை வெற்றி பெறவேண்டும் என்பதுதான். நாம் அனைவரும் நீண்ட நெடுங்காலமாக ஒன்றுபட்டு, ஒற்றுமையாக வாழ்கிறோம் அல்லவா, அந்த ஒற்றுமை நிலைபெற வேண்டும்.

எனவே, தமிழ்நாடு வெல்லும் – இது சொல் அல்ல, பெரும் போர் முழக்கம். ஜனநாயகத்துக்கான போர் முழக்கம். இந்தச் சொல்லுக்கு ஒவ்வொரு நாளும் மரியாதையும், மதிப்பும் கூடுகிறது. தமிழ் மக்களிடம் இந்தச் சொல்லுக்கு அதிகாரம், ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.

  • செய்தியாளர் கேள்வி: தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: அவருடைய பேச்சு நல்லதல்ல. அவர் தோல்வி விரக்தியில் கீழிறங்கிப் பேசுகிறார். ஏற்கெனவே நாம் சொன்னது போன்று, தமிழ்நாட்டின் சித்திரகுப்தனாக அவர் மாறிவிட்டார். ஒருவர் மேலே போக வேண்டும், இன்னொருவர் செத்துப்போக வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார். அது அரசியல் அல்ல. அரசியல் வறட்சியைக் காட்டுகிறது. அவர் அரசியல் பேசக் கூடியவர்தான். பாஜக அருகில் இருப்பதால் அவருக்குப் பேச்சு வரவில்லை. அவரால் எதைப் பேச முடியும்? அந்தக் கூட்டணியே பாஜகவால் ஏற்பட்ட கூட்டணி. டில்லியில் ஏற்பட்ட கூட்டணி. மிரட்டலால் ஏற்பட்ட கூட்டணி. மிரட்டியதால், மிரண்டு போனதால் ஏற்பட்ட கூட்டணி. கொள்கை இல்லாத கூட்டணி. எனவே, எடப்பாடி பழனிசாமி அவ்வாறுதான் பேசுவார்.

  • கேள்வி: களத்தில் பார்க்கும்போது, பா.ஜ.க. அதிமுக. தலைவர்கள் ஓரளவுக்கு இணைந்து விட்டனர். தொண்டர்கள் அவ்வாறு இணைந்து (மெர்ஜ்) விட்டனரா?

பதில்: தலைவர்கள் எங்கே இணைந்து பேசுகிறார்கள்? மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்களை, உள்துறை அமைச்சரோடு நான்கு இடங்களில் பேசச் சொல்லுங்கள். பிரதமரோடு நான்கு இடங்களில் பேசச் சொல்லுங்கள். எங்கள் அணியின் வெற்றி எளிதாகும். பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழ் மரபில், ‘உங்கள் நண்பரைச் சொல்’ என்பார்கள். இப்படி சொல்லுகிற பொழுது, வெறுப்பாக அல்ல, பிரதமரை, உள்துறை அமைச்சரை, பாஜக தலைவர்களை நாங்கள் மதிக்கிறோம் அது வேறு, ஆனால், அவர்களுடைய அரசியலை ஏற்கவில்லை. அது பேராபத்தானது. முறியடிக்க வேண்டும்.

எடப்பாடி அவர்களை ‘எங்கள் நண்பர் அமித்ஷா’ என்று சொல்லச் சொல்லுங்கள். அந்தக் கணமே பல்லாயிரம் வாக்குகள் அவருக்கு விழாது. சென்னையில் இருக்கிற அதிமுக நண்பர்கள் பாஜக தலைவர்களை மேடையில் ஏற்ற ஏன் அஞ்சுகிறார்கள்? நீங்கள் ஏறாதீர்கள் என்று ஏன் சொல்கிறார்கள்? இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழக மக்கள் ஒரு மனநிலைக்கு வந்துவிட்டார்கள். சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், எளியவர்கள் ஒரு மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

நாம் வெல்லலாம், தோற்கலாம் அது இயல்பு. ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது. பாஜக, அதன் கூட்டணி வெற்றி பெற்றால், ஜனநாயகம் தோற்றுவிடும் என்பதை தமிழக மக்கள் உணர்ந்த காரணத்தினால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், அது வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும் வெற்றி பெறும்.”

– இவ்வாறு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button