தமிழகம்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பவள விழா

‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புதிய பதிப்பு; என்.சி.பி.எச். பவள விழா மலர் வெளியீடு

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பவள விழா 21.11.2026 சனிக்கிழமை அன்று அம்பத்தூரில் நடைபெற்றது.

விழாவிற்குத் தலைமை வகித்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், “நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75 ஆண்டு கால வரலாற்றை எடுத்துரைத்தார். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் இந்த உலகிற்கு அளித்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பற்றிய நூறு நூல்களை என்சிபிஎச் விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்தார். 80 பக்கங்களை மட்டுமே கொண்ட இந்தப் புத்தகங்களை அனைத்து நூலகங்களுக்கும் வழங்கவும், பள்ளிகளில் மாணவர்கள் வாசிக்கவும் தேவையான ஏற்பாடுகள் என்சிபிஎச் சார்பில் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த விழாவில் வரவேற்புரையாற்றிய நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் க. சந்தானம், “அறம் சார்ந்த விழுமியங்களை இழந்துவிடாமல் பதிப்பகத்தைக் கொண்டு செல்வோம், கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறி செல்வோம் என்பதை இந்த எழுபத்தைந்தாம் ஆண்டு பவள விழாவில் உறுதிமொழியாக அளிக்கிறோம்” என்று கூறினார்.

‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புதிய பதிப்பு நூலை என்சிபிஎச் இயக்குநர் கே. சுப்பராயன் எம்.பி. வெளியிட, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பவள விழா மலரை முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட, அமரர் பி.சீனிவாசராவ் அவர்களின் மகள் பிரேமலதா சீனிவாசராவ் பெற்றுக் கொண்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உரையாற்றினார். அப்போது, “புத்தகங்களை வெளியிடுவது என்பது வெறும் வணிக நடவடிக்கை அல்ல; சமூக மாற்றத்துக்கான சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியாகும். உலகளாவிய விடுதலைச் சிந்தனைகள், சிறிய நூல்கள், பெரிய அளவிலான நூல்கள் எனப் பல்வேறு படைப்புகளைத் தமிழில் வெளியிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் முதன்மையான பங்காற்றி வருகிறது என்றும் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டார்.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (BAPASI) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் உரையாற்றும்போது, “பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் இணைந்து செயல்படும்போதுதான் புத்தக உலகம் மேலும் வளர்ச்சியடையும். எனவே, புத்தகத் திருவிழாக்கள் மூலம் வாசிப்புப் பழக்கத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

பவள விழா மலரை வெளியிட்டு, முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பேருரையாற்றினார். அப்போது, “மூலைமுடுக்கில் இருக்கக்கூடிய வாசகர்களிடமும் புத்தகங்களை எடுத்துச் செல்லும் அரும்பணியைப் பதிப்பாளர்கள்தான் செய்கிறார்கள். வாசகர்கள் எதை விரும்புகிறார்கள் என்று வெளியிடுவது பதிப்பகம் அல்ல; வாசகர்கள் எதைப் படிக்க வேண்டும் என்று பார்த்து அவர்களின் மனநிலையில் ரசவாதத்தை ஏற்படுத்துவதுதான் ஒரு நல்ல பதிப்பகத்தின் பணியாகும். கடந்த 75 ஆண்டு காலத்தில் 10 ஆயிரம் புத்தகங்களை வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஏராளமான புதிய புதிய எழுத்தாளர்கள், இலக்கிய வாதிகளை உருவாக்கியுள்ளது. தனது 20 கிளைகள் மூலம் தமிழகமெங்கும் அறிவு வெளிச்சத்தைப் பரப்பி வருகிறது. ரஷிய மற்றும் பிற மொழிகளில் வெளிவந்த முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வாசகர்களிடம் கொண்டு சென்றுள்ளது.

தொழிலாளர் உரிமை, பொதுவுடைமை, சமூக சமத்துவம், சாதி எதிர்ப்பு, சமூக நீதி போன்ற கருத்துகளை மையமாகக் கொண்ட புத்தகங்களை வெளியிட்டு சமூகப் பணியாற்றி வருகிறது, என்சிபிஎச். மேலும், சென்னை கண்ணகி நகரில் பள்ளி மாணவர்கள் எழுதிய 50 புத்தகங்களையும், கடலூர் சிறையில் 81 சிறைவாசிகள் எழுதிய 85 புத்தகங்களையும் வெளியிட்ட சிறப்பும் இந்தப் பதிப்பகத்துக்கு உரியது. இந்தப் பதிப்பகத்திற்கு நான் வாசகராக இருந்தேன். ‘வாய்க்கால் மீன்கள்’ மூலம் நான் வழுக்கி விழவில்லை; நிமிர்ந்து நின்றேன். அதற்குப் பிறகு, ‘மூளைக்குள் சுற்றுலா’ உள்பட எனது 77 புத்தகங்கள் இந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன” என்று வெ.இறையன்பு உரையாற்றினார்.

‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புதிய பதிப்பை வெளியிட்டு, என்சிபிஎச் நிறுவனத்தின் இயக்குநர் கே.சுப்பராயன் எம்.பி. உரையாற்றினார். அப்போது, “வரலாறு என்பது சுரண்டப்படுகின்றவர்கள் சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடிய போராட்டங்களின் தொகுப்பு இது. அந்தப் போராட்டம் இன்று வரை தொடர்கிறது. எனவே, இன்றும் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல் தேவைப்படுகிற ஒன்றாகும்” என்றார்.

என்சிபிஎச் நிறுவனத்தின் இயக்குநரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான இரா.முத்தரசன் பேசிய போது, தொலைநோக்குடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் தலைவரான பி. சீனிவாசராவ் இருந்தார். பின்னர், வி.பி.சிந்தன், மோகன் குமாரமங்கலம், வ.சுப்பையா, ப.மாணிக்கம், பாலதண்டாயுதம், எம்.வி.சுந்தரம், இராதாகிருஷ்ண மூர்த்தி, இரா.நல்லகண்ணு ஆகியோர் தலைவர்களாகப் பணியாற்றிய நிறுவனம் என்சிபிஎச். இந்தத் தலைவர்களெல்லாம் எள்முனையளவும் சுயநலமற்ற தலைவர்கள். இவர்கள் பொது நோக்கத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்” என்றார்.

என்சிபிஎச் இயக்குநர் கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ. பேசும் போது, “கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூலை ஓர் அணா விலைக்கு விற்ற அனுபவம் தமக்கு உண்டு” என்று கூறினார்.

நியூ செஞ்சுரி புத்தக விற்பனை நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.சண்முகநாதன் நன்றி கூறினார். நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75 ஆண்டு அறிவுப் பயணத்தை குறிக்கும் இந்த விழாவில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் ஊழியர்கள், கட்சித் தோழர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button