பெரியாருடனான முரண்பாடு வளர் முரண்
ஆ.ராசா பேச்சுக்கு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பதில்


தந்தை பெரியார் சொன்னது போன்று, உலகம் முழுவதும் செங்கொடி மட்டுமே பறக்கும். அதில்தான் சமத்துவமும், சமதர்மமும் இருக்கிறது என்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 4.10.2025 அன்று திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் காலை அமர்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆற்றிய உரை வருமாறு:
“தோழர்களே, நண்பர்களே, ஆ.ராசா அவர்கள் என்னை வைத்துக்கொண்டு சிங்காரவேலர், ஜீவாவை விமர்சித்தார். அவரிடம் சொன்னேன், எப்பொழுதெல்லாம் உங்கள் அருகில் மேடையில் இருக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் என்னை விமர்சிக்கலாம் என்றேன். எங்கள் இயக்கத்தை விமர்சிக்கலாம். அந்த விமர்சனங்கள் ஜனநாயகத்தை வளர்க்கும். அது பகை முரண் அல்ல. வளர் முரண் என்று தலைவரிடம் எழுதிக் கொடுத்தேன். அதைப் பேசுங்கள் என்று தலைவர் சொன்னார்.
நான் சகோதரர் ஆ.ராசாவுக்குச் சொல்கிறேன். பெரியாரிடம் ஜீவா முரண்பட்டார், பகையாக அல்ல, வளர் முரண். பெரியாரிடம் சிங்காரவேலர் முரண்பட்டார், பகையாக அல்ல, வளர் முரண். இரண்டு பேரையும் துரோகி என்று தந்தை பெரியார் ஒரு போதும் சொன்னதில்லை என்பதை ஆ.ராசா அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நாங்கள் முரண்பட்டது உண்மை. நாங்கள் பெரியாருக்குத் தீங்கு செய்யவில்லை. துரோகம் செய்யவில்லை. கருத்தால் முரண்பட்டோம்.
நாங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறோம், உண்மைதான். பெரியாரை நிரப்பிக்கொள்கிறோம். பெரியார் தேவைப்படுகிறார். ஆனால், பெரியார் வந்து சேர்ந்த இடம் கம்யூனிசம், சமத்துவம் என்பதை ஆ.ராசாவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
“இந்தக் கொடியில் கறுப்பு சிவப்பு இருக்கிறது அல்லவா, இது தற்காலிகம். இந்தக் கறுப்பு மறைந்து, உலகம் முழுவதும் சிவப்புக் கொடி மட்டும்தான் பறக்கும்” என்று சொன்னவர் தந்தை பெரியார். அவருக்கு அந்தத் தொலைநோக்கு இருந்தது.
எனவே, இவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான் இதனைப் பார்க்க வேண்டும்.
உலகத்தின் வரலாற்றில், ரூசோ, வால்டேருடைய சமூக ஒப்பந்தம். ஐரோப்பாவினுடைய அறிவொளி இயக்கம் போன்ற எத்தனையோ இயக்கங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்த நாட்டிலும் சுயமரியாதை என்கிற சொல்லில் இயக்கம் தோன்றியதே இல்லை. இந்தியாவில்தான், தமிழ்நாட்டில்தான் அந்த இயக்கம் தோன்றி வாழ்ந்தது.
சுயமரியாதையின் சிறகுகள் மகத்தானது. பெரியார் சொல்லுகிறார். “ஒருவன் தனக்குள் இருக்கின்ற எசமான விசுவாசத்துக்கு தானே கொள்ளி வைப்பது. எதன் பொருட்டும் கூணாமல், குனியாமல், பல் இளிக்காமல் இருப்பது. பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை. மனிதர்கள் அனைவரும் சமம். எதன் பொருட்டும் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை.”
ஜனநாயகத்தின் இந்தச் சிறகுகள் எத்தனை இயக்கங்களில் இருந்தன?
ஆனால், சுயமரியாதை இயக்கத்தில் இருந்தது. தந்தை பெரியாருடைய கருத்தியலில் இருந்தது. எனவேதான் பெரியாரை நெருங்குகிறோம். பெரியாரை நாங்கள் உள்வாங்குகிறோம், தமதாக்கிக் கொள்கிறோம்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்றைக்குப் பெரியார் சென்றிருக்கிறார்.
கருத்து வேறுபாட்டால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிரிந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானது. எதனால்?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவு நிறைந்தவர்கள் இருந்தாலும், அங்கே கடவுள் மறுப்பு பேசப்படவில்லை. கடவுள் மறுப்பைப் பேசியவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்கள். விடுதலையை மறுத்துப் பேசியது ஆக்ஸ்போர்டு. விடுதலையை ஆதரித்தவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்கள்.
