நாடாளுமன்ற ஜனநாயகம் கம்யூனிஸ்டுகளால்தான் பாதுகாக்கப்படுகிறது
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலச் செயலாளராகிய மு.வீரபாண்டியன், “மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றிய சாதிப் பெருமைகளைச் சட்டங்கள் மட்டும் அழிக்க முடியாது. பிறப்பின் அடிப்படையில் வரும் மேலாதிக்க உணர்வை அப்புறப்படுத்த சமூக அறிவியலை இடையறாது ஊட்டுவதால்தான் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’’ என்றார்.
“சட்டம் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் ஆளாகும் மக்களுக்குச் சட்டம் பாதுகாப்பு தருகிறது. ஆனால் முக்கியமானது சாதியைக் கேள்விக்குட்படுத்துவதே. சாதியின் மேலாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தும் சமூக அறிவியல் வகுப்பறைகளில் கற்பிக்கப்பட வேண்டும்,” என்று சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 63 வயதான வீரபாண்டியன் தி இந்துவிடம் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் ‘ஆணவக் கொலைகளைத்’ தடுக்க தேவையான தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் வீரபாண்டியன் கட்சியின் துணைச் செயலாளராக இருந்தார். அனைத்திந்திய, மாணவர் பெருமன்றத்திலும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திலும் அவர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, பின்னர் கட்சியின் முழுநேரப் பணியாளராக இணைந்தார்.
இரா.முத்தரசனுக்கு அடுத்து மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். வீரபாண்டியன், “தொன்மை வாய்ந்த பண்பாடு, இலக்கியம், பாரம்பரியம் நிறைந்த தமிழ்ச் சமூகம், சாதி ஒழிக்கப்பட்டால் உயர்ந்த நிலையைச் சென்றடையும். ஆனால் அதை எளிதாகச் செய்துவிட முடியாது. சாதி, மத அடையாளம் போன்ற குறுகிய பிரிவினைவாதக் கருத்துக்களை மீறி உயர்வது பண்பட்ட மனதினால்தான் சாத்தியம். அந்த ஆழமான சாதி உணர்வுகளை நீக்குவதற்காகக் கலாச்சார உணர்வுகளை ஊட்டுவதே நமது கடமை” என்று சாதி மறுப்புத் திருமணம் செய்த பெற்றோரின் மகனான வீரபாண்டியன் தெரிவித்தார்.
மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்
அடிப்படைவாதக் கருத்துக்களை முன்னிறுத்தும் மதவெறிச் சக்திகளால், தமிழ்நாடு அச்சுறுத்தப்படுகிறது.
“தமிழ்நாடு மாறுபட்ட கருத்துகளையும், எதிர்க் கருத்துகளையும்கூடப் பொறுமையுடன் அணுகும் நவீன மாநிலம். மாறுபட்ட கருத்துக்கும் அது மதிப்பளிக்கும். ஆனால் இன்று உயர்ந்த சிந்தனைகள் அனைத்தும் அடிப்படைவாதத்தால் அச்சுறுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் சவாலுக்குள்ளாகிறது. அதைப் பாதுகாப்பது நம் கடமை” என்றார்.
இடதுசாரிகள், மதவெறிச் சக்திகளைத் தடுக்க வல்லமை கொண்டவர்களா என்ற கேள்விக்கு வீரபாண்டியன் பதிலளித்ததில்: “எண்ணிக்கை அடிப்படையில் வலிமை நிர்ணயிக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் உள்ளூர்க் கிளைகள் உயிர்ப்புடன் செயல்பட்டு, மதவெறிச் சக்திகளை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் நிறைந்தவையாக உள்ளன.
இந்திய ஜனநாயகமும், நாட்டின் ஒற்றுமையும் தாக்குதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் எதிர்ப்பின் முதலாவது குரல் கம்யூனிஸ்டுகளிடமிருந்தே எழுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் கம்யூனிஸ்டுகளால்தான் பாதுகாக்கப் படுகிறது. அதனால்தான் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் இந்திரஜித் குப்தா 1992ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைப் பெற்றார்,” என்றார்.