ShortNoticeஇந்தியா

பாஜக கருத்தியலை தமிழ்நாடு ஏற்காது!

டி.ராஜா பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று “தி இந்து” நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கொள்கையை மக்கள் ஏற்காததாலும், அதனாடு அஇஅதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாலும் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம். திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலையில் இருப்பதை நான் பார்க்கிறேன்,

பல்வகை தன்மையால் வரையறுக்கப்படும் நாட்டில் ஆர்எஸ்எஸ்-பாஜக, ஒற்றைப் பரிமாண, ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூக-அரசியல் அமைப்பை திணிக்க முயல்கிறது. ஒரே நாடு, ஒரே கலாசாரம்; ஒரே நாடு, ஒரே மதம்; ஒரே நாடு, ஒரே மொழி என்ற ஒற்றைப் பரிமாண உலகத்தை உருவாக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.

தனித்துவமான மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் கொண்ட தமிழ்நாடு, இயல்பாகவே எதிர்ப்பின் மையமாக உள்ளது. பாஜக தமிழ்நாட்டிற்கு வந்தால் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது நமது மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஸ்டாலினுக்கு பாராட்டு

திரு. ஸ்டாலின் நுண்ணறிவு, முதிர்ச்சியோடு தமிழகச் சூழலைப் புரிந்துகொள்கிறார். ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை உடைக்கும் பல திட்டங்களை அவரது அரசு செயல்படுத்தியுள்ளது. அவர் நமது பிரச்சினைகளை முன்வைக்கிறார். அதே சமயம் தமிழ்நாட்டின் நலன்களையும் தமிழர் உரிமைகளையும் பாதுகாக்க முயல்கிறார் என்று தமிழ்நாட்டுக்கு வெளியே கூட மக்கள் அவரை மதித்து பாராட்டுகின்றனர். ஒன்றிய அரசுக்கு எதிராக அவர் உறுதியாக நிற்பதால் அவர் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறார்.

கூட்டணியின் நிலைத்தன்மை

தொழிலாளர் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து இடதுசாரி கட்சிகள் எழுப்பிய விஷயங்களை திமுக அரசு பரிசீலித்தது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை ரீதியாக ஒருங்கிணைந்தது, அதன் அனைத்து கட்சிகளும் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளுக்கு உறுதியாக உள்ளன. சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை ஆகிய மதிப்புகளை அனைத்து கட்சிகளும் காக்கின்றன. இந்தப் பொதுவான நிலைபாடு காரணமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை நியாயப்படுத்துவது கடினமாகிறது.

தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் வழக்கமான முரண்பாடுகள் இருந்தன. ஒவ்வொரு கட்சியும் அதிக இடங்களைப் பெற முயலும். ஆனால் ஒப்பந்தம் முடிந்தபின், தேர்தல் பிரச்சாரம் ஒன்றுபட்டும், பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை தோற்கடிப்பதையே குறியாகக் கொண்டதாகவும் இருந்தது.

பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை

2010-ல் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா நிலுவையிலேயே இருந்தது. 2023-ல் அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பது மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், மறுவரையறை ஆணையம், தரவுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்படையாக செய்யப்பட வேண்டியதாகும்.

பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டம், தொகுதி மறுவரையறை ஆகிய இரு வேறு விஷயங்களை ஒன்றாக இணைப்பது ஒரு மோசடி முயற்சி.

தரவு வெளிப்படுத்தாமை மற்றும் விமர்சனம்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமூக-பொருளாதார தரவுகளை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடாதது, பாஜக அரசுக்கு வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை என்பதற்கான சான்று. அந்தக் கட்சியின் கொள்கை, சமத்துவமின்மை மற்றும் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகிறது”

த.வெ.க. இன்னும் தன்னை வரையறுக்கவில்லை

நடிகர் சி. ஜோசப் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம், இளைஞர்களின் ஒரு பகுதியை ஈர்த்துள்ளது என்றாலும், அதன் அரசியல் மற்றும் கொள்கை திசை தெளிவாக இல்லை. ஒரே ஒரு முறை மட்டுமே அவர் பாசிசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இன்னும் அந்தக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது யாருக்கும் தெளிவில்லை.

தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் உள்ளனர். இந்தித் திணிப்பு, தொகுதி மறுவரையறை போன்ற பிரச்சினைகளில் அவர்கள் காட்டும் செயல்பாடு இதற்கு சான்று என்றார். ஆனால் தவறான தகவல்கள் இளைஞர்களின் அரசியல் மனநிலையை பாதிக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இளைஞர்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம். இளைஞர்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். அதேநேரத்தில் ஸ்டாலின் அவர்கள் இளைஞர்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

மேற்கண்டவாறு ஆங்கில இந்து நாளிதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button