தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – 5

தீர்மானங்கள் 44 முதல் 56 வரை

44. அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஓய்வு கால பண பலன் வழங்கிட வலியுறுத்தி

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து 2023 ஜூலை முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பண பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்களது அத்தியாவசிய குடும்ப தேவைகளுக்கான செலவினங்களுக்கும், மருத்துவம், திருமணம், கல்வி போன்ற உடனடி தேவைகளும் நிறைவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இக் கோரிக்கைகளை ஆதரித்து,வலியுறுத்துகின்றது. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு ஓய்வு கால பண பலன்கள் கிடைக்காமல் இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 26வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

டாக்டர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் விரிவுபடுத்திட வேண்டும்.

திமுக ஆட்சியின் போது 1998 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தில் ஏற்பட்டு வரும் நிதி பற்றாக்குறையினை அரசு போக்குவரத்து கழகங்கள் அரசால் ஒதுக்கப்படும், மகளிர் விடியல் பயணம், மாணவர் இலவச பயணம் மற்றும் பல சமூக நல திட்டங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதியிலிருந்து ஈடு செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 2003 ஆம் ஆண்டிற்கு பின்பு பணியில் சேர்ந்த சுமார் 75,000 தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தின் பலன் அப்போது இருந்த அரசால் மறுக்கப்பட்டது. அத்தொழிலாளர்களையும் இத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்குரிய வருங்கால வைப்புநிதியின் நிர்வாக பங்களிப்புத் தொகை ஓய்வூதிய நம்பகத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் அரசு போக்குவரத்து ஓய்வூதிய நம்பக நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய முடியும். எனவே மேற்சொன்ன தொழிலாளர்களையும் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடியும் வருகின்றனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு போக்குவரத்தில் டாக்டர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

45. இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி தொடங்குவதற்கு 400 ஏக்கர் நிலம் வழங்கிய தொழிலாளர்கள் -வேலை இழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டம் மேல்நல்லாத்தூர் அதிகத்தூர் பகுதியில் 1970 ஆம் ஆண்டில் பிர்லாவுக்கு சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் கம்பெனிக்கு தமிழக அரசால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் 400 ஏக்கர் விளை நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டது. நிலங்களை கொடுத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான முறையில், குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அந்த கம்பெனியில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

அரசு அளித்த உறுதி மொழியை நிறைவேற்றவில்லை. நிலம் இழந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைமையில் போராட்டக் குழு அமைத்து போராடினர். 1997-ம் ஆண்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. உரிமையாளர் மற்றும் நிர்வாகம் மாறியதன் காரணமாக பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை 2019-ம் ஆண்டு நீக்கிவிட்டு ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமனம் செய்து றிசிகி கம்பெனி செயல்பட்டு வருகிறது. அந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஆதரிக்கின்றது. நிலம் வழங்கிய குடும்பத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் அந்த கம்பெனிகளில் வேலை வாய்ப்பு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 26 வது மாநில மாநாடு வலியுறுத்துகின்றது.

46. இடர்பாடு நிதி’ என்ற பெயரில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களை முடக்காதீர்!

கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்கள், அவற்றின் உறுப்பினர்களுக்கு, இரண்டு சதவீத வட்டியில் கடன் வழங்கி வருகின்றன.

இந்த வட்டியில் 1.5% மத்திய கூட்டுறவு வங்கிக்கு இடர்பாடு நிதியாக செலுத்த வேண்டும் என்று அண்மையில் பதிவாளர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்ற உறுப்பினர்கள் இறந்துவிட்டால் அல்லது வேறு வகையில் கடன் செலுத்த முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால், இந்த இடர்பாடு நிதியிலிருந்து கடனை செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

ஆனால் பல சிக்கன நாணயச் சங்கங்களில், வாங்குகிற கடனுக்கு காப்பீடு செய்து அதற்கு மாதந்தோறும் தொகை செலுத்தி வருகின்றனர். ஒருவேளை வேறு காரணங்களால் கடன் தொகையை வசூல் செய்ய முடியாத நிலை ஏற்படுமானால் காப்பீட்டில் இருந்து தொகை பெற்று ஈடு செய்துவிட முடியும். எனவே இடர்பாடு நிதி என்பது சிக்கன நாணய சங்கங்களுக்கு தேவையற்ற செலவாகும்.

