கட்டுரைகள்விளையாட்டு

விளையாட்டு கார்ப்பரேட்டுகளின் சந்தை அல்ல

இளசை கணேசன்

எது மக்களை வெகுவாக ஈர்க்கிறதோ அதற்குள் அரசியல் நுழைந்து விடும்!

பணம் கொழிக்கும் இடம் எதுவோ! அதற்குள் கார்ப்பரேட்டுகள் நுழைந்து விடுவார்கள்!

கார்ப்பரேஷன் கழிவுகளை அள்ளும் வேலையைக்கூட காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் வளம் கொழிக்கும் கிரிக்கெட் விளையாட்டுத் துறையை விட்டுவிடுவார்களா?

விளையாட்டு என்பது மும்முனை அம்சங்கள் கொண்டதாகும்.

  1. இயல்பான திறமையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
  2. உலக நாடுகள் இடையே மற்றும் உள்நாட்டு மாநிலங்களிடையே உறவை மேம்படுத்த வேண்டும்.
  3. விளையாட்டு உறவுகள் மூலம் பகைமை தணிய வேண்டும்.

மூலதனமும், அரசியலும் விளையாட்டுக்குள் புகுந்தால் இந்த மூன்று அம்சங்களும்  தகர்க்கப்பட்டு விடும்.

1980களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) அரசியல் நுழைவு அவ்வளவு இல்லை. பணம் கொழிக்கவும் இல்லை.

1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற போது வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி பரிசளிப்பதற்கு கூட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் போதிய பணம் இல்லை.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கச்சேரி நடத்தப்பட்டு அந்தத் தொகையில் வெற்றி வீரர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

1990களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பணம் கொழிக்கத் தொடங்கி விட்டது.

இது பொறுக்குமா? மூலதனமும் அரசியலும் அப்பட்டமாக நுழையத் தொடங்கி விட்டன. பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போதே இந்திய கிரிக்கெட் விளையாட்டில் கடுமையாக தலையீடு செய்தது.

2002ல் நடைபெற்ற குஜராத் படுகொலையின் எதிர்வினையாக 2008 ல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. இதை காரணம் காட்டி..

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடக்கூடாது. இந்திய அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடக்கூடாது.

* இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கக் கூடாது அவர்களை ஏலத்தில் எடுக்கவும் கூடாது.

– என்றவாறு அரசியல் ஆதாயம் அடையும்  வகையில் அதை சாதித்தும் காட்டி விட்டது.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் ஏலத்தின் வழியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது.

2014 பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஆக்கப்பட்டார்.

இதன் பிறகு இந்திய கிரிக்கெட் விளையாட்டு வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் என்ற இரட்டை தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது.

விலங்குகள் பசித்தால் மட்டுமே வேட்டையாடும்! ஆனால் லாபம் எவ்வளவு குவிந்தாலும் மூலதனக் குவியல் தனது லாப வேட்டையை நிறுத்தாது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதை இயல்பான திறமையை வெளிக்காட்டும் விளையாட்டாக கருதப்படுவதில்லை.

மாறாக வகுப்பு வெறி திணிக்கப்பட்டு இந்து – முஸ்லீம் வீரர்களுக்கு இடையே நடக்கும் போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது.

2023ல் நடைபெற்ற 13வது உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுக்கு அரசியல் ஆதாயமாக பயன்படுத்தும் உத்தி இருந்தது.

ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது. இதனால் பாஜகவின் முயற்சியில் மண் விழுந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தால் இரண்டு வகையான விளைவுகள் ஏற்படுகின்றன.

  1. விரல் விட்டு எண்ணக்கூடிய சாதகமான விளைவுகள்.
  2. ஏராளமான எண்ணிக்கையில் பாதகமான விளைவுகள்.

முதலில் சாதகமான விளைவுகள் பற்றி பார்ப்போம்.

  • கிரிக்கெட் அணி தேர்விலும், கிரிக்கெட் வாரியத்திலும் துவக்கம் முதல் இருந்து வரும் பிராமண உயர்சாதி ஆதிக்கம் தகர்க்கப்படுகிறது.
  • உயர்சாதி ஆதிக்கம், சந்தை ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று வேறுபடுகிறது, மோதுகிறது.
  • சாதி, அரசியலைத் தாண்டி திறமைகளுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கிறது.
  • ஏலத்தில் திறமைகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அடுத்து பாதகமான விளைவுகள் பற்றி பார்ப்போம். இதில் பல்வேறு வகையான அம்சங்கள் இருக்கின்றன.

