
தாத்ரா நாகர் ஹவேலியின் 6 முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த மோகன் டெல்கர் (58 வயது) 2021 மே மாதம் மும்பை மெரீன் டிரைவ் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். மரண வாக்கு மூலம் போல விரிவான 15 பக்கக் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்து விட்டு மரணம் அடைந்தார் டெல்கர்.
அதில் அவர் குஜராத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பி.கே.பட்டேல் தன்னைத் தொடர்ந்து அச்சுறுத்தியும், இன்னல்கள் கொடுத்தும் தற்கொலை செய்யும் அளவுக்குத் தூண்டியதாக சம்பவங்களைத் தொகுத்து எழுதி வைத்திருந்தார்.
முடிவு – குஜராத்தில் 2002ல் பல்லாயிரம் பேர் மாண்டு போனதில் அன்றைய முதலமைச்சர் மோடிக்குத் துளியும் தொடர்பில்லை எனத் தீர்ப்பானது போல,
பிரஜாபதி கொலை வழக்கில் குற்றவாளியென உறுதியாகிச் சிறை சென்ற ‘தியாகி’ அமித் ஷா பின்னர் குற்றமற்றவர் என்று “ஒருவித உண்மை” வெளிவந்தது போல,
மலேகான் மற்றும் பல குண்டு வெடிப்பு வழக்குகளில் காவியுடைக்காரர்களின் நிழல் கூடக் கிடையாது எனத் தீர்ப்பு *வாங்கப்பட்டது போல,
மோகன் டெல்கர் தற்கொலையிலும் குஜராத் பாஜக எம்.எல்.ஏ. பி.கே.பட்டேல் அப்பழுக்கற்றவர் என மும்பை நீதிமன்றம் “புனித நீர்” தெளித்துப் போகச் சொன்னது.
அடுத்து பி.கே.பட்டேல் நேரடியாக லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரி (யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் போன்ற பதவி) ஆனார். அவருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைச் செம்மையாய் நிறைவேற்றினார்.
பெரு நிக்கோபார் வளர்ச்சித் திட்டம்
கடல்சார் பகுதிக்கென சில சுற்றுப்புறச் சூழல் தன்மைகள் உண்டு; அவை நிலப் பகுதிக்கானவற்றிலிருந்து பெரும் பகுதி மாறுபட்டது. அந்தக் கடல்சார் பகுதியின் சூழல் பாதிப்பு என்பது அங்கிருந்த பூர்வ மீன்பிடி மக்கள், தென்னை விவசாயிகள் இவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்தது. உயிரியல், சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்ததை ஒன்றிய மோடி அரசும் அதன் ஏஜெண்ட்டுமான பி.கே.பட்டேலும் கடலில் தூக்கி எறிந்தனர்.
கடலோரக் காவல் படைக்கு மிக அதிக நிலப்பரப்பு தேவை எனச் சொல்லி, பல்லாண்டு காலம் அங்கே குடியிருந்து மீன்பிடித் தொழில் செய்தோர் அப்புறப்படுத்தப்பட்டனர். ஒரு குறும் கடற்படைக் கேந்திரமாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு செய்து முடித்தது.
பவளப் பாறைகள் (CORAL REEF) அபரிமிதமாக இருந்த அந்தத் தீவுப் பகுதிகளிலிருந்து அழிந்து போயின.
வளர்ச்சியா? அழிவா?
இன்று நிகோபார் தீவுகளின் மீது நாம் நம் கூரிய கவனத்தையும், செயல்பாடுகளையும் வடிவாக்க வேண்டும். இப்போது மோடியின் ஒன்றிய அரசு ‘பெரு நிகோபார் வளர்ச்சித் திட்டம்’ என்ற ஒன்றை நிறைவேற்றத் துடிக்கிறது.
இந்தத் திட்டத்தினால்,
1) 130 சதுர கி.மீ. பரப்பளவுக் காடுகள் அழிக்கப்படும்
2) 12 முதல் 20 ஹெக்டேர் அளவிலான சதுப்பு நிலக் காடுகள் மறைந்தே போகும்.
3) இந்த சதுப்பு நிலக் காடுகள், மற்றும் மீன்பிடித் திட்டுத் திடல்களில் குடியிருப்போர் தாங்கள் பல நூறு ஆண்டுகளாய் வாழுமிடத்திலிருந்து இடம் பெயர்ந்தே ஆக வேண்டும்.
4) ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தீர்மானத்தின் படி, ஒரு நிலப்பரப்பின் ஆதி / பூர்வ குடிகளின் வாழ்வுரிமையைப் பறிப்பது கிரிமினல் குற்றம்.
