
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கே.சுப்பராயன் எம்.பி. ஆற்றிய சிறப்புரை
=====
கம்யூனிஸ்ட் கட்சி ஏன் தேய்ந்தது? கம்யூனிஸ்ட்டுகளால் ஏன் வெல்ல முடியவில்லை? கம்யூனிஸ்டுகள் முன்னேற என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து கே.சுப்பராயன் எம்.பி. நிறைவுரையில் விளக்கினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை பாலன் இல்லத்தில் டிசம்பர் 26 அன்று நடைபெற்றது. கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே சுப்பராயன் எம் பி நிறைவுரை ஆற்றினார். அவை வருமாறு:
“நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் நம்முடைய நாட்டின் நிலைமைகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், நாளை காலை என்ன நடக்கும் என்றே மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு அபாயகரமான சிக்கல்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சுதந்திர இந்தியா இதற்கு முன்னர் என்றுமே இத்தகைய அதிபயங்கர சிக்கலில் சிக்கி சீரழிந்ததில்லை.
1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25, 26ஆம் தேதிகளில் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்கு நிறைவுரை ஆற்றிய அண்ணல் அம்பேத்கர் பல்வேறு எச்சரிக்கைகளைத் தெரிவித்திருந்தார். அவற்றில் மிக முக்கியமான எச்சரிக்கை, இந்திய அரசியல் சட்டம் நல்ல அரசியல் சட்டம், ஆனால், எதிர்கால இந்தியர்கள் நாட்டைக் காட்டிலும் மதத்தை பெரிதாகக் கருதுவார்களா? அல்லது மதத்தைவிட நாட்டைப் பெரிதாகக் கருதுவார்களா? என்று தெரியவில்லை. ஒருவேளை நாட்டைக் காட்டிலும் மதத்தைப் பெரிதாகக் கருதுவார்களேயானால், இந்தியா இரண்டாவது முறையாக மீள முடியாத சிக்கலில் சிக்கிச் சீரழியும் என எச்சரித்தார்.
அந்த எச்சரிக்கையை இன்றைக்கு நினைந்து பார்க்கிறபொழுதுதான் நெருக்கடியின் ஆழம் புரிகிறது. இதை எவ்வாறு புரிய வைப்பது என்று நான் யோசித்துப் பார்த்தேன், வனத்தில் ஒரு மானை மலைப்பாம்பு ஒன்று சுற்றி வளைத்து, அதன் உடலை இறுக்கி எலும்பை நொறுக்கி இரையாக உட்கொள்ளும். அத்தகைய நிலையில், இந்தியா வகுப்புவாத மலைப் பாம்பிடம் சிக்கி, அதன் எலும்பு நொறுங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை இந்தியர்களுக்கு உணர வைப்பதுதான் இன்றைய தலையாய தேசபக்தக் கடமையாகும்.
தேசபக்தக் கடமை
இந்த தேசபக்தக் கடமை என்பது வெறும் மண்ணைக் காப்பாற்றுவது அல்ல. மண்ணும், மரங்களும், மட்டைகளும் அல்ல தேசம். இந்திய மண்ணில் வாழுகிற 140 கோடி மக்களைக் கொண்டதுதான் தேசம்.
அனைத்து மக்களின் நலன்கைளப் பேணுவதுதான் தேச பக்தி. அனைத்து மக்களின் நலன்களை எவன் பேணுகிறானோ, அவன்தான் தேசபக்தன்.
இதில் ஒரு பகுதியை தூண்டிவிட்டு, பிறிதொரு பகுதியை ரத்த வேட்டையாட அனுமதிப்பதும், அவ்வாறு தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் அபாயகரமான விளையாட்டாகும். அந்த விளையாட்டைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கொதித்து வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையைப் போல் இந்தியா பயங்கரமான ஆபத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. இந்த பேராபத்தில் இருந்து காப்பாற்ற நாட்டை ஒன்றுபட வைக்க வேண்டும்.
நாட்டின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவில், நாம் நினைவில் கொள்ள வேண்டியதையே இங்கே குறிப்பிடுகிறேன்.
இன்றைய இந்தியாவில், நாம் செய்ய வேண்டிய மகத்தான பணி, மக்களை ஒன்றுபடுத்துவதுதான்.
மக்கள் சாதியால், மதத்தால், இனத்தால், நிறத்தால், இன்ன பிறவற்றால் பிரிக்கப்பட்டு, பிளக்கப்பட்டு கிடக்கிறார்கள்.
