கட்டுரைகள்

ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பு

– கே.முருகன்

ஒன்றிய அரசு சார்பில் 1963 ஆண்டின் அலுவல் மொழி சட்டம் பிரிவு 4 ன் கீழ் அலுவல் மொழி நாடாளுமன்றக்குழு உள்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை இந்தி மொழி பயன்பாடு குறித்து அறிக்கை தரும்.

இந்தக் குழுவில் மக்களவையின் 20 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள் என்று 30 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது பா.ஜ.க அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் தலைமையில் அமைந்துள்ள குழுவில் ஆளும் பா.ஜ.கவைச்  சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

மேலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம், பிஜு  ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சிவசேனா கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர்.  அலுவல் மொழி நாடாளுமன்ற குழுவின் சார்பில் நேரடியாகக் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்கப்படும். இந்தக் குழு சார்பில் 10 தொகுப்பு பரிந்துரைகள் குடியரசு தலைவரிடம் அளித்துள்ளனர்.

அமித்ஷா தலைமையிலான குழு கடந்த 2022 செப்டம்பர் 9 ஆம் தேதியன்று 11வது தொகுப்பு அறிக்கை குடியரசு தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2021 ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தக் குழுவின் 36வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் தந்துள்ளது.

இந்தக் குழுவின் 37வது கூட்டம், இந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி அமித்ஷா தலைமையில் நடந்து, அறிக்கையைக் குடியரசு தலைவருக்கு அனுப்பவும் ஒப்புதல் பெற்றது. இது தொடர்பாக, ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பிலும் ஊடகங்களுக்கு செய்தி அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், அலுவல் மொழி 37 வது கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உள்துறை  சார்பில் இணை அமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா, நிஷித் பிரமானிக், குழுவின் உபதலைவரும் பிஜு ஜனதாதள மூத்த தலைவருமான பிரதஹரி மாதப் மற்றும் குழுவின் உ றுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. குழு அனுப்ப வேண்டிய 11 வது தொகுப்பு அறிக்கையை அனுப்புவதற்கு அமித்ஷா ஒருமனதாக ஒப்புதல் தந்து இறுதி செய்யப்பட்டதாகவும் கூறி உள்ளது.

இந்தக் குழுவின் கால வரம்பிற்குள் இக்குழு இதுவரை 3 அறிக்கை தந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழுவின் தலைவர் அமித்ஷா அவர்கள் 1 முதல் 11 வரையிலான தொகுப்பு அறிக்கை அனைத்தையும் அமல்படுத்துவதற்கு ஜுலை மாதம் மீண்டும் கூட்டத்தை நடத்துவதற்கு வலியுறுத்தியதாகவும் அறிகையில் கூறப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் இந்தி மொழி அறிவை மாணவர்கள் அறிந்து கொள்ளவும் இந்தி கற்பிக்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தருவது,

இந்தி மொழி அகராதி புதுப்பித்து மீண்டும் வெளியிடுவது,

அனைத்து அமைச்சகங்களின் துறை செயலாளர்களுடன் பேசிய பிறகு 1 முதல் 11 வரையிலான அறிக்கை அமலாக்கம் தொடர்பாக பரிசீலிக்க அமலாக்கக்குழு அமைப்பது உட்பட 3 ஆலோசனைகளை உள்துறை அமைச்சர் அளித்தார் என்று அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

அரசை நடத்துவதற்கு அலுவல் மொழி அவசியம் என்று பிரதமர் முடிவு செய்து உள்ளார். அதற்கு இந்தி மொழி பயன்பாட்டை மேம்படுத்துவதாக இருக்க  வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை ஒன்றுபடுத்துவதற்கு அலுவல் மொழி கொண்டு வரும் நேரம் வந்து விட்டதாகவும் அறிக்கையில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. குறிப்பாக, நாட்டின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் தொடர்பு மொழி, அலுவல் மொழி, இந்திய மொழியாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆங்கிலத்திற்கு மாற்று தொடர்பு மொழி இந்தியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கூறியதாக அறிக்கையில் உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது, ஒன்றிய அமைச்சரவையின்  குறிப்புகள் அனைத்தும் 70 சதவீதம் இந்தியில் தயார் செய்வது குறித்து கூறியுள்ளார். வடகிழக்கின் 8 மாநிலங்களில் 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 9 பழங்குடி சமூக மக்கள் தங்கள் பேச்சு மற்றும் எழுத்து முறையைத் தாவனகிரிக்கும் மாற்றியுள்ளதாக கூறியுள்ளார் எனவும் அறிக்கை மேற்கோள் காட்டி உள்ளது.

