தமிழகம்

கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு எது தெரியுமா?

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை

‘‘இந்த இரண்டு தொகுப்புகளில் நிறைந்திருப்பது என்ன தெரியுமா? தியாகம் தியாகம் மட்டும்தான். தியாகம் இல்லாத இலக்கியங்கள் வெற்றிபெறுவதில்லை. தியாகம் இல்லாத போர்க்களம் நிறைவு பெறுவதில்லை’’ என்று கவிப்பேரரசு வைரமுத்து பலத்த கரவொல்லிக்கு இடையே கூறினார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை வருமாறு :

இந்திய வரலாற்றில் பெருமை பிரிட்டிஷ் பேரரசின் கீழும், இந்தியப் பேரரசின் கீழும் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் காயப்படுத்தப்பட்ட கட்சி இந்தியாவில் இல்லை. என்பதில் இரண்டு கருத்து இன்றி எந்த நிலையிலும் சொல்லலாம். அதற்குக் காரணம் ரஷ்யப் புரட்சி. 1917 இல் ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி. ரஷ்ய புரட்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு பயந்தது. காங்கிரசைப் பார்த்து அல்ல கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்து.
காங்கிரஸ் பார்த்து பயப்படாத பிரிட்டிஷ் பேரரசு கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்து அஞ்சியது. ரஷ்யாவில் மாகாளி கடைக்கண் வைத்தாள் என்று பாரதி பாடினானே அந்த புரட்சி ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்தான் முடியும் என்பதால் பிரிட்டிஷ் பேரரசு கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்துப் பயந்தது. அதனால்தான் அதன் மீது தடை விதித்தது.

வசீகரமான கட்சி, வளர்கிற கட்சி, மக்களைச் சேர்ந்த கட்சி, உணர்ச்சியும் உழைக்கும் தலைவர்களைக் கொண்ட கட்சி, வெல்லக்கூடிய சித்தாந்தத்தை உடைய கட்சி, இந்தக் கட்சி இந்தியாவில் பரவினால் பிரிட்டிஷ் அரசுக்கு மாத்திரம் அல்ல இந்தியாவின் அடிப்படைக்கே கூட வேறொரு புதிய கோணம் வந்துவிடும் என்று அஞ்சியது பிரிட்டிஷ் அரசு.

வாழை நிலைக்குது சோலை தழைக்குது
ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது
கூழைக்குடிக்குது; நாளைக் கழிக்குது
ஓலைக்குடிசையில் ஒட்டிக்கிடக்குது

என்ற விளக்கத்தோடு வெளிவந்தவன் மக்களோடு மக்களான உழைக்கும் மக்களை அறிந்தான். எனவே இந்தக் கட்சி இந்தியாவில் ஒரு புரட்சியை, மாற்றத்தை, அடிப்படையைத் தகர்க்கக் கூடிய ஒரு புதிய சித்தாந்தத்தைக் கொண்டிருக்கிறது என்பதனால் மறுக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது, தகர்க்கப்பட்டது. உண்மையாகச் சொல்லப் போனால் இந்த வார்த்தையை நான் தெரிந்து பயன்படுத்துகிறேன் வேட்டையாடப்பட்டது.
இத்தனை வேட்டைகளுக்குப் பிறகும் இத்தனை எதிர்ப்புகளுக்குப் பிறகும், இத்தனை ஆயுதங்களுக்குப் பிறகும் இத்தனை சட்டங்களுக்குப் பிறகும் துப்பாக்கிகளுக்கும் தோட்டாக்களுக்கும் தூக்கு மேடைகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்கிற ஒரு கட்சி. உண்மையானவர்கள் இதயத்தில் கட்சி நிலை பெற்று விட்டது.

