உலக செய்திகள்

உக்ரைன் போர்: அணு ஆயுதப் போராக மாறக்கூடிய பேரபாயம் – டில்மன் ருப் எச்சரிக்கை

அணு மின் உலைகள் அழிவுகர அணு ஆயுதங்களாகவும், உக்ரைனில் நடைபெறும் போர் அணு ஆயுதப் போராகவும் மாறக்கூடிய பேரபாயம் நம்மைச் சூழ்ந்துள்ளதாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் டில்மன் ருப் (Tilman Ruff) எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

உக்ரைனில் தொடங்கியிருக்கும் போர் நடவடிக்கைகள் மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் அழிவை உண்டாக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. அணு மின் உலைகள் அழிவுகர அணு ஆயுதங்களாகவும், உக்ரைனில் நடைபெறும் போர் அணு ஆயுதப் போராகவும் மாறக்கூடிய பேரபாயம் உலக மானுடத்தை அச்சுறுத்துகிறது.

அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் போராக இது தொடர்ந்தால், உக்ரைனில் 25,000 முதல் 50,000 அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும். 5000 – 25000 உக்ரைன் நாட்டு வீரர்களும், 3000 – 10000 ரஷ்ய வீரர்களும், 10 முதல் 50 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாகும் அவல நிலை உண்டாகும்.

நேட்டோ அமைப்பின் படைகளும், இதர நாடுகளும் இந்தப் போரில் சிக்கிக் கொண்டால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

இதுவரை மனிதகுலம் சந்தித்த போர்களில் அணுஆயுதம் போன்ற பேரழிவுகர ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதில்லை. ஆயினும், அவற்றின் விளைவுகள் மிக மோசமாகவே இருந்தன. இரண்டாம் உலகப் போரில், தங்களது உறவினர்களை இழக்காத குடும்பங்களை ரஷ்யாவிலும், உக்ரைனிலும் காண்பது மிகவும் அரிதான விஷயமாகும். 1.4 கோடி ரஷ்யர்களும், 70 லட்சம் உக்ரைனியர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் (போர்களால்) உக்ரைன் நாடு சீர்குலைந்து நிற்கிறது. இன்றைய நவீன ஆயுதங்கள் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளையும் மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கக்கூடியவை என்பதோடு மாபெரும் நாசத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

NUCLEAR WEAPONS

கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்திலும் கூட, இராணுவ செலவினம் கவலையளிக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் இராணுவ செலவினம் சற்று ஏறக்குறைய 1981 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

உக்ரைனில் நடைபெறும் போரால் ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமின்றி அவற்றின் அண்டை நாட்டு மக்கள், அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளின் மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

உக்ரைனில் நடைபெறும் இந்தப் போர் பின்வரும் இரு பெரும் அபாயங்களை நமது பூவுலகின் முன் நிறுத்தியிருக்கிறது.

(1) அணு மின் உலைகள் அழிவுகர ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும்!

(2) உக்ரைனில் நடைபெறும் போர் அணு ஆயுதப் போராக மாறக்கூடும்!

அணு மின் உலைகள் மாபெரும் ஆற்றல் வாய்ந்த கதிர்வீச்சு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படலாம். உலகின் மிக மோசமான அணு விபத்து நடைபெற்ற செர்னோபில் பகுதி அமைந்துள்ள உக்ரைன் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 4 அணு மின் நிலையங்களில் 15 அணு மின் உலைகள் உள்ளன. இவற்றில் மிகப் பெரிய அணு உலை அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சப்போரியா (Zaporozhye) நகரில் (டானெட்ஸ்க் நகரிலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவில், டானெட்ஸ்க் பகுதியின் எல்லையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு 6 அணு உலைகள் (ஒவ்வொன்றும் 950 மெகாவாட் திறன் கொண்டது) உள்ளன. உக்ரைன் நாட்டு மின்சாரத் தேவையில் நான்கில் ஒரு பங்கை இந்த அணு மின் நிலையம் உற்பத்தி செய்கிறது. இந்த அணு மின் நிலையம் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய அணு மின் நிலையமாகும்.

இந்த அணு மின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் அழுத்த நீர் அணு உலை (Pressurized Water Reactor) வகையைச் சார்ந்தவை ஆகும். இவ்வகை அழுத்த நீர் அணு உலையில், முதன்மை வெப்பமாற்றி அல்லது குளிர்வியாக (coolant) நீர் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த அணு உலைகளின் மையப் பகுதியைச் சீர்குலைக்க பெரிய இராணுவத் தாக்குதல் எதுவும் தேவையில்லை. முதன்மை வெப்பமாற்றியான நீர் தீர்ந்த மறுநிமிடமே, அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சின் கடும் விளைவுகள் தீவிரமடையும்.

இந்தப் பின்னணியில், உக்ரைன் நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பட்சத்தில், தற்போது தொடங்கியிருக்கும் போர் அணு உலைகளை கதிர்வீச்சு அபாயம் கொண்ட அழிவுகர ஆயுதங்களாக மாற்றிவிடும்.

உக்ரைனில் தொடங்கியிருக்கும் தாக்குதல் முதல் கட்டமாக இராணுவம் மற்றும் விமானத் தளங்கள், நுண்ணறிவுத்துறை ஆகியவற்றின் கேந்திரமான பகுதிகளை இலக்காகக் கொண்டு நடைபெறும். போரின் முடிவு தோல்வியை நோக்கிச் செல்லுகிறது என்ற சூழலில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா/நேட்டோ ஆகிய இரு தரப்பின் இராணுவக் கோட்பாடுகளும் அணு ஆயுதப் பயன்பாட்டை அனுமதிக்கும். ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் 1600க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் குவித்து வைத்துள்ளன. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தற்போதைய உக்ரைன் போர் நெருக்கடியானது வரலாறு, அரசியல் மற்றும் ஆளுமைகள் தொடர்புடையதாக மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் சிக்கல் நிறைந்த அதி நவீன தொலைத்தொடர்பு, அறிவியல் தொழிநுட்ப அமைப்புகள் ஆகிவற்றோடு தொடர்புடையதாக உள்ளது. எனவே, எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற அபாயம் சூழ்ந்துள்ளது.

அணு ஆயுதப் போர் அபாயத்தை உடனடியாகத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே ராஜ்ஜிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே தற்போதைய அவசரத் தேவை ஆகும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அணு ஆயுதங்களை அழித்திட அவற்றை வைத்திருக்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள மேலும் தீவிரமாக முயல வேண்டும்.

இவ்வாறு டில்மன் ருப் கூறியுள்ளார்.

நன்றி: தோழர் ம. இராதாகிருஷ்ணன்
தமிழில்: அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button