
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் அடுத்தடுத்து 4 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், காய்கறிகள், பால் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த பணவீக்கமும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதில், ‘தினசரி விலை நிர்ணய முறை’ (Dynamic fuel pricing) இந்தியாவில் 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தங்கம், வெள்ளி விலையைப் போல், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது.
ஆனால், 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. சந்தையுடன் இணைந்த விலை நிர்ணய முறையை நிறுத்திவைத்த ஒன்றிய பாஜக அரசு, எரிபொருள் மீதான வரிகளை உயர்த்தி, அதிக ஈவுத்தொகையை வசூலித்தது. இப்படி ஏறத்தாழ 66 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியிருக்கிறது.
எரிபொருள் விலை நிர்ணய மாதிரி என்றால் என்ன?
சில்லறை எரிபொருளுக்கான மாறும் விலை நிர்ணய மாதிரியானது, சந்தைக் கட்டுப்பாடுகளை நீக்கும் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில், சர்வதேச கச்சா எண்ணெய் அளவுகோல்கள், உள்ளூர் வரிகள் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் நிகழ்நேர மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சில்லறை விற்பனை விலைகள் தினசரி ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த மாதிரியானது, அரசாங்கம் அல்லது எண்ணெய் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும் நிலையான அல்லது காலமுறை விலை நிர்ணயத்திற்குப் பதிலாக, தானியங்கி மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட சரிசெய்தல்களைக் கொண்டுவருகிறது.
இந்தியாவிடம் எரிபொருள் விலை நிர்ணய மாதிரி இருந்ததா?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், 2010-ல் பெட்ரோல்; 2014ல் டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, 15 நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயிக்கும் முறையை கொண்டுவந்தது. நுகர்வோருக்கான எரிபொருள் விலை மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை படிப்படியாக விலக்கி, முற்றிலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் அதனை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிகள், இதுபோல சந்தை அழுத்தங்களுக்கு ஏற்ப மக்கள் மேல் சுமைகள் திணிக்கப்படுவதால், எண்ணெய் பற்றாகுறை கால நிதி (Oil Deficit pool) உருவாக்க பரிந்துரைத்தது. ஆனால் அதை ஏற்காமல் சந்தை சக்திகளிடமே விலை நிர்ணயத்தை ஒப்படைத்து.
விலை குறைப்பு நடவடிக்கையாக, பெட்ரோலுடன் 30% வரை எத்தனால் கலக்கும் வகையில், புதிய பெட்ரோல் தரநிலைகளை இந்தியா அறிவித்தது. ஆனால் அதன்படியும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
விலை நிர்ணய மாதிரியைப் பின்பற்றும் நாடுகள்
இந்த விலை நிர்ணய மாதிரியைப் பின்பற்றியதன் மூலம், சந்தை நிலவரங்களின் அடிப்படையில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற முன்னேறியப் பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டது.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், உள்ளூர் விநியோகம், மொத்த விற்பனைச் செலவுகள் மற்றும் இலாப வரம்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நாளைக்கு பலமுறை எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகள், நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக மிகவும் நெகிழ்வான விலை நிர்ணய முறையை நோக்கி நகர்ந்துள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த விலை நிர்ணய முறை, இந்தியாவை சந்தை சார்ந்த அணுகுமுறைக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றதுடன், 2010க்கு முந்தைய அரசு நிர்வாக விலை நிர்ணயக் காலத்துடன் ஒப்பிடும்போது நிதிச் சுமையையும் குறைத்தது. ஆனால் மக்களின் மீது சுமையை அதிகரித்தது.
மோடி அரசு ஏன் இதனை செய்தது?
எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயிக்கும் முறையை மோடி அரசாங்கம் நிறுத்திவைத்ததற்கான முதன்மையான காரணம், குறுகிய காலத் தேர்தல் கணக்கீடுகளே. 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்த முக்கியமான மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த முடக்கம் தொடங்கப்பட்டு, 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வரை நீட்டிக்கப்பட்டு, விலை ஏற்றத்தில் இருந்து வாக்காளர்கள் பாதுகாக்கப்பட்டனர். இதன் மூலம் தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யலாம். தேர்தல் முடிந்த பிறகு விருப்பத்துக்கு விலையை ஏற்றி மக்களின் மீது சுமையை ஏற்றலாம் என்ற அட்டூழியத்தை மோடி அரசு பின்பற்றுகிறது.
மக்களுக்கு சுமை ஏற்றிய மோடி அரசு
கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது, மோடி அரசு சந்தைக்கேற்ப நாள்தோறும் விலை நிர்ணயிக்கும் முறைக்குத் திரும்பாமல், கலால் வரிகளை அதிகமாக உயர்த்தியது. எண்ணெய் நிறுவனங்களும் தனியார் சுத்திகரிப்பு ஆலைகளும் தங்களின் லாபத்தை பல மடங்கு அதிகரித்துக்கொள்ள அனுமதித்தது. குறிப்பாக அம்பானியின் நிறுவனங்கள் அதிகம் லாபம் பெற வழி வகுத்தது. இந்த லாபங்களுடன் அதிக ஈவுத்தொகை, செஸ் மற்றும் வரிகளாக அரசாங்கத்திற்கும் சென்றன. ஒன்றிய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. மாநிலங்களுக்கு பங்கு கிடைக்காமல் இருப்பதற்காக தீர்வை (செஸ்) வரிகளாக ஒன்றிய அரசு விதித்தது. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த காலங்களில் பெட்ரோல், டீசலுக்கு மக்கள் அதிக விலை கொடுத்து அவதிப்பட்டனர்.
தற்போது மேற்காசியப் போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதை காரணமாகக் காட்டி, சந்தைக்கேற்ப விலையை ஏற்றுகிறோம் என்று கூறுவது என்ன நியாயம்?
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 36 சதவீதம், ஜெர்மனியில் 40 சதவீதம், தென்கொரியாவில் 39 சதவீதமே அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதைவிட கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தை விலையேற்றத்தால் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது என்பது வடிகட்டிய பொய் என்பது தெளிவாகும்.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தெளிவற்ற நிலையால் ஏகாதிபத்திய சூழ்ச்சிக்கு ஆட்பட்டு, குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொடுத்துவந்த ஈரான், ரஷ்யா நாடுகளை அமெரிக்காவுக்காக பகைத்துக் கொண்டது. இதன் விளைவாக எரிபொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டது. சமையல் எரிவாயுக்கும் இதே நிலைமைதான். இதனால் டீக்கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை உணவுப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
இதற்கு யார் பொறுப்பு? ஒன்றிய மோடி அரசு விளக்கம் அளிக்குமா?