இப்படிப் பிளவுபட்டு இருப்பவர்களை ஒன்றுபடுத்தாவிட்டால், உலகம் வாழ இயலாது.
உலகம் வாழ வேண்டுமானால், மனித குலம் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால், மனித குலம் தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், முதலில் ஒன்றுபட வேண்டும்.
அதைத்தான் அன்றைக்கே காரல் மார்க்ஸ் பிரகடனம் செய்தார். “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று. அது ஊர்வலத்துக்காக எழுதப்பட்ட முழக்கம் அல்ல.
வர்ணாசிரம சுரண்டல் சமூக அமைப்பு
கோடிக்கணக்கான சூத்திரர்களை ஒன்றுபட விடாமல் பிரிப்பதற்காக இந்தியாவினுடைய ஆன்மீக மூளை; என்றென்றும் அவர்கள் ஒன்றுபடக் கூடாது என்பதற்காக வர்ணாசிரமம் அடிப்படையில் சாதிகளாகப் பிரித்தது. இந்தச் சாதிகள் என்றென்றும் ஒன்றுபடாது. இந்த சாதி ஒன்றுபடாமல் இருந்தால்தான் மனிதனை மனிதன் சுரண்டி வாழும் முறை நிலைக்கும். நீடிக்கும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். அவ்வளவு அற்புதமான மூளையோடு படைக்கப்பட்டதுதான் இந்த வர்ணாசிரம முறை.
எனவே, இந்த வர்ணாசிரம முறை சுரண்டல் சமூக அமைப்பை; உழைப்பைச் சுரண்டுகிற அமைப்பை காப்பாற்றுவதற்காக சுரண்டும் சக்திகளின் அதியற்புதமான மூளையால் உருவாக்கப்பட்ட நயவஞ்சகத் தந்திரம்தான் வர்ணாசிரமம்.
இந்த வர்ணாசிரமம்தான் நம்மையெல்லாம் ஒன்றுபடவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது.
நேரம் கருதி நான் இதுபற்றி விரிவாக உள்ளே போக விரும்பவில்லை.
ஒன்றுபட விடாமல் தடுக்கும் வர்ணாசிரமம்
இத்தகைய சூழ்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவுக்கான கட்சி அல்ல; தமிழ்நாட்டுக்கான கட்சி அல்ல; உலக மனித குலம் முழுவதும்- பாரதியார் சொன்னது போல, மானுடத்தைப் பிணைத்துள்ள தளை யெலாம் சிதற வேண்டும்.
எல்லா அடிமைச் சங்கிலிகளும் நொறுங்க வேண்டும். நொறுக்கப்பட வேண்டும். அதற்கான வழி எது? என்று சிந்தித்து வழிகாட்டுகிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
அனைவரையும் ஒன்றுதிரட்ட முயற்சிக்கிறது; முடியவில்லை. நிகழ்கால வர்ணாசிரம முறை ஒன்றுசேர விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்றது.
எனவே, விழிப்படைந்து சூத்திர சாதிகள் முழுவதும் ஒன்றுபட வேண்டும். பட்டியலின மக்கள் முழுவதும் ஒன்றுபட வேண்டும். பழங்குடி மக்கள் முழுவதும் ஒன்றுபட வேண்டும். இவர்கள் எல்லோருமே சூத்திரர்கள்.
சூத்திரனுக்கு கல்வி கற்கிற உரிமை இல்லை. எது சொல்லியது? சனாதனம். அந்த சனாதனம் கற்றுக் கொடுப்பது என்ன? வர்ணாசிரமம்.
வர்ணாசிரமம் என்ன சொல்லிக் கொடுக்கிறது? குலத்திற்கேற்ற தொழில். குலத்திற்கேற்ற நீதி. சாதிக்கேற்ற நீதி. அவற்றைச் செய்ய வேண்டும் என கற்றுக்கொடுக்கிறது. எனவேதான், நிலைமை முறுக்கேறிக் கொண்டிருக்கிறது. சாமானிய நிலைமையில் இல்லை. இதுதான் பிரதான நெருக்கடி. ஒன்றியத்தில் ஆளுகின்ற பாஜக என்ற தீயசக்திக்கு இந்தப் பிரதான நெருக்கடிதான் படிக்கல்லாகப் பயன்படுகின்றது.
மூடநம்பிக்கைகள் தான் படிக்கல்
பாஜக, ஆர்.எஸ்.எஸ். எப்படி முன்னேறுகிறது? இந்தியர்களிடம் நிலவும் மூடநம்பிக்கைகளையே தன்னுடைய முன்னேற்றத்துக்கான படிக்கற்களாகப் பயன்படுத்துகிறது. அதைப் பயன்படுத்தித்தான் நின்றுகொண்டிருக்கிறது.