ஏற்கனவே இரண்டு சதவீத வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, அதில் 1.5 சதத்தை மத்திய வங்கியில் செலுத்தி விட்டால், வெறும் 0.5% வட்டி வருவாயைக் கொண்டு, கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தை நடத்த இயலாது மூட வேண்டிய சூழல் ஏற்படும்.

எனவே இடர்பாடு நிதி என்ற பெயரில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களை முடக்குகிற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.

47. காவல் மரணங்களை தடுத்திடுக! காவல் சித்திரவதை தடைச் சட்டம் இயற்றுக!

விசாரணையில் உண்மையை கண்டறிய ஏராளமான அறிவியல் முறைகள் வாய்ப்புகள் வந்துவிட்ட பின்பும் கூட, காவல்துறையினரால் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்படும் காவல் மரணங்கள் தொடர்கின்றன.

தமிழ்நாட்டில் 2016ல் இருந்து 2022 வரை 478 காவல் மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. கடந்த நான்காண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இவற்றில் 2020ல் நிகழ்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் மரணமும், அண்மையில் திருப்புவனத்தில் நடந்த அஜித்குமார் காவல் மரணமும் பெரிய அளவுக்கு பேசப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் காவல் மரணத்தில் தமிழ்நாடு முதல் நிலையில் இருக்கிறது

என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை சுட்டுக் கொல்வதைக் கொண்டாடுவதும், சுட்டுக் கொன்றவர்களைப் பெரும் வீரர்களாக மதிக்கப்படுவதும், பாராட்டப்படுவதும் கவலைக்குரியதாகும். ஒரு உயிரை எடுக்கிற உரிமை நீதிமன்றங்களை தவிர வேறு யாருக்கும் இல்லை.

இத்தகைய காவல் மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படுவதும், அதற்கான வழக்குகள் பதிவாவதும், வழக்கு நடந்தாலும் தண்டனை கிடைப்பதும் அரிதாக உள்ளது.

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, பெயரளவுக்கு கேமரா பொருத்தப்பட்டதே தவிர, மிகப் பெரும்பாலான காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இயங்குவதே இல்லை.

காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இயங்காத கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு அந்தக் காவல் நிலைய அதிகாரியை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலைய மரணங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், குடிமைச் சமூக பிரதிநிதிகள் கொண்ட குழு ஆய்வு செய்து பரிந்துரைக்க சட்டபூர்வமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். காவல் மரணக் குற்றவாளிகள் மீதான வழக்குகளை துரிதமாக விசாரித்து தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் உறுதிப்படுத்த, காவல் சித்திரவதை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு சரியாக அமல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

48 போராடும் ஜனநாயக உரிமைகளைப் பறிக்காதே!

அமைதியான வழியில் மக்கள் போராடுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்பட மக்கள் அமைப்புகள் போராட்டங்கள் நடத்த காவல்துறையிடம் அனுமதி பெறுவது முதல் போராட்டம் நடத்துவது வரை தேவையற்ற கெடுபிடிகளை விதிப்பது வாடிக்கையாகி வருகிறது. நியாயமான போராட்டங்கள் பலவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. போராட்டங்களில் பங்கேற்க வருபவர்களை தடுத்து, போராட்டமே நடந்து விடாமல் விரட்டி அடிப்பது, கைது செய்வதாக சொல்லி மண்டபங்களில் அடைத்து வைப்பது போன்ற பல்வேறு உத்திகளை கையாண்டு சட்டப்படி அல்லாத வழி முறைகளின் மூலம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து ஈடுபடுகிறது.

போராடும் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை தருவதைக் கூட காவல்துறை கடுமையாக்கி வருகிறது. தொழிலாளர் பிரச்னைகள், உள்ளாட்சி அமைப்புகளுடான குடிமைப் பிரச்னைகளைக்கூட சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக குறுக்கிப் பார்த்து நசுக்குவது கண்டனத்துக்குரியதாகும்..