  1. சந்தையும், சரக்கும்
  2. தீர்மானிக்கும் சக்தி
  3. உறவும் உணர்வும்
  4. மனவியல் வாழ்வியல்
  5. வாய்ப்பு கேள்விக்குறி

– என்றவாறு பாதகமான அம்சங்களை வகைப்படுத்தலாம்.

சந்தையும் சரக்கும்:
  • விளையாட்டு விற்பனைச் சந்தையாகவும், விளையாட்டு வீரர்கள் சந்தையில் வாங்கும் சரக்காகவும் ஆக்கப்படுகின்றனர்.
  • இயல்பான விளையாட்டாகவும் இயல்பாக திறமையை வெளிப்படுத்தும் வீரராகவும் இருக்க முடியாது. மாறாக வீரர்கள் எந்திரமாக மாற வேண்டும்.
  • பேட்டிங் வீரராக இருந்தால் ரன்களை குவிக்க வேண்டும். பவுலராக இருந்தால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.என்பதாக கட்டமைக்கப்படுகிறது.
  • தடுப்பு ஆட்டத்தை தவிர்க்க செய்கிறார். இதன் மூலம் அவுட் ஆவதை திணிக்கிறது. ஒற்றை நோக்கில் ரன் குவிப்பை மட்டும் ஊக்கப்படுத்துகிறது.
  • அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படும் வீர்ர் திறமையானவர் என்பதாகவும், குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்படுபவர் திறமை குறைவானவராகவும் கருதப்படுகின்றனர்.
  • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதால் தற்போதைய ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் மூவர் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர்.
  • இறுதிச்சுற்றுக்கு முன்னர், தகுதி சுற்றுப் போட்டிகளில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. எதிர்பாராத விதமாகத்தான் ஆப்கானிஸ்தானை ஜெயிக்க முடிந்தது.

இவற்றையெல்லாம் ஏலம் எடுப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை.

மிக்கல் மார்ஷ்- 24 கோடியே 75 லட்சம்.
மேட் கம்மின்ஸ்- 20 கோடி.
கேமரூன் கிரீன்- 17 கோடியே 50 லட்சம்.
ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த மூவர் மட்டும் 60 கோடிக்கு ஏலம்.

உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டி வரை ஒரு வீரர் விளையாடினால் 20 ஆட்டங்கள் ஆட வேண்டும்.

மிக்கல் மார்ஷ்சின்‌ விலை ஒரு போட்டிக்கு 1  கோடியே 25 லட்சம் என்றாகிறது.

  • இவர் ஒருவர் மட்டுமே வெற்றியை தீர்மானித்து விட முடியுமா என்றால் அது முடியாது. பிறகு ஏன் இந்த விலை வீக்கம்!
  • இந்த விலை அளவுகோல் நடைமுறையில் பெரும்பாலும் பிரதிபலிப்பதில்லை. விளையாட்டு வீரர்கள் அவரவர் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
  • திறமைக்கு ஏற்ற விலையா! அல்லது விலைக்கு ஏற்ப திறமையா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காது.
ஐபிஎல் போட்டிகளில் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு அணிக்கு 100 கோடி ரூபாய் செலவிடுகிறது. இப்படி 10 அணிகளுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான செலவாகும். இது தவிர கணக்கில் வராத தொகைகள் தனி.
தீர்மானிக்கும் சக்தி:
  • விளையாட்டில் யாருக்குத் திறமை இருக்கிறது என்பதை கார்ப்பரேட்டுகளே தீர்மானிப்பார்கள்.
  • விளையாட்டு வீரர்கள் சுதந்திரமாக இயல்பாக விளங்க முடியாது கார்ப்பரேட்டுகளின் ஆட்டுவிப்புக்கு ஏற்ப ஆட வேண்டும்.
  • இந்திய கிரிக்கெட் வாரியம், ஆளும் அரசு, பிராமணிய ஆதிக்கம் என்று தாக்குதல்கள் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட தீர்மானிக்கும் சக்திகளாக கார்ப்பரேட்டுகளை விள்ங்குகிறார்கள்.

நிர்வாண உலகத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல கார்ப்பரேட் ஆதிக்கத்தில் திறமையான வீரர்களுக்கு கூட பைத்தியம் பிடிக்கும்.