சில ஆயிரங்கள் எண்ணிக்கையே கொண்ட ‘ஷோம்பென்’ மற்றும் ‘நிகோபாரிஸ்’ பழங்குடியினர் தங்கள் அடையாளத்தையும், வாழ்விடத்தையும் தொலைக்க வேண்டியிருக்கும்.
(ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தீர்மானத்தின் படி, ஒரு நிலப்பரப்பின் ஆதி / பூர்வ குடிகளின் வாழ்வுரிமையைப் பறிப்பது கிரிமினல் குற்றம்)
5) இது குறித்து அந்தப் பகுதிவாழ் மக்களின் அமைப்பின் 50% (குறைந்த பட்ச / சட்டப் படியான) உறுப்பினர்கள் கூடக் கலந்து கொள்ளாத கூட்டத்தில் இது முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டதாய் முடிவு சொல்லப்பட்டு விட்டது.
6) 2004 ஆம் ஆண்டு நிகோபார் தீவுகளின் தென் முனையானது சுனாமிப் பேரலைகளால் சுமார் 15 அடி ஆழத்திற்குப் புதையுண்டதாம். கடல்சார் அறிவியல் விஞ்ஞானிகள் அச்சப்படுவது நிக்கோபார் தீவுகளின் நிலப் பரப்பில் இந்தத் திட்டத்திற்காக அதிகம் நிலப்பரப்பில் தோண்டுவதும், கட்டிடங்கள் அதிக அளவில் எழுப்ப்ப் படுவதும் பேரழிவைத் தரும்.
7) அழிவின் விளிம்பில் உள்ள ஆதிக் குடிகள் அன்றி உலகின் மிக அபூர்வமான *லெதர்பேக் கடல் ஆமைகள் (LEATHERBACK SEA TURTLES) பல்லாயிரம் மைல்கள் நீந்தி இந்தத் தீவுகளிலேதான் தங்கள் இருப்பை அமைத்துக் கொள்கின்றனவாம். அவைகளும் இத்திட்டத்தால் கடலிலே காணாமல் போய்விடும்.
8) மோடி சர்க்காரின் புள்ளி விபரங்களே சொல்வது போல வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை சுமார் 8.5 லட்சங்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்த வனம் அழிந்தால், அழிந்ததுதான். மறுபடியும் மரம் வளர்த்து வளத்தை உருவாக்க முடியாது.
அரசு சொல்வதென்ன?
இது ஒரு மிகப் பெரிய சுற்றுலாத் தலம் ஆகும் என மோடியின் அரசு ஆருடம் கூறுகிறது. இங்கே நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் எனப் பலவும் உருவாகும் நல்லது தானே? என நரேந்திரர் கேட்கிறார். ஆம்; கடல்சார் குடிமக்கள் காணாது போவர்; கட்டிப்பிடி நடனங்கள் பல்மடங்கு பெருகும். சதுப்பு நிலக் காடுகள் வெளியேறி சறுக்கும் தன்மையில் தார்ச் சாலைகள், ஒளிரும் மின் விளக்குகள் தீவெங்கும் தலைகாட்டும். வளர்ச்சி…..?
இங்கே சரக்கு பரிமாற்ற முனையம் (TRANS SHIPMENT PORT) ஒன்று வருமாம். இதற்கான அலுவலகங்கள், குடியிருப்புகள், போக்குவரத்திற்கான சாலைகள் எனத் தேவைப்படும் நிலங்கள் எல்லாம் ஒன்று சதுப்பு நிலக் காடாக இருக்கலாம் அல்லது கடற்பகுதியை ஒட்டிய பலவீனமான நிலப் பரப்பில் (VULNERABLE LANDSCAPE) இன்னும் ஆழமாய்த் தோண்டிக் கட்டடம் / சாலைகள் எழுப்பப் படலாம். இவற்றால் ஆபத்துகள் உறுதி என்பதில் ஐயம் உண்டா?
ஒரு சிறு விமான நிலையம் வருமாம்; சுற்றுலா வருபவர்கள் இன்றைய தனுஷ்கோடியைப் பார்ப்பது போன்று பார்த்து விட்டுச் செல்லலாம், விமான நிலையக் கட்டடம் ஏதோ பெட்டிக்கடை போன்றதா? கண்காணிப்பு கோபுரம், கட்டுப்பாட்டு அறைகள், பாதுகாப்புடன் கூடிய அமைப்புகள், முக்கியமாக ஓரளவு நெடுந்தூரம் கொண்ட ஓடு தளங்கள், வணிக நிலையங்கள், எல்லா ஊழியருக்குமான குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகள் இத்தனைக்கும் சேர்த்து அரசு சொல்வதை விட இங்குள்ள மழைக் காடுகள் (RAIN FORESTS) அதிகமாக அழிக்கப்படும் பேராபத்து உள்ளது.