கம்யூனிசம் என்கிற தத்துவம் இந்த மண்ணில் மட்டுமல்ல அகிலம் முழுக்க நிலைபெறும் என்ற நம்பிக்கையோடுதான் இன்றைய இளைஞனும் நாளைய இளைஞனும் திகழ்வான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதற்குப் போராடியவர்களின் கதைகள்தான் இந்தக் காலம் தோறும் கம்யூனிஸ்டுகள் என்ற இரண்டு பகுதிகளின் கதை.

இந்நிகழ்ச்சிக்கு வந்தது உங்களுக்கு ஒரு வரலாறு. நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டது உங்களின் வாழ்வியல் கௌரவம். இந்தக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணக்கூடிய தருணத்தில் பாடுபட்ட நூற்றுவரின் வரலாற்றுப் பதிவு பெற்ற காலகட்டத்தில் காமராஜர் அரங்கத்தில் நான் ஒரு மூலையில் இருந்தேன், ஒரு நாற்காலியில் இருந்தேன் என்பதுதான் உங்களின் வாழ்க்கையில் வரலாறு. கட்சியில் இதுவரை நீங்கள் பார்வையாளராக இருந்தாலும் இன்று முதல் பங்குதாரர்களாக மாறுகிறீர்கள்.

இந்த இரண்டு தொகுப்புகளில் நிறைந்திருப்பது என்ன தெரியுமா? தியாகம் தியாகம் மட்டும்தான். தியாகம் இல்லாத இலக்கியங்கள் வெற்றிபெறுவதில்லை. தியாகம் இல்லாத போர்க்களம் நிறைவு பெறுவதில்லை. தியாகம் இல்லாத இதிகாசம் படிக்கப்படுவதில்லை. தியாகம் இல்லாத குடும்பம் வளம் பெறுவதில்லை. தியாகம் இல்லாத கட்சி வாழ்வதில்லை. தியாகத்தின் அடிப்படையில் விளங்குவது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. ஒரு செய்தி இங்கு சொல்லட்டுமா உங்கள் கர ஒளியைக் கேட்கிற போது, கண்களைப் பார்க்கிறபோது, உங்கள் உணர்ச்சிகளை உடல் உள்வாங்குகிற போது, உங்களுடைய உணர்ச்சியும் ஆயிரம் பாம்புகள் புற்றுக்கு மேலே தலையெடுத்துச் சென்று கொண்டாடுவது போன்ற தோற்றத்தைப் பார்க்கிற போது பேசு, வைரமுத்து பேசு என உள்ளம் துடிக்கிறது. ஆனால் அளந்து பேச வைரமுத்து என்று காலம் தவிக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பெரிய விஷயம் என்ன தெரியுமா? குடும்பமே கம்யூனிஸ்ட் குடும்பமே தியாகம் குடும்பமே அந்த கருத்துக்கு உடன்பாடு. கம்யூனிஸ்ட் மட்டும் தன் குடும்பத்தையே கம்யூனிஸ்ட் ஆக மாற்றி இருப்பார். அவன் உதிரத்தில் அவன் நரம்பில் அவன் சதையில் அணுக்களில் அது ஓடிக்கொண்டிருக்கும். மணலி கந்தசாமி தலைமறையாக இருக்கிறார். இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டது. அவ்வப்போது மனைவியை மட்டும் வந்து பார்த்துச் செல்கிறார்.

யாருக்கும் தெரியாது காவல்துறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை சுற்றத்திற்குத் தெரியாது ஊருக்கு தெரியாது தெருவுக்கு தெரியாது வந்துட்டுப் போகிறார் கண்டுபிடிக்க முடியவில்லை காவல்துறை மனைவியைக் கைது செய்தது. இதுவரைக்கும்தான் தங்கம் சொன்னார் மிச்சத்தை வைரம் சொல்கிறேன்.

நீதிமன்றத்தில் கேட்கிறார்கள், உங்கள் கணவரை எப்போது பார்த்தீர்கள்? பார்க்கவில்லை. எவ்வளவு நாளாச்சு பார்த்து? பல மாதங்கள் ஆயிடுச்சு. பார்க்கவே இல்லை, பார்க்கல. வரவே இல்லை. பிறகு எப்படி கர்ப்பமாக இருக்கிறீர்கள்.

