
1917 நவம்பர் புரட்சி மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனைகளில் ஒன்றாகும்.
சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைத் தூக்கியெறிந்து, அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைகளுக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல், சமூகத்தை மாற்றியமைக்க முடியும் என்ற புதிய நம்பிக்கையையும் அது உருவாக்கியது.
போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களே தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் என்பதை நிரூபித்தனர். சமத்துவம், கூட்டுடைமை, சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மாற்றுச் சமூக அமைப்பு கற்பனையல்ல; வரலாற்று சாத்தியம் என்பதை ரஷ்யப் புரட்சி உலகிற்கு உணர்த்தியது.
இந்தப் புரட்சியின் தாக்கம் ரஷ்ய எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் பரவியது. தொழிலாளர்கள், விவசாயிகள், காலனிய எதிர்ப்பு இயக்கங்கள், முற்போக்கு சக்திகள் எனப் பல தலைமுறையினருக்கு அது உத்வேகம் அளித்தது. சுரண்டல், ஒடுக்குமுறை, பொருளாதார ஆதிக்கம் இல்லாத எதிர்காலச் சமூகத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கியது. விடுதலைப் போராட்டங்களைச் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களாகவும் விரிவுபடுத்தியது.
இந்த வரலாற்று மாற்றத்தின் மையமாக விளங்கியவர் லெனின். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கிய விஞ்ஞான அடித்தளத்தின் மீது மார்க்சியத்தை வளர்த்த அவர், அதை வெறும் கோட்பாடுகளின் தொகுப்பாகப் பார்க்கவில்லை. சமூக முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு, ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையின் மூலம் சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞான வழிமுறையாகக் கருதினார்.
ரஷ்யாவின் வரலாற்றுச் சூழலுக்கேற்ப மார்க்சியத்தைப் பயன்படுத்தி, புரட்சிகரக் கோட்பாட்டை நடைமுறையாக மாற்றினார். “புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது” என்ற அவரது கூற்று இன்றும் பொருத்தமானது. தெளிவான கருத்தியலும் விஞ்ஞானப் புரிதலும் இல்லாத அரசியல் நடவடிக்கை முழுமையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
ஒரு நூற்றாண்டைக் கடந்த பின்னரும் ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை. முதலாளித்துவம் தனது உற்பத்தி முறைகளையும் மூலதனக் குவிப்பு வழிமுறைகளையும் மாற்றியிருக்கிறது. ஆனால் அதன் அடிப்படை முரண்பாடுகள் தொடர்கின்றன. செல்வக் குவிப்பு, உழைப்புச் சுரண்டல், அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், அத்தியாவசியத் தேவைகளின் வணிகமயமாக்கல் ஆகியவை உலகை ஆட்டிப்படைக்கின்றன.
தனியார் லாபத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதார அமைப்பு சுற்றுச்சூழல் நெருக்கடியையும் தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, சமூகநீதிக்கான போராட்டம், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும், இயற்கைச் சூழல் அழிவுக்கும் எதிரானதாகவும் அமைய வேண்டும்.
இந்தியாவில் வர்க்க ஏற்றத்தாழ்வுகள், சாதிய ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் ஆகியவை ஆழமாக வேரூன்றியுள்ளன. பொருளாதார வளர்ச்சி கோடிக்கணக்கான மக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையையும் பாதுகாப்பையும் வழங்கவில்லை. செல்வமும் வளங்களும் சிலரிடம் குவிகின்றன; தொழிலாளர்களும், விவசாயிகளும் சுரண்டலின் சுமையைச் சுமக்கின்றனர்.
சாதியப் படிநிலைகள் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் மறுக்கின்றன. ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையும், வன்முறையையும் தொடரச் செய்கிறது. இவை ஒன்றோடொன்று தொடர்புடைய ஆதிக்கக் கட்டமைப்புகள். எனவே, ஒரு புரட்சிகர இயக்கம் இவற்றில் ஒன்றை மட்டும் எதிர்த்துப் போராடிவிட்டு மற்றவற்றைப் புறக்கணித்துவிட முடியாது.
ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியதிகாரம், பெருநிறுவன நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான பொருளாதாரக் கொள்கையையும், மதரீதியான பிளவுகள், சமூகப் பழமைவாதம், எதேச்சதிகாரம் ஆகியவற்றை வளர்க்கும் கருத்தியல் திட்டத்தையும் முன்னெடுக்கிறது. ஜனநாயக நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்படுகின்றன; அரசியலமைப்பு விழுமியங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன; மதம், சாதியின் பெயரால் மக்கள் பிளவுபடுத்தப்படுகின்றனர்.
எனவே, இதற்கு எதிரான போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமாக மட்டும் இருக்க முடியாது. மதச்சார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மாற்றுச் சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டமாகவும் அமைந்தாக வேண்டும்.
அண்மைக் காலத்தின் மாணவர், இளைஞர் இயக்கங்கள் முக்கியமான படிப்பினைகளை வழங்குகின்றன. தொடர்ந்து நிகழும் தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கும், கல்வித்துறையின் நெருக்கடிக்கும், எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் அவர்களது துணிச்சலை வெளிப்படுத்தின.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை, ஏதோ ஒரு தனி அமைச்சரை எதிர்ப்பதற்காக வைக்கப்பட்டதல்ல. கல்வி வணிகமயமாக்கல், ஏற்றத்தாழ்வு, நிர்வாகத் தோல்வி ஆகியவற்றால் எதிர்காலம் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மாணவர்களின் குமுறலாக அது வெளிப்பட்டது.
அதேபோல், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) என மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், பெருமளவிலான வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெறும் இயக்கம், ஜனநாயகத்தையும் வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையையும் பாதுகாக்கும் போராட்டமாக வளர்ந்துள்ளது.
வாக்களிக்கும் உரிமையைத் திரித்துக் கையாளவோ பறிக்கவோ முடியாது என்ற இளைஞர்களின் நிலைப்பாடு ஜனநாயக உணர்வின் வெளிப்பாடாகும். அநீதியை ஏற்றுக்கொள்ளாமல் அதிகாரத்தைக் கேள்வி கேட்டு, பொறுப்புணர்வைக் கோரி, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்கள் நிலைநாட்டுகின்றனர்.
ஆனால், அதிருப்தியும் கோபமும் தானாகவே புரட்சிகர சக்தியாக மாறிவிடாது. அவை மக்களைத் திரட்டலாம்; ஆனால் போராட்டத்திற்குச் சரியான திசையையும் ஒருங்கிணைப்பையும் வரலாற்று நோக்கத்தையும் வழங்குவது கருத்தியல்தான்.
ஓர் இயக்கம் அமைச்சரைப் பதவி விலகச் செய்யலாம்; அநீதியான முடிவைத் திரும்பப் பெறச் செய்யலாம். இத்தகைய வெற்றிகள் முக்கியமானவை. ஆனால் அநீதிக்கான அடிப்படைக் காரணங்களை எதிர்கொள்ளாவிட்டால் அவை மீண்டும் உருவாகும். தன்னெழுச்சியான எதிர்ப்பை ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் உணர்வாகவும், உடனடிக் கோரிக்கைகளை நீடித்த சமூக மாற்றத்திற்கான இயக்கமாகவும் வளர்ப்பதே அவசியம்.
இந்த இடத்தில் பகத்சிங்கின் சிந்தனைகள் மிகவும் பொருத்தமானவை. அவர் காலனிய ஆட்சியை எதிர்த்த துணிச்சல்மிக்க விடுதலைப் போராளி மட்டுமல்ல; சமூக மாற்றத்தில் கருத்துக்களின் பங்கை உணர்ந்த புரட்சியாளர்.
