தமிழகம்

தோழர் ப. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு: வீரவணக்கம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ப. மாணிக்கம் நூறாவது பிறந்தநாள் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி பின்வருமாறு:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளரும், விடுதலைப் போராட்ட வீரருமான காலம் சென்ற தோழர். ப.மாணிக்கம் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ப. மாணிக்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான, சென்னை தியாகராய நகர் செவாலியர் சிவாஜிகணேசன் சாலையில் உள்ள பாலன் இல்லத்திலும், திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் மூ. வீரபாண்டியன் தலைமை தாங்கினார். விடுதலைப் போராட்ட வீரர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவர் தோழர்.இரா.நல்லகண்ணு அவர்கள் ப.மாணிக்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ப.மாணிக்கம் அவர்களைப் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

“கும்பகோணம் அருகில் உள்ள கிராமத்தில் பிறந்த ப.மாணிக்கம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்றார். தோழர் கே.பாலதண்டாயுதம், மார்க்சிய சிந்தனையாளர் சுப்ரமணிய சர்மா போன்றோரின் தொடர்பால் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.

இடதுசாரி சிந்தனைகளோடு பல்கலைக் கழகத்தில் மாணவர் மன்றம் செயல்பட்டது. அவரது மாணவர்மன்ற செயல்பாட்டால் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வ.சுப்பையா ஆகியோரின் போராட்டங்கள் ப.மாணிக்கம் அவர்களின் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. பல்வேறு மாணவர் இளைஞர் போராட்டங்களில் பங்கேற்றார். மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். மார்க்சிய கொள்கை வழி நின்று உறுதியாக செயல்பட்டார்.

மதுரை மற்றும் நெல்லை சதி வழக்குகளில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பொழுது 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளராகச் செயல்பட்ட அவர், மாநிலச் செயலாளராக 15 ஆண்டுகள் செயல்பட்டுள்ளார். கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

எளிமையான வாழ்வை மேற்கொண்டார். அவரது வாழ்வு இளைஞர்களுக்கும், பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கும் முன்னுதாரணமாக திகழும்.”

என தோழர் இரா.நல்லகண்ணு, ப.மாணிக்கம் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத், தென்சென்னை மாவட்டச் செயலாளர் சிவா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, முரளி, த.லெனின், அலுவலகச் செயலாளர் ரகுநாதன் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button