தமிழகம்

கோவை கார் வெடிப்பு பயங்கரம்: அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கம் காத்திடுவோம்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே, அனைத்து பிரிவு மக்களும் ஓரணியாகத் திரண்டு சமூக நல்லிணக்கம் பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:

கடந்த 23.10.2022 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் கோவை, கோட்டை, ஈஸ்வரன் கோயில் அருகில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபின் (22) என்ற துணி வியாபாரி சம்பவ இடத்திலேயே கருகி இறந்து போனார். காரும் எரிந்துவிட்டது.

இந்தச் சம்பவம் கோவை மாநகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் காவல்துறை விரைந்து செயல்பட்டதும் காவல்துறை தலைமை இயக்குநர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணையை தீவிரப்படுத்தியதும் பொது மக்களின் அச்சம் தணிக்க உதவியது. இதன் தொடர்ச்சியாக சமூக அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. இந்தச் சதிவலையில் தொடர்புடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்கிறது.

இந்த நிலையில் மத அடிப்படைவாத, வன்முறை செயலில் ஈடுபடுவோருக்கு சமூகத்தின் ஆதரவு இல்லை என இஸ்லாமியர்களின் ஜமாத்துகள் அறிவித்திருப்பது மதவெறி வன்முறையாளர்களை தனிமைப்படுத்தவும், மதச்சார்பற்ற சக்திகளின் பரந்துபட்ட ஒற்றுமை வலிமை பெறவும் உதவும் நடவடிக்கையாகும்.

குற்றச் செயலுக்கான சதி வேலைகள் எல்லை தாண்டி அமைந்திருக்கக் கூடும் என்ற கருத்தில் மாநில அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பது சரியான நடவடிக்கைதான். இதனால் தமிழ்நாடு காவல்துறையின் துப்பறியும் திறனை குறைத்து மதிப்பிடக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சமூக சீர்குலைவு சக்திகளின் நடவடிக்கைகளை ஒரு மதத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதை மக்கள் எச்சரிக்கையோடு நிராகரிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட அரசியல் கட்சிகள் பொதுநல அமைப்புகளின் வேண்டுகோளை அனைத்துப் பிரிவு மக்களும் ஆதரித்து, ஓரணியாகத் திரண்டு சமூக நல்லிணக்கம் பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button