தலையங்கம்

நீதிபதியின் நாவில் இந்துத்துவச் சாயம்!

ஜனசக்தி தலையங்கம்

கோவை பெரியார் அறிவுலகம், மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர், பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட நூலகம். ஆனால், அங்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறான தகவல்களைக் கொண்ட ஏராளமான நூல்கள் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியளித்தது.

அரசு நூலகங்களுக்கு நூல்களைத் தேர்வு செய்தது, கொள்முதல் செய்தது, விலை நிர்ணயம் செய்தது, பணம் வழங்கியது என அனைத்துக்கும் ஆவணங்கள் இருக்க வேண்டும். திமுக ஆட்சியிலா, தவெக ஆட்சியிலா தவறு நடந்தது என்று அரசியல் லாவணிக் கச்சேரி அவசியமற்றது. சிபிசிஐடி விசாரணைக்கு அனுப்பியிருப்பது மட்டுமல்லாமல், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், பொதுப்பணம் மீட்கப்படுவதும் அவசியம்.

அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற காஞ்சிப் பெரியவர் பற்றிய .நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

அந்த நூலகத்தில் போலி நூல்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளில் மகா பெரியவர் புத்தகங்களை வைக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்தால்தான் அங்கு ஏற்பட்ட பாவம் நீங்கும் என்றும் அவர் பேசியிருக்கிறார். நூல் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேட்டை விசாரித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டியதுதான் நீதித்துறையின் பணி. பாவம், புண்ணியம், பரிகாரம் என்று பேசுவது ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் விருப்பமாக இருக்கலாம்; நிச்சயம் நீதிபதிக்கானது அல்ல.

முற்போக்கு சக்திகள் நீதிபதியின் பேச்சைக் கண்டித்துள்ளன. மதுரை மக்களவை உறுப்பினரும், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் “நூலகக் கொள்முதலில் நடந்தது ஊழல்; குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதிபதிகளின் வேலை. பாவத்துக்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று கூறுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காகப் பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் மகா பெரியவர்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளிக்க, நீதிபதி சாமிநாதன் தனது நீதிபதி நாற்காலியைப் பயன்படுத்துகிறார்! நவம்பர் 16ல், மதுரைக் கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், ரயில் நிலையத்தில் பென்ஸ் காரில் வந்து சு.வெங்கடேசன் இறங்கியதாகவும், உயர்ரக ஆடைகளும் காலணிகளும் அணிந்திருந்ததாகவும், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்ததாகவும், தான் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்ததாகவும் பேசியுள்ளார். புத்தகங்களுக்குக் கிடைக்கும் ராயல்டி வருமானத்தால் மட்டுமே இத்தகைய வாழ்க்கை முறையைப் பராமரிக்க முடியுமா என்று, அவரது நாணயத்தைக் கொச்சைப்படுத்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

. ரயில் நிலையத்தில் அவரை இறக்கிவிட்ட கார் அவருடையதாகிவிடாது. அவர் ஒன்றும் தங்க இழைகளால் நெய்யப்பட்ட உயர் ரக ஆடை அணியவில்லை. அதன் விலை குறித்துஎந்த ஆதாரமும் இல்லை. நேர்மையற்ற வருமானம் ஈட்டுபவர் என்ற சந்தேகத்தை உருவாக்குவது நீதித்துறைப் பொறுப்புக்கு உகந்ததல்ல.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் பயண உரிமையின் அடிப்படையிலேயே அவர் முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளார். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவருடைய அரசியல் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவருடைய கருத்து சரியாகியும் விடாது.

நீதிபதிகளுக்கான மாதச் சம்பளம், வீடு, பயணப் படிகள் உள்ளிட்ட அரசுச் சலுகைகள் அனைத்தும் சட்டப்படியும் அரசு நிதியிலிருந்தும்தான் வழங்கப்படுகின்றன. உயர் நீதிமன்ற நீதிபதியின் அடிப்படை மாதச் சம்பளம் ரூ.2.25 லட்சம். இவற்றை நீதிபதி பெறக்கூடாது என்று யாரும் கூறவில்லை.

பிறர் பயன்படுத்தும் வசதிகளை வைத்து அவர்களது அரசியல் நேர்மையை அளவிடுவது எந்த வகையில் நியாயம்?

இந்த அணுகுமுறையைத் தனிப்பட்ட கருத்து மோதலாக மட்டும் பார்க்க முடியாது. சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் வர்ணாசிரமக் கருத்தியலையும் எதிர்த்துப் போராடிய அம்பேத்கரையும் பெரியாரையும் விட வேறு ஒருவர் உயர்ந்தவர் என்ற படிநிலையை உருவாக்குவது, சமூகநீதியின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. வழிபாட்டு நம்பிக்கைகள் தனிநபர் உரிமை. ஆனால், அவற்றைச் சட்டத்துக்கும் பகுத்தறிவுக்கும் மேலாக நிறுத்த முடியாது.

நீதிபதியின் தனிப்பட்ட நம்பிக்கைகள் அவருடையவை. ஆனால், நீதிபதியின் நாற்காலி எந்தவொரு தனிப்பட்ட சித்தாந்தத்தையும் உயர்த்திப் பிடிப்பதற்கான மேடை அல்ல.

பெரியாரை விட யார் பெரியவர் என்ற போட்டி இங்கு பிரச்சினையல்ல. பகுத்தறிவுக் கேள்விகளைச் சகித்துக்கொள்ள முடியாத மனநிலையே பிரச்சினை. நீதிபதியின் அதிகாரம் அவரது தனிப்பட்ட கருத்துகளுக்கு அதிகாரப்பூர்வ முத்திரை குத்துவதற்கானது அல்ல!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button