புராணக் கதைகளைப் பேசுவதிலும், நம்பவைக்கப் பாடுபடுவதிலும் அக்கறை கொண்ட இந்த ஒன்றிய அரசு இத்திட்டத்தின் தேவை என 2 இதிகாச அளவு காரணங்களை அவிழ்த்து விட்டுள்ளது :-
1) வட கிழக்கு இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், இந்தோனேஷியா பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நீர் வழிப் போக்குவரத்திற்கு இது ஏதுவானதொரு முனையமாக ஆகி விடுமாம். உணவைத் தியாகம் செய்து உடையைப் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறாரே மோடிஜி!
2) சிங்கப்பூரிலும், இலங்கையிலும் உள்ள முனையங்களை விட்டுவிட்டு நிக்கோபார் தீவுகள் வழியாக சரக்குகள் கையாள்வதில் பெரிய அளவு சிக்கனம் இல்லை என சர்வதேசச் சந்தை பிரதிநிதிகள் கருத்துச் சொல்கிறார்கள். வரப்போகும் வருமானத்தைப் போடவிருக்கும் மூலதனத்தைக் கணக்கில் கொண்டு சிந்திக்க வேண்டும். இதைக் குஜராத்காரர்கள் யோசிக்காமல் இருப்பார்களா? வேறு முக்கியக் காரணங்கள் பின்னணியில் இருக்கும்.
3) சீனா தெற்காசியக் கடல் பகுதியில் தன் மேலாண்மையை உறுதி செய்துள்ள நிலையில், இந்தியா தன் பங்கிற்குக் கடற்படைத் தளங்களை அதிகமாக்கவும், நவீனப்படுத்தவும் நிகோபார் நிலப்பரப்பு தேவைப்படுகிறது என மோடி அரசு கதையளக்கிறது. ஏற்கனவே உலகில் அதிக ராணுவத் தளவாடங்கள் இறக்குமதியில் மூன்றாம் இடம் பெற்ற நம் பெருமையுள்ள – பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும், ஏழ்மைக் குறியீட்டில் உயர்ந்த நிலையிலும் உள்ள நம் நாடு மீண்டும், மீண்டும் ராணுவச் செலவை உயர்த்த சீனக் கரடி எனும் கதை சொல்லி நிக்கோபாரை அழிக்கவும், இந்தியர்களின் செல்வத்தை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களில் முதலீடு செய்யவும் விழைகிறது. ராணுவக் கம்பெனிகளும், தரகர்களும் செல்வத் திளைப்பில்- வளரும் நாடுகளோ பாடுபட்டு சேர்க்கும் செல்வத்தின் கரைப்பில்.
4) வன வளம் அழிந்தாலும், சதுப்பு நிலங்கள் மறைந்தாலும், மாற்று இடத்தில் அவை உருவாக்கப்படும் என பாஜக. ‘ஐன்ஸ்டீன்கள்’ இசை பாடுகிறார்கள். உயிரியல் அறிஞர்கள் கூற்றுப் படி அவ்வாறு செய்து வெற்றியும் காண 5 மடங்கு செலவும், 25 வருடக் காத்திருப்பும் வேண்டும் என்று சான்றுகள் சொல்கின்றன.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீனா குப்தா (இவர் ஒன்றிய அரசில் ஆதிவாசிக் குடிகள் நலன் அமைச்சகத்திலும், சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்திலும் உயர் பொறுப்பு வகித்தவர்) இந்தத் தன்னிச்சையான ‘பெரு நிகோபார் வளர்ச்சித் திட்டம்’ குறித்த ஆபத்துகளைப் பட்டியலிட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிகோபார் தீவுகளுக்குச் சென்று அங்கிருந்த நிகோபார் ஆதிக் குடிகளுடன் உரையாடினார்; கேட்டறிந்தார் பின்னர் தந்த பேட்டி ஒன்றில், “இந்தத் திட்டம் வளர்ச்சி என்ற உடை உடுத்தி வந்துள்ள வாழ்வழிப்பு” என்று குறிப்பிட்டார்,
இந்தியாவின் பல துறைமுகங்களின், விமான நிலையங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு இவற்றைக் கையாளும் நிறுவனம் அதானி குழுமம் நிகோபாரையும் சேர்த்துக் கொள்ள இந்நேரம் நல்ல நாள் குறித்திருப்பார் நமது மோடிஜி!
வன வளம், நிலவளம், கடல் வளம் இவை எல்லாம் மக்கள் வளம் சார்ந்தது; அழிய விடாமல் கூரிய கவனத்துடன் மக்களின் அரணாய் நின்று காப்போம்! அது நமது கடமையும் கூட!