தமிழகம்

அடக்குமுறைகளை மீறி ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

ஏஐடியூசியுடன் இணைந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, சென்னை பனகல் மாளிகை அருகில் டிசம்பர் 8ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மு.ராமாநிதி தலைமை தாங்கினார்.

ஏஐடியூசி மாநில துணைத்தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளருமான என்.பெரியசாமி போராட்டத்தை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.கிருஷ்ணசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மதிமுக சார்பாக அந்திரிதாஸ் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து, காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி பல்லாயிரம் பேர் சென்னை, பனகல் மாளிகை அருகில் திரண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எழுச்சியுடன் முழக்கமிட்டனர். அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து ஒய்எம்சிஏ திடலுக்கு அழைத்துச் சென்றனர். எங்கு கொண்டு சென்றாலும் போராட்டம் தொடரும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

போராட்டத்துக்கு முந்தைய நாள், மாநில தலைவர்களில் ஒருவரான நிர்மலாவை வீட்டுக் கைதியாக்கி காவல்துறையினர் முடக்கினர். எதற்கும் அஞ்சாமல் அவர் உறுதியுடன் இருந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்தில் ஏறி சென்னைக்குப் புறப்பட்ட 130 தொழிலாளர்களை காவல்துறையினர் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். வையம்பட்டியில் வாகனத்தில் புறப்பட்ட 70க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்க மருங்காபுரி, துவரங்குறிச்சியில் இருந்து புறப்பட்ட பெண் தொழிலாளர்களையும் கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோன்று, மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், பாபநாசம், தஞ்சை என பல்வேறு இடங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்கப் புறப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆங்காங்கே கைது செய்த காவல்துறையின் அத்தனை அடக்குமுறைகளையும் மீறி, சென்னை நோக்கி வந்த தொழிலாளர்களை பூந்தமல்லி டோல்கேட் போன்ற இடங்களிலும் வாகனங்களுடன் தடுத்து நிறுத்தினர். தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு ஏஐடியூசியும் கடும் கண்டனம் தெரிவித்தன.

காவல்துறையின் அத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி சென்னை, பனகல் மாளிகையில் குவிந்த, இழப்பதற்கு எதுவுமற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கைது செய்யப்பட்ட போதும் கோரிக்கைகள் நிறைவேறாமல் செல்வதில்லை என்ற உறுதியுடன் முழக்கமிட்டனர்.

வேறு வழியின்றி, சங்கத் தலைவர்களை கூடுதல் தலைமைச் செயலாளர் அழைத்துப் பேச்சு நடத்தினார். கொரோனா ஊக்கத்தொகை மூன்று வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு சத்துணவு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கவும், ஊரக வளர்ச்சித்துறையில் தற்காலிகமாகப் பணிபுரியும் அனைவருக்கும் இ.எஸ்.ஐ, பிஎஃப் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமைச் செயலாளர் உறுதி அளித்ததை அடுத்து காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button