உறவும் உணர்வும்:
  • வீரர்கள் விற்பனை பண்டமாக மாற்றப்படுவதால் விளையாட்டு உறவு மாற்றப்பட்டு செயற்கையான பண உணர்வாக உருவாக்கப்படுகிறது.
  • இது கொள்ளைக்காரனை விட்டுவிட்டு கூட வந்தவனை துரத்துவது போன்று ஆகும்.
  • பண உணர்வு விளையாட்டு ஒற்றுமை உறவை பலவீனப்படுத்தும்.  இயல்பான விளையாட்டு உறவு சீர்கேடு அடைவதால் அணியின் ஒற்றுமை சீர்குலைகிறது.
  • அணியின் கூட்டு முயற்சி சீர்குலைக்கப்பட்ட பின்பு வெற்றியை எப்படி எதிர்பார்க்க முடியும்!
மனவியல் வாழ்வியல்:
  • ஏலத்தில் விலை போகாத வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இது பற்றி கார்ப்பரேட்டுகளுக்கு கவலை இல்லை.
  • இயல்பான விளையாட்டு எந்திரத்தனமாக மாற்றப்படுவதால் விளையாட்டு வீரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
  • அதிகப்படியாக கொடுக்கும் மன அழுத்தத்தால்‌ மனநிலை பாதிப்படைந்து கிரிக்கெட் வாழ்க்கையை முடமாக்குகிறது. இது வாழ்வியலும்‌ பாதிப்பிற்கு இட்டுச் செல்கிறது.
  • மாநிலங்கள் வாரியாக விளையாட்டு அணிகள் உருவாக்கப்பட்டாலும் அந்தந்த மாநில வீரர்கள் தங்கள் மாநில அணியில் விளையாட முடிவதில்லை. இதனால் பிரதேச உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
  • வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஏல முறை பின்பற்றப்படுவதால் வீரர்கள் பங்கேற்கும் அணியும் மாறுகிறது.
  • சொந்த மண்ணில் (home ground) விளையாட்டுப் போட்டி நடந்தாலும் அதில் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்க முடிவதில்லை.
  • விளையாட்டு வீரர்களின் இயல்பு நிலை, மனநிலை வாழ்வியல் நிலை இவற்றின் பாதிப்பு பற்றி எல்லாம் கார்ப்பரேட்டுகள் கவலைப்படுவதில்லை.
வாய்ப்பு கேள்விக்குறி:
  • விளையாடக் கிடைத்த வாய்ப்பு எந்த நேரத்தில் பறிக்கப்படும் என்பது விளையாட்டு வீரர்களுக்கே தெரியாது!
  • இந்தப் போட்டியில் அணியில் நான் இருக்கிறேன் அடுத்த போட்டியில் அணியில் நான் இருப்பேனா? என்று ஏக்கப் பெருமூச்சோடு ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் சூழல் உருவாகிறது.
  • கேப்டனாக உயர்த்தப்பட்டு எந்த அளவுக்கு மவுசு உயர்த்தப்படுகிறதோ அதே வேகத்தில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு இருமடங்கு மவுசு கீழே இறக்கப்படும்.
  • கடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாகவே செயல்பட்டார் தொடர்ச்சியாக இறுதிப் போட்டி வரை 10 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்தார்.
  • ஆனால் இந்த சாதனை ஏரெடுத்து பார்க்கப்படவில்லை. இறுதிப் போட்டியில் தோல்வியை காரணம் காட்டி கேப்டன் பதவி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்.
  • விராட் கோலிக்கு ஏற்பட்ட நெருக்கடியால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக இருக்கிறேன் என்று சொன்னார்.
  • அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் இதை ஏற்கவில்லை. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரே கேப்டன் தான் என்று ரோகித் சர்மாவை அறிவித்தது.
  • ஒரு நாள் போட்டிக்கு கே.எல். ராகுல். T20 போட்டிக்கு சூரியகுமார் யாதவ் என்று மூன்று கேப்டன்களை நியமித்துள்ளது.

இதுபோன்று பாதகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் நமது குறி கார்ப்பரேட் பிடியிலிருந்து விளையாட்டை எப்படி மீட்பது என்பதுதான்.

இந்திய கிரிக்கெட் விளையாட்டில் முதலில் பிராமண உயர்சாதி ஆதிக்கம் நுழைந்தது. அடுத்து அரசியல் ஆதிக்கம் நுழைந்தது. இப்போது கார்ப்பரேட் ஆதிக்கம் நுழைந்துள்ளது. கார்ப்பரேட் ஆதிக்கமே தீர்மான சக்தியாக விளங்குகின்றது.

கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்து கபடி விளையாட்டிலும் கார்ப்பரேட் ஆதிக்கம் கால் பதிக்கிறது.

இதைப் புரிந்துகொள்ளாமல் விளையாட்டை பெரும் விளையாட்டாக மட்டும் ரசித்து கொண்டிருக்க கூடாது!

நரி நாட்டாமை செய்யும் போது ரசிகர்கள் ஆட்டு மந்தையாக இருக்கக் கூடாது.

கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் பிடியில் இருந்து விளையாட்டை மீட்போம்.

கட்டுரையாளர்:
இளசை கணேசன்
மூத்த பத்திரிகையாளர்
ஜனசக்தி
(பேச: 8220468816)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button