

‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இயலாததால், அவர் சார்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு நூலின் இரண்டு தொகுதிகளையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது,
“இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட முதலமைச்சர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவுரையால், இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துகொள்ள இயலாத சூழலில், அவர் சார்பாக நான் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
காமராசர் அரங்கம் நிரம்பி வழிகிறது. மேடையிலிருந்து பார்க்கும் போது, “எங்கெங்கு காணினும் சக்தியடா” என்ற வரிகளுக்கு ஒப்ப, எல்லாம் சிகப்பு மயமாக காட்சியளிக்கிறது. சிவப்புத் துண்டுகளாக பரிணமித்திருக்கிறது.
தோழர் டி.ராஜா அவர்கள் தனது தலைமை உரையில், “நாம் அனைவரும் ஓர் அணியாக திரண்டு நிற்க வேண்டும், அதற்கான காலம் வந்திருக்கிறது” என்று கூறினார். நான் இந்த அரங்கத்தைப் பார்க்கிற போது, அதைப் பரிபூரணமாக உணர்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர்கள், அந்த இயக்கத்தின் தோழர்கள், கழகத்தின் சார்பில் நான், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் செல்வப் பெருந்தகை, முஸ்லிம் லீக் இயக்கத்தின் சார்பில் பேராசிரியர் பெருந்தகையார் உட்பட பல்வேறு இடதுசாரிய, பெரியாரிய, அம்பேத்கரிய முன்னணி தோழர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் நிரம்பி இருக்கிறார்கள். மதச்சார்பற்ற கொள்கையில் பற்றுக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் இங்கே நிரம்பி இருக்கிறார்கள். ஓர் அணியாக குழுமி, இந்த அரங்கை நிரப்பி இருக்கிறார்கள். நம்மையெல்லாம் ஒரு குடையின் கீழ் திரட்டி இருப்பது காமராஜர் அரங்கம் என்பதால் எனக்கு மகிழ்ச்சி.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் கணிதத் தத்துவமாக அறிவோம். ஆனால் பொதுவாழ்வில் நூற்றாண்டுகளைக் கடந்த போதும், மாறாத வாழ்க்கை முறை என்பது கம்யூனிஸ்டுகளுடையது என்பதையும் நாம் அறிவோம்.
கம்யூனிசம் என்பது சாதாரண மக்களுக்காக, அடிப்படை மக்களுக்காக, உழைக்கும் வர்க்கத்திற்காக உருவாக்கப்பட்ட தத்துவம். அதன் தேவை என்றைக்கும் தீர்ந்து போவதில்லை, அவர்களின் குரல் இந்தப் பூமிப் பந்தில் என்றென்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இந்த நூலுக்கு தோழர் முத்தரசன் அவர்கள் அருமையான முன்னுரை எழுதி இருக்கிறார். பாயிரம் அல்லது பனுவல் என்று தமிழ் இலக்கியத்திலே சொல்லி இருக்கிறார்கள். பாயிரம் என்ற வார்த்தையை முன்னுரை என்று எடுத்துக் கொண்டால், இந்த நூலுக்கு ஒரு மிகச் சிறப்பான முன்னுரையை தோழர் முத்தரசன் எழுதி இருக்கிறார்.
அந்த முன்னுரையில் ஓரிடத்தில் சுயராஜ்யம் நமக்கு கிடைத்திருக்கலாம் ஆனால், சுகராஜ்யம் கிடைத்ததா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். அது இன்னமும் நமக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த சுகராஜ்யம் நமக்கு கிடைத்தே தீர வேண்டும் என்பதற்காகத்தான் ஆயிரமாயிரம் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். தங்களுடைய சொந்த வாழ்க்கையில் பல்வேறு துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள். தங்கள் சொத்து, சுகங்களை இழந்திருக்கிறார்கள்.
இந்த நூலில் நூறு பேரை எடுத்துக் கொண்டு, அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். சிங்காரவேலரில் தொடங்கி, மதுரை மாரி, மணவாளன் வரை தொட்டு 100 பேரின் தியாக வரலாற்றை, மிகச் சிறப்பான நூலாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தொகுத்துக் கொடுத்த ஜீவபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.
தோழர்களின் தியாக வாழ்க்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு முன்னர் எத்தனை தோழர்கள் தியாக வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் முன்னேறி செல்ல வேண்டிய பாதையின் கோடுகள் நமக்கு தீர்மானமாக தெரியும்.
மகாத்மா காந்தி மறைவுற்ற போது, “இப்படிப்பட்ட மனிதர் நம்மிடத்தில் வாழ்ந்தார் என்பதை, நமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் நம்பவும் மறுப்பார்கள்” என்று ஐன்ஸ்டீன் சொன்னார்.
இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிற போது, இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடிய சமூகத்தில், நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்ற பெருமையை பெற்றிருக்கிறோம்.
இவர்களில் பலரை நாம் பார்த்ததில்லை, சிலரோடு சமகாலத்தில் வாழ்ந்து இருந்திருக்கிறோம். தியாகத் தலைவராக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய இரா.நல்லகண்ணு, தோழர் தா.பாண்டியன், ஐயா சங்கரய்யா போன்றவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் அறிந்திருக்கிறோம். இந்நூலில் உள்ள இன்னும் பலரை நாம் அறிந்திருக்கிறோம்.
தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். ஒரு தென்னை மரத்தை நாம் பார்க்கிற போது, அந்த தென்னை மரத்தில் இருக்கக்கூடிய மட்டைகள் எல்லாம் ஒவ்வொன்றாக விழுந்த போதும், அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். பின்னால் வரக்கூடியவர்கள், இந்தத் தழும்புகளைத் தொட்டுத் தான் மேலே ஏற முடியும் என்ற நிலையை அது உருவாக்கி இருந்தது. அப்படித்தான் நமது தோழர்கள்,
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, செய்த தியாகம் இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாக, நம்மையெல்லாம் வழிநடத்தக் கூடியதாக விளங்கி வருகிறது.
எத்தனையோ பேருடைய வாழ்க்கை நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்த போது, பல வரலாறுகள் நெஞ்சைத் தொட்டன. ஜாம்பவன் ஓடை சிவராமனை சுட்டுக் கொள்வதற்காக அழைத்துச் சென்ற போது, அவரை நைச்சியமாக பேசி, நயவஞ்சமாகப் பேசி, நீ இளைஞனாக இருக்கிறாய், எனவே இங்கிருந்து நீ சென்று விடு என்று சொல்கிற போது, கம்யூனிஸ்டுகளுக்கு உரிய நெஞ்சுரத்தோடு அவர் திருப்பிச் சொல்லுகிறார். “நான் திரும்பிச் சென்றால், என்னுடைய முதுகில் சுட்டுக் கொல்வீர்கள் என்பதை அறிவேன். நீங்கள் என்னைச் சுடுவதாக இருந்தால் என் நெஞ்சிலேயே சுடுங்கள், நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். ஒரு மாவீரனாக நான் அவரை கண்டேன்.
இங்கே தேசிய விடுதலை இயக்கத்தைப் பற்றிப் பேசினார்கள். செங்கொடி காத்த சிகப்பியைப் பற்றி பொதுச்செயலாளர் டி.ராஜா பேசினார். செங்கொடி காத்த சிகப்பி மகளிரின் தியாகத்திற்கு மிகச் சிறப்பான உதாரணம் என்பதை அறிய முடிகிறது.
இந்த நூலின் முன்னுரையைப் படிக்கிற போதும் சரி, நூலைப் படிக்கிற போதும் சரி, மணலி கந்தசாமி அவர்களுடைய வாழ்க்கையை, அவருடைய தியாகத்தைப் படிக்கிற போது நான் உறைந்து போனேன். அவரது தியாகத்தைப் பற்றி எங்களது தோழர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்வோம்.
1971 இல் விவசாயிகளுக்கான அனுபவ போக சட்டத்தை கலைஞர் அவர்கள் கொண்டு வந்து, ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொடுத்தார். அப்போது, ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தி சாதிக்க முடியாத காரியத்தை, கலைஞர் அவர்கள் ஒரு துளி பேனா மையால் சாதித்து விட்டார் என்று மணலியார் சொன்னதை பெருமையோடு கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணலியார் குடும்பம் எத்தகைய தியாகத்தை செய்திருக்கிறது. அதற்கு ஈடு இணையே கிடையாது. அப்படிப்பட்ட தியாக சீலர்கள் நிரம்பி இயக்கம் இது. அந்த தியாகச் சீலர்களுக்கு உங்கள் சார்பில், என்னுடைய சார்பில் நன்றியை காணிக்கையாகுகிறேன்.
இந்த அரங்குக்கு வந்து உங்களிடத்தில் உரையாற்றி இருக்க வேண்டிய நம்முடைய முதலமைச்சரின் சார்பில், என்னுடைய நெஞ்சார்ந்த, செம்மார்ந்த வீரவணக்கத்தை நான் வணங்கித் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் வாழ்த்துக் கடிதத்தை முழுவதும் படித்து, இரா.முத்தரசனிடம் ஒப்படைத்தார்.