வடகிழக்கின் 8 மாநிலங்களும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் கற்பிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது. அமித்ஷா தலைமையிலான குழுவின் 11வது தொகுப்பு அறிக்கையில் சுமார் 112 பரிந்துரைகள் இடம் பெற்று இருப்பதாகச் செய்தி வந்துள்ளது.

தொழில் நுட்பம், தொழில் நுட்பம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றில் இந்தி மொழியும், மாநில மொழிகளும் ஆங்கிலத்திற்கு மாற்றாக கட்டாயம் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

ஒன்றிய அரசு சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள், தொலை நகல், மின்னஞ்சல், அழைப்பிதழ்கள் ஆகியவை கட்டாயமாக, எளிமையான வகையில் இந்தி மொழியில் அனுப்ப வேண்டும்.

படிப்படியாக, ஆங்கிலத்தை விருப்ப மொழியாக்க வேண்டும். அரசுப் பணி தேர்வுகளில் ஆங்கிலத்தில் கேள்வித் தாள் வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை 3 மண்டலங்ளாகப் பிரித்துள்ளது. இதில் உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், சத்திஷ்கர், உத்தரகாண்ட், ஜார்கண்ட், அரியானா, ஹிமாச்சலம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தமான் நிகோபார் தீவு ஏ பிரிவிலும்,

குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசம் சண்டிகர், டாமன் டையூ, தாத்ரா நகர் ஹவேலி ஆகியவை பி பிரிவாகவும், 

நாட்டின் பிற பகுதிகள் சி மண்டலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஏ பிரிவில் உள்ள கல்வி நிலையங்கள் இந்தி மொழியைக் கட்டாயமாகவும் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் மொழிகளிலும் பயிற்று மொழியாக இருக்லாம் என்றும் ஆங்கிலம் விருப்ப மொழியாக மாற்றப்பட வேண்டும்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் 20 முதல் 30 சதமாக பயன்பாட்டில் இருக்கும் இந்தி மொழியை 100 சதமாகப்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அறிக்கை குறித்து குழுவில் உள்ள உப தலைவர் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பர்து ஹரி மாதப்,  2வது உப குழுவின் கன்வீனர் ரிட்டா பகுகுணா ஜோஷி, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் குப்தா ஆகியோர் 2020ஆண்டு ஒன்றிய அரசு குறிப்பிட்ட புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், அந்நிய மொழியான ஆங்கிலம் மாற்றப்பட வேண்டும் என கூறியுள்ளதாக தேசிய ஊடகங்களில் செய்தி  வந்துள்ளது.

193 நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக இந்தியும் சேர்க்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசுப்பணி தேர்வு மைய ஊழியர்கள் கட்டாயம் இந்தி மொழி அறிந்தவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியில் பணிகள் செய்யாதவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என அவர்களது நன்னடத்தை அறிக்கையில் குறிப்பிடச் செய்யவேண்டும்.  ஏ பிரிவு மாநில கீழமை நீதிமன்றங்களில் இந்தி மொழி உள்ளது. உயர்நீதி மன்றங்ளிலும் மொழிபெயர்ப்பு இந்தியில் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1987ல் அலுவல் மொழி தொடர்பாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைந்த குழு 117பரிந்துரைகளை அளித்தது. அதில் கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் அரசு அலுவகங்களில் இந்தி மொழி மேம்படுத்த வலியுறுத்தப்பட்டு இருந்தது.

நிறைவாக, கடந்த காலம் போல் அல்ல, தற்போது  ஆர்.எஸ்.எஸ்-ன் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை முன் கொண்டு செல்வதற்கான பல படிகளைச் செயல்வடிவமாக்கும் மோடியின் அரசு தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதன் படிநிலையே பன்மொழி தன்மைக்கு வேட்டு வைத்து மாநில தொடர்பு மற்றும் மக்களின் தொடர்பு மொழி இந்தியாக இருக்க வேகப் பாய்ச்சலில் செல்கின்றது.

மாநில மொழியைப் பறிக்கவில்லை என்று கூறிக் கொண்டு தொடர்பு மொழி இந்தியாக இருக்கச் செய்வதன் மூலம் மாநிலங்களில் இந்தி பயன்பாட்டை மேம்படுத்தும் ஆர் எஸ்.எஸ்-ன் நீண்ட காலத் திட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் மற்றும் கேரள முதமைச்சர்கள் ஒன்றிய அரசின் அறிக்கையை எதிர்த்து குரல் எழுப்பி உள்ளனர். பா.ஜ.கவின் உள்நோக்கத்தைப் புரிந்து அமித்ஷா அறிக்கையை எதிர்த்து குரல் எழுப்புவோம்! போராடுவோம்!

தொடர்புக்கு: 7603930397

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button