ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போர்
SIR யை எதிர்த்து இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் முழக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செய்வதைக் கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நவம்பர் 11ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவற்றில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (SIR) மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்வது வாக்காளர்களை நீக்கும் தந்திரம் என இந்தக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகாரப் போக்கில், சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொண்டிருப்பதைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது, “தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாகக் கண்டித்துள்ளன. பீகாரில் நடந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுபான்மையினர் அதிகம். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதால், சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை பாஜக மறைமுகமாக கொண்டுவந்துள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளைக் கண்டித்து சட்ட ரீதியாகவும் சந்திப்போம், மக்களைத் திரட்டியும் போராடுவோம் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் தொடங்கியிருக்கும் இந்தப் போர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராகும். குளறுபடிகள் நிறைந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடியே முழுப் பொய்யைப் பேசுகிறார். நாட்டின் பிரதமரே இப்படி அபாண்டமாகப் பேசலாமா? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழர்களைத் திருடர்கள் என்கிறார். பூரி ஜெகநாதர் கோவில் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று ஒடிசாவில் கூசாமல் பொய் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களை இப்படிக் கொச்சைப்படுத்திப் பேசி வரும் பிரதமர் மோடிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கும் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தண்டனை கொடுப்பார்கள்” என்றும் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் எச்சரித்தார்.
சென்னையில் சிவானந்தா சாலை, தங்கசாலை மணிக்கூண்டு உட்பட நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் எம்.ரவி, ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.