அந்த ஆ ஒன்று போதும் ஆயிரம் அர்த்தம் சொல்லும் ஒருவர் சொன்ன குரலில் ஒட்டுமொத்த இயக்கத்தின் வலி தெரிகிறது.

மணலி கந்தசாமி மனைவியாகிய மாதரசி மீது வீசப்பட்டது. எப்படி கர்ப்பமான? என் கர்ப்பத்திற்குக் காரணம் என் கொழுந்தனார். சொல்லியது பொய், உண்மைக்குப் புறம்பானது.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

திருவள்ளுவனுக்கு அதற்குப் பொருள் தெரியாது. மணலி கந்தசாமி மனைவிக்குத் தெரியும்.

நான் பொய் சொல்கிறேன். இந்தப் பொய் என் மானத்தைச் சிதைக்கிறது. ஆனால் கட்சியைக் காப்பாற்றுகிறது. என் தலைவனைக் காப்பாற்றுகிறது. மானம் பெரிதா கட்சி பெரிதா உயிர் பெரிதா உயிரை விட மானத்தை விட கட்சி பெரிது. லட்சியம் பெரிது என்று கருதுகிற மாதரிசிகளை கொண்டது இந்த இயக்கம்.

பாலுவின் கதை தெரியுமா? இதில் பதிவாகியுள்ளது.

ஜீவ பாரதியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். தூக்கு மேடை பாலு. உசிலம்பட்டியில் ஆர்வி மில்லில் வேலை பார்த்தார். செண்பகம் சேவை என்கிற ஏட்டு கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறார் என்பதற்காக கொலையுண்டு போனார். கொலை செய்யப்பட்ட பழி பாலுமற்றும் ஆறு பேர் மீது விழுந்தது. அந்த ஏழு பேர் மீது விழுந்த பழி விசாரணைக்கு வந்த போது‌ 6 பேருக்கு ஆயுள் தண்டனை தூக்கு மேடை பாலுவுக்கு மட்டும் தூக்கு தண்டனை. ஒருவனுக்கு மட்டும் தூக்கு தண்டனை. விடிந்து விடியாத பொழுது முடிந்தும் முடியாமல் போகப்போகிறது ஒரு உயிர். அவனைக் கொட்டடியிலிருந்து அழைத்துச் செல்கிறார்கள்.

வேதம் சொல்கிறது மனிதன் மனிதன் சாவுக்கு அஞ்சுவதில்லை, வேறு எதற்கு அஞ்சுகிறான். மரண அவஸ்தைக்குத்தான் அஞ்சுகிறான். நெஞ்சு நிமிர்த்திக் கொட்டடிக்குப் போகிறார். போகிறபோது கொட்டடியில் இருந்த கைதிகள் கத்துகிறார்கள். வாழ்க பாலு! பாலு வாழ்க! வாழ்க பாலு! பாலு வாழ்க! போதும் என்று விட்டது பாலுவுக்கு. எதற்கு வாழ்த்து, ஒரு சுத்தமான கம்யூனிஸ்ட் தனிப் புகழை விரும்ப மாட்டான்.

என் மீது என்ன புகழ் எனக்கென்ன கிரீடம். கொட்டடிகளில் நடைபெற்ற கைதிகளைப் பார்த்துச் சொன்னான். நான் விடைபெறுகிறேன் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போகிறேன். என் கழுத்து எலும்பு கொஞ்ச நேரத்தில் முறிக்கப்படும். என் மூளைக்குச் சேர வேண்டிய ஆக்சிஜன் அறுபட்டு போகும். ஆக்சிஜன் சேராவிட்டால் மூளை மூன்று நிமிடத்தில் மரணித்து விடும். அந்த மூன்று நிமிடங்களுக்குப் பிறகு பாலு என்பவனின் சடலம் இந்தச் சிறைக் கொட்டடியில் கிடக்கும். அப்போது நீங்கள் முழங்கப் போவது பாலு வாழ்க என்று அல்ல இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிடுங்கள் என்று கூறிவிட்டுத்தான் தூக்கமடைக்குச் சென்றான். துடிக்கத் துடிக்கச் செத்தான். இந்தத் துயர வரலாறு யாருக்குத் தெரியும்?

