தமிழகம்

நூறு மாணிக்கக் கற்களில் எதைத் தேர்ந்தெடுப்பது?

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேச்சு

‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல் வெளியீட்டு விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.

அப்போது, “காலம் தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீட்டு விழாவுக்கு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவான, சிறப்பான, உணர்வுப்பூர்வமான வாழ்த்துச் செய்தியைத் தந்திருக்கிறார். அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பது போல, இந்த வெளியீட்டு விழாவுக்குத் தேதி கேட்க அவரிடம் சென்றோம். அப்போது, “நான் வரவில்லை என்றால் நீங்கள் விட்டுவிடுவீர்களா? அல்லது நான் வராமல்தான் இருப்பேனா?” என்று முதலமைச்சர் கேட்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் அவர் இருந்தார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரால் பங்கேற்க இயலவில்லை.

உடல்நலப் பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும், நாம் அவர்களைப் பார்த்தவுடன் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுவோம். ஆனால் அவர் திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைவர், இத்தனை பொறுப்புகள் இருக்கும் போது, எப்படி உழைக்காமல் இருக்க முடியும்? ஆனால், அவருடைய உழைப்பு கரும்பில் சாறு எடுப்பது போல் இல்லாமல், பூவில் தேனெடுப்பது போல் இருக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அதனை உங்கள் அனைவரின் சார்பிலும் வழிமொழிகிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தியாகிகளைப் போற்றக் கூடியவர். இங்கே மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை அமைக்க வேண்டும் என முதலமைச்சருக்குக் கோரிக்கைக் கடிதம் கொடுத்துவிட்டு, அதன் நகலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கொடுத்தார். முதலமைச்சரிடம் நீங்கள் வலியுறுத்தினால்தான் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை அமைக்கப்படும் என்று எங்களிடம் கூறினார். நாங்களும் முதலமைச்சரிடம் பேசினோம்.

சட்டப்பேரவையில் “காரல் மார்க்சுக்கு சென்னையில் சிலை வைக்கப்படும்” என முதலமைச்சர் அறிவித்தார். இதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

2022ஆம் ஆண்டு திருப்பூரில் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்க முதலமைச்சரைச் சென்று சந்தித்தோம். அப்பொழுது சிறாவயலில் ஜீவா ஆசிரமம் நடத்தியது பற்றி எடுத்துக் கூறினோம்.

சிராவயலில் ஜீவா நடத்திய காந்தி ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டுக் காந்தியடிகளே நேரில் சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?” என்று காந்தி கேட்டார்.
அதற்கு “தேசம்தான் என்னுடைய சொத்து” என்று ஜீவா பதிலளித்தார்.

“இல்லை இல்லை. நீங்கள்தான் தேசத்தின் சொத்து” என்று காந்தி கூறினார்.

இந்த நிகழ்வை முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி, ஜீவா, காந்தி சந்திப்பின் நினைவாக, ஆசிரமம் இருந்த சிராவயலில் பிரமாண்டமான மண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதற்கான கடிதமும் கொடுத்தோம்.

இதனை நினைவு வைத்திருந்து, திருப்பூர் மாநில மாநாட்டில் காணொளி வாயிலாக முதலமைச்சர் உரையாற்றும் போது, “சிறாவயலில் ஜீவா காந்தி சந்திப்பு நினைவு மண்டபம் கட்டப்படும்” என அறிவித்தார். அந்த நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதனை காணொளி வாயிலாகத் திறந்து வைக்காமல், நேரில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க உள்ளேன். அந்த நினைவு மண்டபத் திறப்பு விழாவுக்குப் பல்லாயிரக்கணக்கில் நீங்களும் திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

வைரமுத்து வரிகளில் “மார்க்சியமும் மின்சாரமும் இல்லாமல் இனி எந்தத் தேசமும் இயங்காது.” இது தெரியாமல் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகும் என்கிறார்கள் சிலர்.

‘காலந்தோறும் கம்யூனிஸ்டுகள்’ என்ற இந்த நூல் எங்கே தொடங்கி, எங்கே முடிகிறது?

இரண்டு தொகுதி வந்திருக்கிறது. நூறு பேர்தான் இடம்பெற்றுள்ளனர்.

