கட்டுரைகள்

இணையத்தில் வைரலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: எதார்த்த உலகில் எதிரொலிக்குமா?

வ.மணிமாறன்

கரப்பான் பூச்சி திடீரென அரசியல் குறியீடாக மாறும், அதனை அடையாளமாகக் கொண்டு பெருந்திரளான இளைஞர்கள் இணைய வெளியில் (Internet World) திரளுவார்கள் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

மே 15ஆம் தேதி வழக்கு விசாரணை ஒன்றின் போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, “வேலையில்லாத இளைஞர்களையும் இந்த அமைப்பு முறையை விமர்சிப்பவர்களையும் கரப்பான் பூச்சிகள்” என சாடியிருந்தார். அதற்கு எதிரான கோபமாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) என்று டிஜிட்டல் குரல் நையாண்டியாக வெடித்தது. விளையாட்டு வினையானது.

நகைச்சுவையாக, பகடியாகத் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, சமூகக் கோபத்தை வெளிப்படுத்தும் பொது மேடையாக மாறியது. பாடல்கள், எதிர்ப்புக் குரல்கள், விமர்சனங்கள் எனத் தூள் பறந்தன. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பது முறையான அரசியல் கட்சி அல்ல, பகடியும் நகைச்சுவையும் நிறைந்த டிஜிட்டல் ஒருங்கிணைவாகும்.

பாஸ்டன் பல்கலைக்கழக மாணவரும், அரசியல் உத்தி வகுப்பாளருமான அபிஜித் தீப்கே என்பவருக்கு நகைச்சுவையாக தோன்றிய யோசனை, இணைய வெளியை கலக்கியது. இதற்காக அவர் உருவாக்கிய வலைத்தளத்தில் பல லட்சம் பேர் ஒரு சில நாட்களில் பதிவு செய்தனர். நானும் ஒரு கரப்பான் பூச்சி (#MainBhiCockroach) என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, பெரும் புகழ் பெற்றது.

ஒரே வாரத்தில் கரப்பான் பூச்சி கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10 மில்லியன் (ஒரு கோடி) பேர் பின்தொடர்ந்தனர். பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 8.7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அதனையும் முந்தி விட்டது கரப்பான் பூச்சி கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம்.

கரப்பான் பூச்சி கட்சியின் எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். ஒரே வாரத்தில் ஆளும் பாஜக கட்டமைத்திருந்த டிஜிட்டல் சாம்ராஜ்யத்தையே வீழ்த்தி விட்டது.

இவ்வளவு பேர் எப்படித் திரண்டார்கள்? பின்னணி என்ன? என்பது குறித்து கரப்பான் பூச்சி இயக்கத்துக்கு வித்திட்ட அபிஜித் தீப்கே கூறுகிறார்..

“இவ்வளவு பேரும் தாங்களாகவே முன்வந்துதான் சேர்ந்தனர். அவர்களை ஒன்றாகக் கொண்டு வந்தது எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஒரு டிஜிட்டல் நிறுவனமோ அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சியோ இப்படிச் செய்திருந்தால், அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்காது. அவர்கள் எவ்வளவு பணம் செலவழித்திருந்தாலும் அதற்குப் பலன் இருந்திருக்காது. கோடிக்கணக்கான ரூபாயை கொட்டித் தீர்த்திருந்தாலும் கூட, இப்படி ஒரு மக்கள் வரவேற்பை யாராலும் பார்த்திருக்க முடியாது.” என அபிஜித் தீப்கே உறுதியுடன் கூறுகிறார்.

மேலும், “இளைஞர்களின் மனதில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் ஏமாற்றமும் கோபமும்தான் இவ்வளவு பெரிய வரவேற்புக்குக் காரணம். அரசாங்கத்தின் தோல்விகளால் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். தங்களின் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதற்குத் தகுந்த ஒரு தளத்தை அவர்கள் இறுதியாக கண்டறிந்துள்ளனர்.” என்கிறார் அபிஜித் தீப்கே.