எந்தப் பல்கலைக்கழகம் கடவுள் மறுப்பை அங்கீகரிக்கவில்லையோ, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே தந்தை பெரியார் படமாக இருப்பது சாதாரண சாதனை அல்ல.
காரல் மார்க்ஸ் மூலதனம் (டாஸ் கேபிடல்) நூல் எழுதுகிற போது, அணிந்துரை எழுதுமாறு டார்வினிடம் கேட்டார். அதற்கு டார்வின் தயங்கினார். ஏனென்றால், டார்வினின் ‘பரிணாமக் கோட்பாடு’ வெளிவந்த போது, உலகத்திலேயே முதல்முறை ‘கடவுள் மீது விழுந்த பலத்த அடி!’ என்று மிகுந்த துணிச்சலுடன் காரல் மார்க்ஸ்தான் சொன்னார். எனவே, கடவுள் எதிர்ப்பாளராக உள்ள உங்கள் நூலுக்கு நான் அணிந்துரை வழங்குவதா? என்று டார்வின் தயங்கினார். ஆனால், தந்தை பெரியார் தமிழ் மண்ணில், இந்தியாவில் தயங்கவில்லை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர் என சுருக்கிவிடக் கூடாது. மத எதிர்ப்பாளர் என்று மட்டும் சுருக்கிவிடக் கூடாது. பெரியாரின் கருத்துகளில் தேசியம் இருந்தது, ஜனநாயகம் இருந்தது. சுயமரியாதை இருந்தது.பெண்ணடிமை கூடாது. கடவுள் மீது கேள்வி, மதத்தின் மீது கேள்வி. சாதியின் மீது கேள்வி. இதுதானா சுயமரியாதை?
பெரியார் துணிச்சலோடு சொல்கிறார், நாற்பது பேருக்குத் தேவையான வளங்களை, எதிர்காலத்தை நான்கு பேர் சுருட்டி வைத்துக் கொள்வதும் சுயமரியாதைக்கு எதிரானது.
இன்றைக்கு இந்தியாவில் 40 கோடி பேருக்குத தேவையான செல்வ வளங்களை 4 பேர் வைத்திருக்கிறார்கள். சுயமரியாதையா இது? பகுத்தறிவா இது? இந்தப் போரும் சுயமரியாதைக்கான போர்தான். தன்மானத்திற்கான போர்தான்.
இதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்பதை ஆ.ராசா போன்ற நண்பர்களுக்கு தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இன்றைய பிரச்சினை கம்யூனிஸ்ட்டுகளும், திராவிட இயக்கமும் அல்ல. இரண்டுக்கும் நோக்கம் சோசலிசம், சமத்துவம்தான்.
இன்றைய பிரச்சினை ஆர்.எஸ்.எஸ், பிஜேபி.
உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அரசியல் சாசனம் இந்தியாவில் இருக்கிறது.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி இருக்கிறது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத இன கூட்டிசைவு இந்தியாவில் நிலவுகிறது.
தந்தை பெரியார் தன் கருத்தை ஏற்காதவர்களையும் மதித்தார். அவருக்கு வரலாற்று வழிப்பட்ட, கொள்கை வழிப்பட்ட, கருத்தியல் வழிப்பட்ட எதிரிகள் இருந்தார்களே தவிர, தனிப்பட்ட முறையில் எதிரிகள் என யாருமில்லை.
காரல் மார்க்ஸ் உடல் ஹைகேட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் இருந்தனர். அவர்கள் திரும்பிச் செல்லும் போது, “மார்க்ஸ் யுக, யுகங்களுக்கான மனிதர் (a blonks age)” என்று முணுமுணுத்தபடி சென்றார்களாம்.
“தமிழ் மண்ணில் தந்தை பெரியார் யுக, யுகங்களுக்கான மனிதர்” என்று எங்களால் சொல்ல முடியும். அந்த அளவுக்கு பெரியாரை உள்வாங்குகிறோம், பெரியாரை நிரப்பிக்கொள்கிறோம்.
பெரியார் இன்றைக்கு கூடுதலாகத் தேவைப்படுகிறார். நம்முடைய எதிரி ஆர்எஸ்எஸ், பிஜேபி.
இந்தியாவில் பல மொழி பேசுகின்ற தேசிய இனங்கள் கூட்டிசைவோடு வாழ்கின்றன. அந்தக் கூட்டிசைவையே குறி வைக்கிறது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.
