தமிழகம்

நூல் வெளியீட்டு விழா அல்ல, மாநாடு

த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரை

‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது,

“காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்” என்ற இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்பது வரலாற்றுக் கடமை என்று கருதி கடைக்கோடி மாவட்டத்தில் இருந்துகூட வந்திருக்கின்றனர்.

இது நூல் வெளியீட்டு விழா மட்டுமல்ல, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் என்ற உணர்வோடு அவர்கள் வந்திருக்கின்றனர். இது புத்தகத்தைக் கொண்டாடும் நாள். புத்தகத்தை மட்டுமல்ல, தத்துவத்தையும் சேர்த்து கொண்டாடும் நாள் என்ற உணர்வோடு வந்திருக்கின்றனர்.

மாபெரும் கவிஞர் தமிழ்ஒளியின் நூல் தொகுப்புகளை, அண்மையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்டு அற்புதமான உரையை ஒரு மணி நேரம் நிகழ்த்தினார். ஒரு சிறந்த புத்தக வாசகர். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மரியாதைக்குரிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்பு, 2007ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒன்றரை மணி நேரம் உரை நிகழ்த்தினார். ‘உயிரின் சுவாசமல்லவா புத்தகம்‘ என்பது தலைப்பு. வ.உ.சி.பூங்காவில் 10ஆயிரம் பேர் முன்பு அவர் உரையாற்றினார்.

மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து 2017ல் ‘அறிவே கடவுள்’ என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். ‘இலக்கியத்தில் நாகரிகம்‘ என்ற தலைப்பில் இன்னொரு முறை உரை நிகழ்த்தினார்.

நாங்களெல்லாம் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் 1983ஆம் ஆண்டு, காரல் மார்க்ஸ் நினைவு நூற்றாண்டு. அப்போது ‘மானுட நதிகள் எல்லாம் மார்க்சை நோக்கி’ என்று ஒரு கவிதையை கவிரப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார். நீண்ட கவிதை, அந்தக் கவிதையை நாங்கள் படித்துப் பரவசமானோம். ‘மானுட நதிகள் எல்லாம் மார்க்சை நோக்கி’ என்ற கவிதை அது. அப்போது அவருக்கு வயது 30.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் புத்தகத்தை நேசிப்பவர். ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆறு முறை புத்தகங்களைப் பற்றி பேசியவர். அவரை உங்கள் அனைவரின் சார்பில் நெஞ்சார வரவேற்கின்றோம்.

மரியாதைக்குரிய மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களையும், மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியினுடைய மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களையும் நாம் இந்த இடத்திலே பார்க்கிற பொழுது இரண்டு பேரும் சிவப்புத் துண்டு போட்டு, இரண்டு இடங்களிலே அமர்ந்திருக்கின்றனர். இரண்டு பேரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள், ஆளும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். எளிமைக்கும் இரண்டு பேரும் உதாரணமாகத்தான் இருக்கிறார்கள். இரண்டு பேரும கிராமப்புறத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள். இரண்டு பேரும் தமிழ் மண்ணை அடையாளப்படுத்துபவர்கள்.
நாம் அத்தனை பேரும் விரும்புவது இரண்டு பேரும், என்றாவது ஒன்றாக, ஒரே கொடியைப் பிடித்து நில்லுங்கள்.

காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூலில், எந்த இடத்திலும் சார்புத்தன்மை இல்லாமல் வரலாறை வரலாறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வரலாறு வரலாறுதான். வரலாறை வளைப்பதற்கோ, ஒளிப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை.

கவிஞர் கே.ஜீவபாரதி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவர் எழுதியதும், தொகுத்ததும் நூறு நூல்களுக்கும் மேல் இருக்கும். ஜீவபாரதி ஜனசக்தியில் பணியாற்றிய போது, 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்டுகளுடைய வரலாற்றை கிராமம் கிராமமாகச் சென்று திரட்டி ஜனசக்தியில் எழுதினார். பின்னார் அதனைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். அவரால் இன்று வர இயலவில்லை. ஆனாலும் அவருக்கு அனைவரும் சேர்ந்து பாராட்டைத் தெரிவிப்போம்.

இந்த நூறு பேர் அடையாளமாக, நம்முடைய மூத்தவர்கள், முன்னோடிகளாக, நம்முடைய வழிகாட்டிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து பதிவுகள் வர இருக்கின்றன.
எல்லா தியாகிகளும் பதிவுசெய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தினுடைய திட்டம். இன்னொரு செய்தி, இந்த நிகழ்ச்சி மாநாடு போல் அமைந்ததற்கு காரணம், ஒன்று இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்கு இது நூற்றாண்டு. இரண்டாவது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு இது 75ஆவது ஆண்டு, பவள விழா ஆண்டு. இந்த இரண்டு பெரும் சிறப்புகளுடன், இந்தப் புத்தகத்தை வெளியிடுவது மட்டற்ற மகிழ்வளிக்கிறது” இவ்வாறு த.ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button