கடலுக்குக் கரை கிடையாது. கல்விக்கு எல்லை கிடையாது. கம்யூனிஸ்டுகளின் தியாகத்திற்கும் எல்லை, அளவு கிடையாது. இரண்டு தொகுதியிலும் 100 பேரைப் பற்றி மட்டும்தான் வந்துள்ளது. கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களாக இருந்தாலும் அவர்களின் தியாகத்தை மறுக்க முடியாது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் குறிப்பிட்டதைப் போல, எந்தப் பாகுபாடும் இன்றி இந்த நூல் வெளிவந்துள்ளது.

சென்னை மாகாணத்தில் முதல் கிளை அமையக் காரணமாக இருந்தவர் அமீர் ஹைதர்கான். அவருடைய வரலாற்றில் தொடங்கி, தா.பாண்டியனில் முடிவடைகிறது. இந்த இரண்டு தொகுதியில் நூறு பேர் இடம்பெற்றுள்ளனர். இன்னும் நூறு, ஆயிரம் என வந்துகொண்டே இருக்கும். அவ்வளவு கம்யூனிஸ்டுகளின் வரலாறு எழுதப்பட வேண்டி இருக்கிறது.

இந்த இரண்டு தொகுதியில் உள்ள ஒவ்வொருவரைப் பற்றிப் படிக்கும் போதும் இரத்தக் கண்ணீர் வடிக்கிற மாதிரிதான் இருக்கும்.

நூறு மாணிக்கக் கற்களை முன்னால் வைத்து நீ ஏதாவதொரு மாணிக்கக் கல்லைத் தேர்ந்தெடு என்றால், எப்படி ஒரு கல்லை எடுக்க முடியும்? நூறுமே மாணிக்கக் கல்தான். ஒன்றை மட்டும் எப்படித் தனியாக எடுக்க முடியும்? ஆகவே, இது ஒரு பெரும் கட்சியினுடைய நூற்றாண்டு என்கிற முறையில், கம்யூனிஸ்டுகளுடைய அளப்பரிய தியாகத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த முயற்சி எடுக்கப்பட்டது. ஜீவபாரதி ஏறத்தாழ ஓராண்டு காலம் இதற்காகச் செலவிட்டு மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார்.

அடுத்தடுத்து 3ஆம் தொகுதி, 4ஆம் தொகுதி, 5ஆம் தொகுதி எனத் தொடர்ச்சியாக வெளிவரும், வெளிவரவேண்டும்.

இந்த இரண்டு தொகுதி நூல் முழுவதும் ஆர்ட் பேப்பரில் வந்துள்ளது. நான் அறிந்தவரை கம்யூனிஸ்ட் இயக்க நூல் முழுவதும் ஆர்ட் பேப்பரில் வெளிவருவது இதுதான் முதல் தடவை. இது ஒரு சிறப்பு.

தலைவர்கள் படங்கள் அனைத்தும் வரையப்பட்ட ஓவியமாக இடம்பெற்றுள்ளது. இதற்கான பொறுப்பு திருவண்ணாமலை ஓவியர் அன்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மிகச்சிறப்பான முறையில் வரைந்துள்ளார். அவருக்கும் இந்த நூலைத் தொகுத்துக் கொடுத்த கவிஞர் ஜீவபாரதிக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

என்.சி.பி.எச் நிறுவனம் அண்மைக்காலமாக மிகச்சிறப்பான நூல்களை வெளியிட்டு வருகிறது. மாமேதை லெனின் தேர்வு நூல்கள், கவிஞர் தமிழ்ஒளியின் 6 தொகுப்புகள், தமிழ்நாடு அரசுடன் இணைந்து அம்பேத்கர் நூல்கள் என வெளியிட்டுள்ளது. தற்போது ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 1000 புத்தகங்கள் அச்சடித்தார்கள். ஆயிரமும் விற்பனையாகி விட்டது. அடுத்து, எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் மலிவு விலையில் வெளியிடுங்கள் என்று கவிஞர் வைரமுத்து ஆலோசனை கூறியிருக்கிறார். அதனை என்.சி.பி,.எச் நிறுவனம் பரிசீலிக்க வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button