இதனால் தான், தமிழக முதலமைச்சரின் இந்தப் போரில் நாங்கள் அருகில் இருக்கிறோம். முதலமைச்சர் தொடங்கி இருக்கிற இந்தப் போர் தமிழ்நாட்டுக்கானது மட்டுமல்ல. மாநிலங்களின் கூட்டிசைவுக்கான போர். எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாப்பதற்கான போர். நாடாளுமன்ற விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போர். எனவே இடதுசாரிகள் மிக நெருக்கமாக இருக்கிறோம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் விமர்சனங்களை வரவேற்கிறது. தோழமை விமர்சனங்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது.
நூறாண்டு கால சுயமரியாதை இயக்கத்தை வாழ்த்தும் தகுதி கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம். நூறு ஆண்டுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டு முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் தடை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுபோன்று தடையை எதிர்கொண்ட இயக்கம் எது?
பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு இப்படி கம்யூனிஸ்டுகளைப் போல் சதி வழக்குகளை சந்தித்த இயக்கம் எது? நூறு ஆண்டுகளில் சுட்டுக்கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகள் எத்தனை பேர்? நாடு கடத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்? தூக்கு மேடைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்? எவ்வளவு வழக்குகள்?
இவ்வளவையும் கடந்து நூறு ஆண்டுகளாக இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் வாழ்கிறது.
அவமானங்களையும் அடக்குமுறைகளையும் தாங்கி சுயமரியாதை இயக்கம் நூறு ஆண்டுகளாக வாழ்கிறது.
இந்த இரண்டு இயக்கங்களும் நூறாண்டு காலம் வாழ்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் இரண்டு இயக்கங்களின் கனவு சமத்துவம், சமதர்மம் என்பதுதான். இந்தப் புள்ளியில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். நம்முடைய இலக்கு ஆர்.எஸ்.எஸ். பிஜேபி.
இவற்றுக்கு எதிரான பெரும்போரை தமிழ்நாட்டு முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். தமிழ்நாடு தொடங்கி இருக்கிறது. அந்தப் பெரும்போரில் கம்யூனிஸ்ட் இயக்கம் அருகில் இருக்கிறது.
தந்தை பெரியார் பகுத்தறிவின் சின்னம், சுயமரியாதையின் சின்னம். கலகத்தின் சின்னம். தேசிய ஜனநாயகத்தின் சின்னம். ஒரே வரியில் சொன்னால், சமத்துவத்தின் சின்னம் என்று நாங்கள் நம்புகிறோம்.
பெரியாரே சொல்வது போன்று, அவர் ஒருபோதும் கம்யூனிசத்தை, சமத்துவத்தை தாக்கி எழுதியதே இல்லை. இறுதி லட்சியம் அதுதான் என்று சுட்டிக்காட்டி யிருக்கிறார். எனவே, பெரியாரே இந்தப் பதாகையைத் தந்த பிறகு நாங்கள் அருகில் வராமல், வேறு யார் அருகில் வருவார்? எனவே, முன்னிலும் நெருங்குவோம்.
பெரியாரின், திராவிட இயக்கத்தின் அருகில் இன்றைக்கு வந்திருக்கிறோம். அதில் ஒன்றும் முரணில்லை, தவறில்லை.
ஆனால், இந்த உலகில் மகத்தான புரட்சிகளை நடத்தியது யார்? அக்டோபர் புரட்சியை நடத்தியது யார்? ரஷ்யப் புரட்சியை நடத்தியது யார்? சீனப் புரட்சியை நடத்தியது யார்? வியட்நாம் புரட்சியை நடத்தியது யார்? ஆப்பிரிக்க நாடுகளின் புரட்சியை நடத்தியது யார்? இது பற்றி தந்தை பெரியாரே எழுதி இருக்கிறார்.
தந்தை பெரியார் எழுதிய பழைய தலையங்கங்களை நேரம் கிடைக்கும் பொழுது எடுத்துப் படித்தால் தெரியும். உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் தான் இந்தப் போர்க்கொடியைத் தூக்குகிறார்கள். விடுதலையின் பக்கம் நிற்கிறார்கள் என்று தந்தை பெரியார் சொன்னதை நேரம் கிடைக்கும் போது நாம் எல்லோரும் படிக்க வேண்டும்.
எனவே, பொதுவுடைமை இயக்கத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. திராவிட இயக்கத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.
நாணயத்தின் இரு பக்கம்போல் நாட்டின் நலன் கருதி இந்த இரண்டு இயக்கங்களின் பயணம் தொடர வேண்டும். நிறைவில் நாம்தான் வாகை சூடுவோம். தந்தை பெரியார் சொன்னது போன்று, இந்த உலகம் முழுவதும் செங்கொடி மட்டுமே பறக்கும். அதில்தான் சமத்துவமும், சமதர்மமும் இருக்கிறது” இவ்வாறு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உரையாற்றினார்.