தமிழகம்

அரசு அலுவலகங்கள் முன் டிச. 1, 2, 3ல் தொடர் மறியல்

விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் (பிகேஎம்யூ) மாநில நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள், நவம்பர் 17, 18 தேதிகளில் சங்கத் தலைவர் நா.பெரியசாமி தலைமையில் தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், பொதுச்செயலாளர் அ. பாஸ்கர், துணைத் தலைவர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ., செயலாளர்கள் வி.பி. பழனிசாமி, எஸ். மகேந்திரன், தருமபுரி மாவட்டத் தலைவர் சி.சிவன் உட்பட 27 மாவட்டங்களில் இருந்து பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன் வரவேற்றுப் பேசினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் கே. மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. டிசம்பர் 1, 2, 3 தொடர் மறியல் போராட்டம்

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஊரகத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமை அளித்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கி விட்டு, விபி ஜி ராம்ஜி என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்ட செலவுக்கான நிதியை இதுவரை முழுமையாக ஒதுக்கீடு செய்து வந்த ஒன்றிய அரசு, தற்போது 60 சதவீத நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்யும், மேலும் தேவையான 40 சதவீதம் நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இது தவிர வருகைப் பதிவு முறையில் கண்விழிப்படலம் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுகின்றது.

இந்த விவசாயத் தொழிலாளர் விரோத சட்டத்தை நீக்கி விட்டு, முந்தைய சட்டத்தை, மேலும் வலுப்படுத்தி வேலை பெறும் நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தவும், குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.700 நிர்ணயித்து வழங்க வலியுறுத்தியும் டிசம்பர் 01, 02, 03 தேதிகளில் நாடு முழுவதும் நடைபெறும் மறியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

2. மேக்கேதாட்டு அணை: முதலமைச்சருக்கு கண்டனம்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, ஹெல்சிங்கி நதிநீர் பகிர்வு கோட்பாடுகள் என அனைத்துக்கும் எதிரானது என்பதுடன், இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை சீர்குலைத்து, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்க்கும் ஆபத்தான அணுகுமுறையாகும். இதனை கர்நாடக மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், அம்மாநில மக்களை தவறாக வழி நடத்தி வருவதை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் கண்டிக்கிறது. தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை மதித்து, மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கைவிட்டு, இரு மாநில மக்களுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்த கர்நாடகா முதலமைச்சர் முன்வர வேண்டும்.

3. கண் விழிப்படலம் பதிவு வருகைப் பதிவேடு முறையை கைவிடுக!

புதிய விபி ஜி ராம்ஜி திட்டத்தில் வருகைப் பதிவேடுக்கு, வேலை செய்யும் தொழிலாளர்களின் கைரேகை, கண்விழிப்படலத்தை பதிவு செய்வது கட்டாயம் ஆகும். இந்த முறையில் பெரும்பாலான தொழிலாளர்களின் கண்விழிப் படலம், கைரேகை முறையாகப் பதிவாகாததால், அன்றாடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளிலும், மலை சார்ந்த வனக் கிராமங்களிலும் இணைய வலைத் தொடர்பு இணைப்பு கிடைக்காத நிலையிலும், மிக மெலிதான தொடர்பும் இந்த நவீன வருகைப் பதிவேடு முறைக்கு உகந்ததாக இல்லை, எனவே நேரடி வருகைப் பதிவேடு (Physical Attendance) முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும்.

4. வசிப்பிட உரிமைக்கு முன்னுரிமை தருக!

அரசியலமைப்பு சட்டம், வாழும் உரிமையின் ஒரு பகுதியாக வசிப்பிட உரிமையும் (Right to Shelter) அடிப்படை உரிமையில் அடங்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கூறியுள்ளது. ஆனால், வசிப்பிட வசதிக்காக தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளில் குடும்பத்திற்கு தலா 2.0 சென்ட் முதல் 2.5 சென்ட் வரையிலும், நகரப் பகுதிகளில் 1.25 சென்ட் முதல் 1.5 சென்ட் வரையிலும், மாநகர் பகுதிகளில் ஒரு சென்ட் என்ற அளவிலும் வீட்டு மனை நிலம் வழங்க வரம்பு நிர்ணயித்துள்ளது.

இது எந்த வகையிலும் கண்ணியமான வாழ்வுக்கான சூழலை உருவாக்க உதவாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். வசிப்பிட வசதி அளித்தல் தொடர்பான பந்தோபாத்யாய வல்லுநர் குழு, குடும்பத்திற்கு தலா 15 சென்ட் மனை நிலம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு இதனைப் பரிசீலித்து வீட்டுமனை நில அளவை உயர்த்த வேண்டும். இலவச மனைப் பட்டா பெறுவதற்கான தகுதிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பதை ரூ. 7 லட்சமாக உயர்த்த வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button