“புரட்சியின் போர்வாள், கருத்துக்கள் என்னும் சாணைக்கல்லில்தான் தீட்டப்படுகிறது” என்ற அவரது கூற்று கருத்தியலுக்கும் புரட்சிக்கும் உள்ள உறவை விளக்குகிறது.
அரசியல் அதிகாரத்தை மாற்றுவது மட்டுமே புரட்சியல்ல; சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பு முழுவதும் மாற்ற வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
மார்க்சியத்தையும் உலகப் புரட்சிகர இயக்கங்களையும் அவர் கற்றறிந்தார். அரசியல் சுதந்திரம் மட்டும் போதாது; பொருளாதார விடுதலையும் சமூக விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
காலனிய ஆட்சி முடிவுக்கு வந்தாலும் சுரண்டல் ஒழிந்துவிடாது. தொழிலாளர்களும் விவசாயிகளும் பொருளாதார ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்; சாதியம், மதவாதம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும். அவரது சோசலிச, மனிதநேயக் கண்ணோட்டம் இன்றைய இளைஞர்களும் தனிப்பட்ட அநீதிகளைக் கடந்து அவற்றை உருவாக்கும் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அழைக்கிறது.
லெனினும் தனது “இளைஞர் கழகத்தின் பணிகள்” என்ற உரையில், “கம்யூனிசத்தை நோக்கி முன்னேற விரும்பும் இளைஞர்கள் கம்யூனிசத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். “மனிதகுலம் உருவாக்கியுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் கொண்டு உங்கள் சிந்தனையை வளப்படுத்திக் கொண்டால் மட்டுமே உங்களால் ஒரு கம்யூனிஸ்டாக முடியும்” என்றும் கூறினார்.
எனவே, தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம், அனைவருக்கும் சமமாகக் கிடைக்கக்கூடிய தரமான பொதுக்கல்விக்கான போராட்டமாக வளர வேண்டும். வாக்குரிமையைப் பாதுகாக்கும் இயக்கம் பொருளாதார அதிகாரத்திற்கும் அரசியல் செல்வாக்கிற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம் சாதியத்தின் கருத்தியல், பொருளாதார அடித்தளங்களை எதிர்கொள்ள வேண்டும்.
பெண்கள் விடுதலைக்கான போராட்டம் குடும்பம், பணியிடம், அரசு நிறுவனங்கள் என அனைத்திலும் நிலவும் ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான போராட்டம் இயற்கையைத் தனியார் லாபத்திற்கான வளமாகக் கருதும் பொருளாதார அமைப்பையே கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
கருத்தியல் போராட்டம் கல்விசார் விவாதங்களுக்கும் அரசியல் நூல்களின் பரவலுக்கும் உள்ளானதாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அது மக்கள் இயக்கங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். கூட்டுப் படிப்பு, அரசியல் கல்வி, பண்பாட்டுத் தலையீடுகள், பொதுவெளி விவாதங்கள், மக்கள் போராட்டங்களில் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் விஞ்ஞானப் பார்வையை வளர்க்க வேண்டும்.
இளைஞர்கள் மரபுவழித் தப்பெண்ணங்களைக் கேள்வி கேட்கவும், மூடநம்பிக்கைகளை எதிர்க்கவும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவும் வேண்டும். அன்றாடச் சுரண்டல், பாகுபாட்டு அனுபவங்களைச் சமூக மாற்றத்தின் இலட்சியத்துடன் இணைப்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாகும்.
இந்தப் போராட்டத்தின் அடிப்படை மனிதநேயமாக இருக்க வேண்டும். கம்யூனிசம் முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம் மட்டுமல்ல; மனித மாண்பு, சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் தத்துவமாகும். ஒவ்வொரு தனிமனிதரின் வளர்ச்சியும் அனைவரின் வளர்ச்சிக்கான நிபந்தனையாக அமையும் சமூகத்தை உருவாக்குவதே அதன் நோக்கம்.
தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை மற்ற ஒடுக்கப்பட்ட பிரிவினரின் விடுதலையிலிருந்து பிரிக்க முடியாது. சாதிய ஒடுக்குமுறை, ஆணாதிக்கம், மதவாதம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் சோசலிசப் போராட்டத்தின் பகுதிகளாகும். இயற்கையையும் எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களையும் பாதுகாப்பதும் அவசியம்.
“எவரிடமும் பகைமை கொள்ளாமல், அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்” என்ற ஆபிரகாம் லிங்கனின் சொற்கள் நமது அரசியலுக்கு வழிகாட்ட வேண்டிய மனிதநேயத்தை வெளிப்படுத்துகின்றன. அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டம் மக்களிடம் வெறுப்பை உருவாக்கக் கூடாது. ஒடுக்குமுறை அமைப்புகளையும் பிற்போக்குக் கருத்தியல்களையும் உறுதியாக எதிர்க்கும் அதேவேளையில், கண்ணியத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடும் அனைவருடனும் ஒற்றுமை கொள்ள வேண்டும்.
தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பட்டியலின, பழங்குடி மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரின் ஒற்றுமையே அரசியலுக்கும் சமூகப் பிளவுகளுக்கும் எதிரான வலிமையாகும்.
வரலாறு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதல்ல; தற்போதைய சமூக அமைப்பு நிரந்தரமானதுமல்ல, வெல்ல முடியாததுமல்ல என்பதை ரஷ்யப் புரட்சி நிரூபித்தது. அதேநேரத்தில், புரட்சிக்கு துணிச்சலும் அதிருப்தியும் மட்டும் போதாது. விஞ்ஞானக் கருத்தியல், அரசியல் அமைப்பு, கூட்டுத் தலைமை, உழைக்கும் மக்களின் நலன்கள் மீதான தளராத அர்ப்பணிப்பு ஆகியவை அவசியம். இவற்றை ஒருங்கிணைத்து, கருத்தியல் போராட்டங்களை ஆழப்படுத்தி, மக்கள் இயக்கங்களை வலுப்படுத்தி, பரந்த ஜனநாயக முற்போக்கு மாற்றை உருவாக்குவதே இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சவாலாகும்.
இந்திய இளைஞர்கள் போராடத் தயாராக இருப்பதை நிரூபித்துள்ளனர். அவர்களது துணிச்சலை அரசியல் உணர்வாகவும், கோபத்தை ஒழுங்கமைக்கப்பட்ட வலிமையாகவும், உடனடிப் போராட்டங்களைச் சமூக விடுதலைக்கான நீடித்த இயக்கமாகவும் மாற்ற வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உள்ளது.
சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை, மதவெறுப்பு, ஆணாதிக்கம் இல்லாத சமூகத்தையும், அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, கண்ணியமான வாழ்க்கை உறுதிசெய்யப்படும் சமூகத்தையும் நாம் முன்வைக்க வேண்டும். தனியார் லாபத்தைவிட மனிதர்களுக்கும் பூமியின் நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் சமூகமே நமது இலட்சியம்.
1917 நவம்பர் புரட்சியின் நிலையான செய்தி இதுதான்.
லெனினின் புரட்சிகர மரபும், பகத்சிங்கின் கருத்தியல் தெளிவும், சமத்துவத்திற்கான போராட்டங்களை வழிநடத்தும் மனிதநேயமும் நமக்கு வழிகாட்ட வேண்டும். புரட்சி என்பது அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை மாற்றுவது மட்டுமல்ல; சமூகத்தின் அடித்தளங்களையே மாற்றியமைத்து, ஒவ்வொரு மனிதரும் சுதந்திரம், கண்ணியம், சமத்துவத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும். அத்தகைய சமூகத்திற்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.
அதை முன்னெடுத்துச் செல்வதே நமது வரலாற்றுக் கடமை.
-தமிழில்: டி.எம்.மூர்த்தி