இவற்றை விழிப்போடு பார்க்க வேண்டாமா? விழித்த நிலையில், விழிப்பற்றுக் கிடக்கிற மக்களை விழிக்க வைக்க வேண்டும். அவற்றைச் செய்வதில் பல தடைகள். அது காலப்போக்கில் கவனமாக கவனித்து எதிர்கொள்ளப்பட வேண்டியவை.
நான் அடுத்துக் குறிப்பிட விரும்புவது, உலக நிலைமையும் அவ்வளவு நன்றாக இல்லை. உலக நிலைமைகளும் திருகல் முறுகலாக இருக்கின்றன.
முரண்பாடுகளும்; மோதுதல்களும், கெடுவாய்ப்பும்; நல்வாய்ப்பும் இணைந்து நிற்கின்றன.
இவற்றைப் பயன்படுத்தி முன்னேற வேண்டியிருக்கிறது.
நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், கம்யூனிஸ்டுகளைப் பற்றி கேலி செய்கிறவர்கள் இருக்கிறார்கள். கிண்டல் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். கம்யூனிசம் தேய்ந்து போனது, கம்யூனிஸ்ட்டுகள் தேய்ந்து போய்விட்டார்கள் என்று பாமரத்தனமான பார்வையால் மதிப்பீடு செய்கிறார்கள்.
ஏன் தேய்ந்தது? கம்யூனிஸ்ட்டுகளை வேண்டாம் என்றா தோற்கடித்தார்கள்? இல்லை. கம்யூனிஸ்ட்டுகளால் வெல்ல முடியாது என்று அவர்கள் வாக்களிப்பதில்லை.
கம்யூனிஸ்ட்டுகளால் ஏன் வெல்ல முடியவில்லை? சாதி அடிப்படையிலும், இன அடிப்படையிலும், மத அடிப்படையிலும் கட்சிகள் மக்களைப் பிரித்துவிட்டன.
தற்காலிகமாக ஒரு பின்னடைவு கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பின்னடைவு தற்காலிகமானது என்று புரிந்துகொள்ளுவதற்கே கூர்ந்த மதி வேண்டும். கூரிய அறிவு இல்லாமல் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாது.
கூரிய அறிவு சொல்லிக் கொடுக்கிற பாடம் என்ன? பிரித்ததனால் கம்யூனிஸ்ட்டுகள் முன்னேற முடிவதில்லை. சாதிகளாலே சங்கங்கள், கட்சிகள் சிதறி சிதறிக் கிடக்கின்றன. சாதிகளைக் காப்பாற்ற அல்ல. அனைத்துலக மக்களும் முன்னேறிவிடாமல் தடுப்பதற்காக இந்தத் தீய சாதி பயன்படுத்தப்படுகிறது.
சாதிக்கு எதிராக எதை நிறுத்த வேண்டும்? வர்க்க உணர்வை, வர்க்க போதத்தை நிறுத்த வேண்டும். வர்க்க உணர்வு என்றைக்கு வருகிறதோ, சுரண்டப்பட்ட மக்கள் ஒன்றாக, சுரண்டும் முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்ற அறிவு எப்பொழுது தெளிவடைகிறதோ, அப்பொழுதுதான் நமக்கு முன்னேற்றப் பாதை கிடைக்கும்.
எனவே, கம்யூனிஸ்ட்டுகள் பின்னடைந்திருப்பது தற்காலிகம்தான். கம்யூனிஸ்ட்டுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தற்காலிகமானதுதான்.
எவ்வளவு அருமையான வரலாறு நமக்கு இருக்கிறது.
இன்றைய தமிழகத்தில் போஸ்டர்களில் மாவீரர்கள் பலர் வருகிறார்கள். மாவீரன் என்று போட்டுக்கொள்ளுகிறார்கள். ஆனால், உண்மையில் வரலாற்றில் மாவீரர்கள் அல்ல. உண்மையிலேயே மாவீரத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
அதற்கு நான் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஹிட்லர், நாசிகள், நாசிப்படைகள் கொடிகட்டிப் பறந்த காலம். ஹிட்லர் அதிகாரத்தில் இருந்தான். அவனால் முதலில் தடை செய்யப்பட்ட கட்சி கம்யூனிஸ்ட்டு கட்சி. அதனுடைய தலைவர் எர்னஸ்ட் தால்மன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதைக்கு ஆளானார். எதற்கு? ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டது என்று கையெழுத்திடச் சொன்னான், தால்மன் மறுத்தார்.