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள் அத்தகைய உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை பிறப்பிக்கும் போது காவல்துறையின் அடக்கு முறைகளுக்கு கூடுதல் வாய்ப்பாக அமைகின்றன.

மேலும் இத்தகைய போராட்டங்களின் போது பங்கேற்கும் முன்னணி ஊழியர்கள் மீது வழக்கு போட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வழக்கம் உள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளை காவல்துறை நடத்துவது இல்லை, வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தகவல் தருவதில்லை. இதன் காரணமாக பல நேரங்களில், வழக்கு நிலுவையில் இருப்பதால் பலர் வேலைக்கு சேரமுடியாமல், பாஸ்போர்ட் பெறமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறை கைவிடவேண்டும். இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்யத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாட்டில் போராடும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து, மக்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டு தீர்வு செய்யும் வகையில் காவல்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கடமையாற்றத்தக்க சூழலை உருவாக்க தக்க நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

49 சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் தடுப்பு

உலகளவில் புவி வெப்பமயமாதல் (Global Warming) காரணமாக காலநிலை மாற்றம் தீவிரமாகியுள்ளது. வெப்பநிலை உயர்வு, மழை, கடல்மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி, சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. இந்தியா மற்றும் தமிழ்நாடு இதில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சுற்றுச்சூழல் அழிவு, வன அழிப்பு, தொழில்துறை மாசு, நிலம் – நீர் – காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவை சூழலுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் புவி வெப்பமயமாதல் தடுப்பும் அரசின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இயற்கை வளங்களை சுரண்டுவதை நிறுத்தி, நிலையான வளர்ச்சி கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எதிர்கால தலைமுறைக்காக பசுமையான சூழலை பாதுகாக்கும் பணியை அரசும் மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 26 ஆவது மாநில மாநாடு தீர்மானிக்கிறது.

50. திருப்பூர் மாநகரில் தினமும் சேகரமாகும் குப்பை கழிவுகளுக்கு நிரந்தர தீர்வு காண்க

திருப்பூர் மாநகரில் ஏராளமான பனியன் தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். குடியிருப்புகளும் படிப்படியாக விரிவடைந்து வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், பாறைக்குழியில் கொட்டப்படுவதால் அருகிலுள்ள நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அங்கு குடியிருந்து வரும் மக்கள் குப்பை கழிவுகளை அந்தப் பகுதியில் கொட்டக்கூடாது என குப்பை கழிவு எடுத்து வரும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.

எனவே, அங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திடக்கழிவு மேலாண்மை செய்து, சுகாதாரம் மற்றும் நோய் தொற்று அபாயத்திலிருந்து அப்பகுதி மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26வது மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.

51. இலவசக் கல்வி உரிமைத் திட்ட நிதி வழங்காமல் ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்..!

தனியார் பள்ளிகளில் மழலையர்/ பாலர் கல்வி முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பதற்கு, 2009 ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் உறுதி செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் 2013 முதல் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 4.60 இலட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

கல்விக் கட்டணத் தொகையில் எவ்வளவு வழங்கலாம் என ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வாரியம் ஒப்புதல் அளிக்கும். இத்திட்டத்திற்கான செலவுத் தொகையினை ஒன்றிய – மாநில அரசுகள் 60:40 என்கிற விகிதத்தில் இணைந்து வழங்குகிறது. ஒன்றிய அரசு வழங்கும் நிதி சமக்ர சிக்க்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 8000 தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட மறுத்ததால் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு வழங்கப்படும் ஒன்றிய அரசின் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் கல்வியாண்டில் இருந்து 2024-25 ஆம் கல்வியாண்டு வரையிலான நான்கு கல்வியாண்டுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கீழ் மழலையர்/ பாலர் வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கும் சேர்த்து தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத் தொகையில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தொகை மொத்தம் ரூ. 777.09 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இது இலவசக் கட்டாயக் கல்வித்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசும் ஒதுக்கவில்லை. அந்த மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். கல்வி கட்டணம் செலுத்த இயலாத ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்றல் தடைபட்டுள்ளது.