நண்பர்களே தலைவர்களின் வரலாறு தெரியும் மூத்தவர்களின் வரலாறு தெரியும் ஒரு முறை லத்தி சார்ஜ் வாங்கியவரின் அடையாளம் தெரியும். முகம் தெரியாத தியாகிகளின் கதை எங்கே? கண்ணுக்குத் தெரியாத, தொட்டுப் பார்க்க முடியாத வேர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதுதான் இந்நூலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒரு பெண்மணியின் கதை சொல்லி விடைபெற ஆசைப்படுகிறேன்.

பக்கத்துக் கொட்டடியில் தாய் இருக்கிறாள். இந்தக் கொத்தடியில் இளம் பெண் இருக்கிறாள். தாயும் போராளி மகளும் போராளி. இருவரும் 22 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்ட்ரல் சிறையில் கொடுமைகளை எதிர்த்துப் போராட்டம் முடிவுக்கு வருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் முறியடிக்கப்பட்டு விட்டன. செய்தி வருகிறது பக்கத்து அறையில் உள்ள உன் தாய் இறந்து விட்டாள்.
அந்த இளம் பெண் கேட்கிறார், என் தாயின் முகத்தை நான் பார்க்க முடியுமா? முடியும் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு நான் நிரந்தரமாக வெளியேறுவேன் என்று எழுதிக் கொடு இறந்த உன் தாயின் சடலத்தைக்காட்டுகிறோம் எங்கிறார்கள்.

அந்தப் பெண் சொல்கிறாள் வேண்டாம் என் தாயின் முகத்தை நான் பார்க்கவே வேண்டாம். கொஞ்ச நேரத்தில் தாயின் சடலம் கடந்து போகிறது. சிறைக் கம்பிகளுக்கு உள்ளே இருந்து கடந்து போகும் சடலத்திற்கு வணக்கம் சொல்லி அழுகிறார் அந்த பெண். இறந்து போன தாயின் பெயர் லட்சுமி மறுக்கப்பட்ட பெண்ணின் பெயர் பாப்பா உமாநாத்.

இந்தத் தியாகங்கள் எல்லாம் எதற்கு? இந்தத் துன்பங்களைத் தாண்டியது எதற்கு? இந்தத் தன்னல மறுப்பு எதன் பொருட்டு? இதுதான் இப்போதுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மீது வீசப்படும் கேள்வி. இந்த தியாகங்களுக்கெல்லாம் என்ன பலனை அனுபவிக்கிறீர்கள்? என்ன பலனை அனுபவிக்கப் போகிறீர்கள்? இயக்கத்தை எந்த திசையில் நகர்த்தப் போகிறீர்கள்? இன்னும் என்னென்ன திட்டங்கள் வகுக்கப் போகிறீர்கள்?
இதுதான் நம் முன்னோர்கள் நமக்கு செய்த மிகப்பெரிய தியாகங்களுக்கு அடையப் போகிற பலன். இந்த கேள்வியைத்தான் கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பார்த்து கேட்க வேண்டியவனாக இருக்கிறேன்.

உங்களுக்கு உறவினர்கள் நாங்கள் எல்லாம் உங்களது தோழர்கள் எங்கள் இதயத்திலும் பல எண்ணங்கள் உண்டு. காலம் திரை போட்டு வைத்திருக்கிறது. காலம் மூடி போட்டு வைத்திருக்கிறது. வெல்க பொதுவுடமை! வாழ்க கம்யூனிஸ்ட் கட்சி’’ இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button