அவருடைய பற்களெல்லாம் தட்டி உடைக்கப்பட்டன. அவருடைய மலவழியில் இரும்புக்குச்சியால் குத்தி சித்தரவதை செய்தான். எதற்கு? இந்த செங்கொடியை, கம்யூனிஸ்ட்டு கட்சியைக் கலைத்துவிட்டேன் என்று சொல்வதற்கு. சித்தரவதையில் துவண்டுபோன எர்னஸ்ட் தால்மன் திக்கித் திணறி எழுந்து நின்று சொன்னார், நீ என்னைக் கொல்லவில்லை என்றாலும், நான் செத்துப் போவேன். ஆனால், இந்த செத்துப்போகிற உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சாகாத இலட்சியமான கம்யூனிசத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று பிரகடனம் செய்தான். அந்தப் பரம்பரைதான் இன்றைய பரம்பரை.
நம்முடைய பாரம்பர்யம் எத்தகையது? அதுமட்டுமா?
பல்கேரியா பெற்றெடுத்த மகத்தான வீரன், ஹிட்லருடைய நாஜிகளின் நீதிமன்றத்திலேயே நின்று, அவரொரு அச்சுத்தொழிலாளி பல்கேரிய நாட்டில் பிறந்தவர்; அவர் மீது ரெய்ஸ்டாக், ஜெர்மன் நாடாளுமன்றத்திற்குத் தீவைத்தார் என்று பொய் வழக்குப் போட்டான். அதை எதிர்த்து வாதாடுவதற்காகவே அவர் ஜெர்மன் மொழியைக் கற்றார். ஜெர்மன் மொழியைக் கற்று, ஜெர்மன் மொழியிலேயே வாதாடினார். அவரைக் கைது செய்து, இரண்டு கால்களும், இரண்டு கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டன. ஆறு மாத காலம்; அந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட டிமிட்ரோ, பாசிஸ்ட் நீதிமன்றத்தில் நின்று சொன்னார், “உலகம் முழுவதும் போராடுகிற புரட்சிகர கம்யூனிஸ்ட்டுப் போர்வீரர்களின் நானும் ஒருவன்” என்று.
அப்படி வாதம் செய்த டிமிட்ரோ விடுவிக்கப்பட்டார் , அந்த மகத்தான தலைவர்களின் பாரம்பர்யத்தில் வந்த நாம், அதே பாரம்பர்யத்தோடு நிகழ்கால சவால்களைச் சந்திக்க வேண்டும். நிகழ்கால சவால்களை முறியடிக்க வேண்டும். கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரிய நிலைகுலையாத நெஞ்சுரத்துடன் நின்று சமர் புரிய வேண்டும். நமது எதிரி யார் என்று அடையாளம் காட்டப்பட்டுவிட்டது.
அந்தப் போரில் ஒரு முன் நிபந்தனையாக கம்யூனிஸ்ட்டு கட்சியினுடைய அகில இந்திய காங்கிரஸ் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது. மார்க்சிய லெனினிய அடிப்படையில் இந்திய அரசியல் நிலைமைகளை மதிப்பீடு செய்து, அதற்குரிய திட்டத்தைத் தயாரித்து, கோட்பாடு அடிப்படையில் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஒன்றுபட வேண்டும், கம்யூனிஸ்ட்டு குழுக்கள் ஒன்று பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்திருக்கிறது.
சந்தர்ப்பவாத நிலையில் அல்ல, கோட்பாடு அடிப்படையில், தத்துவார்த்த அடிப்படையில் ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமை இருந்தால்தான், ஜனநாயக சக்திகளை ஒன்றுபடுத்த முடியும். அந்த ஜனநாயக சக்திகளை ஒன்றுபடுத்தினால்தான் ஜனநாயகப் புரட்சிக்கு வெற்றி பெற வழி ஏற்படும்.
அந்த மகத்தான கடமையை நிறைவேற்ற, இதுவரை இருந்த மாதிரி அல்ல, உருக்குப் போன்று, உருக்குத் தடிபோன்று கட்சி அமைப்பை வலுப்படுத்தவில்லை என்றால், நாளைய எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது.
எனவே, உறுதியான; உருக்குப் போன்ற கம்யூனிஸ்ட்டு கட்சியைக் கட்ட, கட்சியின் நூற்றாண்டு விழாவில் சபதம் ஏற்போம்.”
இவ்வாறு கே.சுப்பராயன் எம்.பி. நிறைவுரையாற்றினார்.