கல்விக்காக வழங்கப்பட வேண்டிய நிதியினை ஒன்றிய அரசு விடுவிக்காமல் தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் மீதும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய சமூகத்தினர் மீதும் ஒன்றிய அரசு தொடுத்துள்ள தாக்குதலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசு கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியினை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

52 தோல் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்படும் பாலாறை பாதுகாக்க வேண்டும்.

வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாலாற்றில் நீராதாரம் மூலமாக பயன்பெற்று வருகின்றனர். இந்த பகுதிகள் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பாலாற்றில் கலப்பதால் மாசுபடுகிறது.

இது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பாலாறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் அந்தந்த பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட நீராக வெளியேற்றி பயன்படுத்திடவும், நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்கவும் “தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டத்தை” செயல்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தென்பெண்ணை-&பாலாறு இணைப்பு திட்டம் செயல்படுத்துவது மூலமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம், விவசாய நிலங்களுக்கு தேவையான நீராதாரம் பற்றாக்குறையின்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தினை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 26-வது மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.

53. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடுக!

மூத்த குடிமக்களில் உடைமை ஏதும் இல்லாத உயிரியல் வாரிசுகள் எவரும் இல்லாத தனித்து வாழும் முதியோர்களுக்கு மட்டும் தான் தற்போது மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதே போல் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வேறு சில பிரிவினருக்கும் நிபந்தனைகளோடு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் விவசாய தொழிலாளர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் மாத ஓய்வூதியம் என்ற கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு சமூக செல்வத்தை உயர்த்தி கொடுத்து வரும் விவசாய தொழிலாளர்கள் வயது முதிர்ந்த அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் வாழ்க்கை பரிதாபகரமாக நீடிப்பது சமூக அநீதியாகும். நிலமில்லாத வருமான வரி எல்லைக்குள் இல்லாத குடும்பங்களில் முதியோர் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கும் தனி சட்டம் நிறைவேற்றி 58 வயது முதல் மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது மாநில மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

54. விருத்தாசலம் மாவட்டம் அமைத்திடு

கடலூர் மாவட்டம் விரிந்து பரந்த மாவட்டமாக உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் மக்கள் தங்களின் கோரிக்கைகளுக்காகவும், முறையீடுகளுக்காகவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து திட்டக்குடி, நெய்வேலி, விருத்தாசலம், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களை இணைத்து விருத்தாசலம் மாவட்டம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விருத்தாசலம் மாவட்டம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

55. வத்திராயிருப்பு – வருசநாடு மலைப்பாதை திட்டம் அமுலாக்க வேண்டும்.

விருதுநகர், தேனி மாவட்டத்தை இணைக்கும் வருசநாடு மலைப்பாதை திட்டம் அமுலாக்குவதன் மூலம் விருதுநகர் – தேனி பயண தூரமும், நேரமும் மிச்சமாகும். இதன் விளைவாக தேனி, வருசநாடு, புளவந்தல், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வழியாக தூத்துக்குடி தொழில் வழிச் சாலையுடன் இணைப்பதன் மூலம் விவசாயம், தொழில் வளர்ச்சி ஏற்படவும், ஏற்றுமதி அதிகரிக்கவும், சுற்றுலா வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே புலிகள் சரணாலயம் என்ற பெயரில் உள்ள தடையை நீக்கி, நீதிமன்ற தடையாணையை ரத்து செய்ய தக்க நடவடிக்கை எடுத்து, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வத்திராயிருப்பு & – வருசநாடு மலைப்பாதை திட்டத்தை அமுலாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

56. தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்துக.

அரியலூரிலும் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திலும் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலைகளில் பழுதடைந்த எந்திரங்களை சீரமைத்து, ஆலையை நவீனப்படுத்த வேண்டும். இதன் விளைவாக இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதோடு அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.

எனவே போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலைகளை தொடர்ந்து நன்கு இயக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

இன்னும் வரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button