கரப்பான் பூச்சி இயக்கம் இளம்தலைமுறையின் வர்க்கச் சீற்றத்தையும், ஆழமான வாழ்வாதாரப் போராட்டத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. இதனால்தான் இணைய வெளியையும் தாண்டி கரப்பான் பூச்சி இயக்கம் மக்களிடம் பரவியது. பல நகரங்களில் தன்னியல்பாக கரப்பான் பூச்சியைப் போல் உடையணிந்து தூய்மைப் பணிகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கரப்பான் பூச்சி கட்சியின் அதிகாரப்பூர்வ பாடலான “ஆம், நான் கரப்பான் பூச்சிதான்” (ஹான் மைன் ஹூன் காக்ரோச்) என்ற பாடல், தேசியத் தேர்வு முகமையின் (NTA) கட்டமைப்பு ரீதியிலான ஊழல்களையும், வினாத்தாள் கசிவுகளையும், அதன் மூலம் எளிய மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் மீது திணிக்கப்படும் அதீத மன அழுத்தத்தையும் போட்டித் தேர்வுச் சூதாட்டங்களையும் காட்டமாக விமர்சிக்கிறது.

கரப்பான் பூச்சிக் கட்சியின் அதீத வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய மோடி அரசு, மே 21 ஆம் தேதி அவர்களின் எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தை முடக்கியது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் வலைத்தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அவர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது. மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் இணையத்தில் பெரும் எதிர்ப்புக் கனலைத் தூண்டியது.

இதற்குப் பதிலடியாக, கரப்பான் பூச்சிகள் மீண்டும் வரும் (Cockroach is Back) என்ற புதிய கணக்கைத் தொடங்கிய அபிஜித் தீப்கே, “கரப்பான் பூச்சிகள் என இழிவுபடுத்தி, எளிதாக ஒழித்துவிடலாம் என்று நினைத்தீர்களா?” எனப் பதிவிட்டு டிஜிட்டல் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

“அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களைக் கேள்வி கேட்கும் குடிமக்களைக் கரப்பான் பூச்சிகளாகவும் ஒட்டுண்ணிகளாகவும் கருதுகிறார்கள். ஆனால் கரப்பான் பூச்சிகள் எப்போதும் அழுகிய இடங்களில்தான் பெருகும். இன்றைய இந்தியாவின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புமே அழுகிப் போயுள்ளது என்பதையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் வளர்ச்சி காட்டுகிறது” என்று இலக்கிய நயத்துடன் அபிஜித் தீப்கே அல்ஜசீரா பேட்டியில் கூறினார்.

“தற்போதைய அரசியல் அமைப்பின் மீது இளைஞர்களுக்கு மிகுந்த சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அடுத்த சில ஆண்டுகளில், இளைஞர்கள் மாற்றத்தை வலியுறுத்திக் குரல் கொடுப்பதை நீங்கள் பார்க்கலாம். கடந்த 10-12 ஆண்டுகளாக ‘இந்து-முஸ்லிம்’ பிரிவினையை மையமாகக் கொண்ட வெற்றுப் பேச்சுகளைத் தவிர இளைஞர்கள் வேறு எதையும் கேட்கவில்லை.” என்று கூறும் அபிஜித் தீப்கே, “இந்த கரப்பான் பூச்சி இயக்கம் கள அளவிலான மக்கள் இயக்கம் அல்ல, இது தற்போதைய அரசாங்கத்தின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள அதீத விரக்தியையும், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் வெளிப்படுத்த வழியற்ற சூழலைக் காட்டும் ஒரு டிஜிட்டல் அறிகுறி (Symptom) மட்டுமே” என்பதை ஒப்புக்கொள்கிறார்.

அதாவது, அவர்களின் வர்க்கச் சீற்றம் டிஜிட்டல் தளத்தில் தன்னியல்பாக வெடித்துள்ளது. இதனை நெருக்கடி நிறைந்த சமூகச் சூழலை மாற்றும் மக்கள் இயக்கமாக, பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும் அடக்குமுறைகளில் இருந்தும் அவர்களை விடுவிக்கும் போராட்டமாக மாற்ற வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு இடதுசாரி இயக்கங்களுக்கு இருக்கிறது. இன்றைய தலைமுறையின் போராட்ட மொழியையும் கலகக் குரலையும் கற்றுக்கொண்டு முன்னெடுத்துச் செல்லும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button