
என்ன நிகழப் போகிறது என எல்லோரின் விழிகளும் திருப்பரங்குன்றத்தை நோக்கித் திரும்பியிருந்தன. ஏனெனில் ஏற்றப்பட இருப்பது தீபமல்ல; தமிழர்களின் பாரம்பரிய சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், மனித உறவுகளை எரிப்பதற்காக வைக்கப்படும் கொள்ளி!
இதனைத் தமிழ்நாடு அரசு தடுக்குமா? அல்லது நீதிமன்றம் சொல்லும்போது நானென்ன செய்வது என ஒதுங்கி நிற்குமா என மனிதநேயம் கொண்ட எல்லோரும் பதைபதைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
விஜய் அரசின் இதுவரையிலான அணுகுமுறையினால் எழுந்த அச்சம் அது. ஒன்றிய பாஜக அரசோடு எல்லாவற்றுக்கும் மல்லுக்கட்ட வேண்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், ஒன்றிய அரசின் தொழிலாளர் உரிமை பறிக்கும் நடவடிக்கைகள், பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் தனியார் ஆதிக்கத்தை அதிகரித்தல், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் வணிகமயமாக்கல், நீட் தேர்வு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் எனப் பல பிரச்சினைகளில் மாநில அரசின் கொள்கை நிலைப்பாடு சரியாகத் தெளிவுபடுத்தப் படவில்லை. இன்னும் சொன்னால் சில விஷயங்களில் பாஜக அரசுக் கொள்கைகளையே தமிழ்நாடு அரசும் பின்பற்றியது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, தமிழ்நாட்டை பாஜகவால் ஒருபோதும் வெல்ல முடியாது என்று கூறினார். அந்த அளவுக்குக் கூர்மையான அரசியல் எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருந்தது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் அரசியல் களத்தில், திமுக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்தும் அந்தக் கூர்மை தொடர்ந்து வெளிப்படவில்லை. இச்சூழலில் தனது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்த பாஜக பல முயற்சிகளை மேற்கொள்கிறது.
ஆனால், தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலைப்பாடு, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கவனிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தீபம் ஏற்றும் முடிவை ஏற்க மறுத்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இடத்திலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியான நிலை எடுத்திருக்கிறது. அதிகமான வாய்வீச்சுகள் இல்லாமல், அழுத்தங்களுக்குப் பணியாமல் அரசு எடுத்துள்ள இந்த நிலைபாடு வரவேற்கத்தக்கது; பாராட்டுதல்களுக்கு உரியது.
தலைமுறைகளாக திருப்பரங்குன்றம் மக்களிடம் மத வேறுபாடுகளால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை; இப்போதும் இல்லை.
வெளியிலிருந்து கலகத்தைத் தூண்டும் முயற்சிகளோடு, முருகனின் திருத்தலம் நோக்கிப் புறப்பட்ட இந்துத்துவ அரசியல் அமைப்புகளின் தலைவர்களை அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே காவல்துறை கைது செய்திருக்கிறது.
மதரீதியான பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல் தடுத்திருக்கிறது. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சிகளைத் தடுக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. அந்தக் கடமையை இந்த விவகாரத்தில் அரசு உணர்ந்து செயல்பட்டிருக்கிறது.
குரியன் ஜோசப் குழுவைக் கலைத்ததுபோல அல்லாது, திமுக அரசின் ஆய்வு முடிவுகளை சீராய்வு மனுவோடு இணைத்துத் தாக்கல் செய்து, மலைமேல் இருப்பது நிலஅளவைக் கல்தான் என்று உறுதிபடக் கூறியிருப்பதும் மெச்சத்தக்க செயலாகும். திருப்பரங்குன்றத்தில் அரசு காட்டிய உறுதி, ஒரு குறிப்பிட்ட மதப் பிரச்சினையில் எடுத்த நிலைப்பாடாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது.
பாஜகவின் அரசியல், வெறுமனே தேர்தல் அரசியல் அல்ல; மத அடையாளங்களை முன்னிறுத்தி, சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தி, அதன் வழியாக அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்தும் திட்டமிட்ட அணுகுமுறை. இதனை எதிர்கொள்வதற்கு அவ்வப்போது வெளிப்படும் எதிர்வினைகள் மட்டும் போதாது.
மதச்சார்பின்மையிலும், சமூக நீதியிலும், தொழிலாளர் உரிமைகளிலும், பொதுத்துறைப் பாதுகாப்பிலும், மாநில உரிமைகளிலும் கொள்கை உறுதியுடன் செயல்பட வேண்டும்.
பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இடமளித்துவிட்டு, அதன் விளைவுகள் தீவிரமடையும்போது மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது அரசியல் உத்தியாக இருக்க முடியாது.
இணக்கத்திற்கும் அடிபணிதலுக்கும் இடையில் ஒரு தெளிவான கோடு இருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் அந்தக் கோட்டை அரசு கீறியிருக்கிறது. அதே கோடு ஆட்சி நிர்வாகத்தின் மற்ற எல்லாத் துறைகளிலும் அழுத்தமாகப் பதிய வேண்டும்.
இல்லையெனில், ஒரு புறம் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் பாஜகவின் பொருளாதார, சமூகக் கொள்கைகளுக்கு வழிவிடும் முரண்பாடு தொடரும். அத்தகைய முரண்பாட்டுக்கு இடமளிக்காமல், தமிழகத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக மரபையும் மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாப்பதில் விஜய் அரசு உறுதியுடன் நிற்க வேண்டும்.