
கோவையிலுள்ள பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் பற்றிய உண்மை நிலை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நூல்களின் தரம் என்பதற்கு அப்பால், விவரத் தவறுகள், உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை உள்ளடக்கிய 3000க்கும் மேற்பட்ட நூல்கள் இப்போது வரை தெரியவந்துள்ளன. இன்னும் மிகுதியாக இருந்தாலும் வியப்பில்லை.
இந்த நூல்களின் ஒரு சில பக்கங்களைப் புரட்டினால், இவை எவ்வளவு குப்பைகளாக இருக்கின்றன என்பது தெளிவாகிவிடும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக எப்போதும் இருந்திராத ஒருவர் ஒரு நூலில் குறிக்கப்படுகிறார். நாலடியார் என்பது ஒரு தொகுப்பு நூலின் பெயர் என்பதைக்கூட அறியாமல் நாலடியாரை நூலாசிரியராகக் குறித்திருப்பதும் இடம்பெற்றுள்ளது. இவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவை போன்ற எண்ணற்ற பொய்களும் புரட்டுக்களும் கொண்ட கழிவுகள் பலவாகும். கருத்துத் திருட்டும் மிகுதி. அறிவைப் பெருக்கிக்கொள்ளுமிடத்தில், குழப்பும் விவரங்கள்.
அய்.எசு.பி.என். எண் பெற்றிருப்பது மட்டும் தகுதியாகாது. அது தகவல் பற்றியது; தரம் குறித்ததன்று. உள்ளடக்கச் சான்றாகாது.
விலையில் கொள்ளை
இவற்றையெல்லாம் அகல்விளக்கு, பீனிக்சு ஆகிய இரண்டு வெளியீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. ‘திரிஷா விஜய்’ போன்ற வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு தலைப்புகளில் இந்த நூல்கள் அமைந்துள்ளன. நூல்களின் உள்ளடக்கத்துக்கும் மேலாக, அவற்றின் விலையும் கொள்ளையைப் பறைசாற்றுகிறது. குறிப்பாக, 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலுக்கு ரூ. 300லிருந்து ரூ. 400 ரூபாய் வரை விலையிடும் நிலை இன்றிருக்க, இத்தகைய 300 பக்க அளவிலான நூல்கள் ரூ. 1300லிருந்து ரூ. 1500 வரை விலை வைக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் பெருமாள் முருகன் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தியவுடன் நூலகங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பள்ளிக் கல்வி அமைச்சர் ராசமோகன், தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் என்று அதை முன்னிறுத்தினார். ஆனால், இந்த நூல்களில் உள்ள முத்திரை 2026 சூன் திங்களைக் குறிப்பதால் இவை விசய் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வாங்கப்பட்டன என்று தி.மு.க. குற்றம் சாட்டுகிறது.
இந்த நூல்களை வாங்குவதற்கான அரசாணை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதாகச் சில ஆவணங்களைக் காட்டி அரசு குற்றம் சுமத்துகிறது.
தமிழ்நாட்டரசு சார்பாக ஊழல் ஒழிப்புத் துறையில் கல்வி அமைச்சரே புகார் அளித்துள்ளார். தனது பங்கிற்குத் தி.மு.க.வும் புகார் தந்துள்ளது.
விளக்கம் காணாத வினாக்கள்
இதுவரை இல்லாத அளவில் சமூக ஊடகங்களில் அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், அரசியல் கட்சியினர், சமூகச் செயல்பாட்டினர் எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். பல வினாக்கள் எழுப்பப்படுகின்றன. பல விளக்கங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
வினாக்களுக்கு விடை தருவது எளிதானதாகத்தான் தெரிகிறது. யாருடைய ஆட்சிக் காலத்தில் இத்தகைய நூல்களை வாங்கப் பரிந்துரை செய்யப்பட்டது, யாருடைய ஆட்சிக் காலத்தில் கொள்முதல் தேர்வு நடந்தது, எப்போது ஆணை வெளியிடப்பட்டது, நூல்கள் எப்போது வழங்கப்பட்டன, எப்போது தொகை தரப்பட்டது என்பன போன்ற முழுமையான விவரங்கள் அரசிடம் இருக்கின்றன.
ஏனோ முழு விவரங்களை அவர்கள் வெளியிடத் தயங்குகின்றனர். இத்தகைய விவரங்கள் மட்டுமே முழுமையல்ல என்பதால்தான் காலம் தாழ்த்தப்படுகிறது என்பதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்த ஒரு சில நாள்களிலேயே ஆயிரக்கணக்கான நூல்கள் உருவாகி வெளிவந்துவிட்டன என்பதும் ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு வழியாக நூல்கள் உருவாக்கம் பெற்றிருந்தாலும், குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான நூல்களை அவ்வளவு எளிதில் முழுமைப்படுத்தியிருக்க இயலாது.
எப்போது தொடங்கியது?
இதனால், போலி நூல்களை உருவாக்குவதையும் அவற்றுக்கு நூலக ஆணை பெறுவதையும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் செயலாகவே காணவேண்டியுள்ளது. இது எப்போது தோன்றியது? கணினி அச்சு அறிமுகத்திற்கு முன்னர் எழுத்தச்சு முறை நடைமுறையில் இருந்தது.
அப்போது போலி நூல்களை உருவாக்குவது எளிதல்ல. தரமற்ற நூல்கள் பல வந்திருக்கலாம். ஆனால், தவறான தகவல்களைக் கொண்ட நூல்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. ஏனெனில், எழுத்தச்சில் குறைந்தது 500 அல்லது 1000 படிகளாவது அச்சிடவேண்டியிருக்கும். அதுவும் விற்பனைக்கு உகந்தவை என்று வெளியீட்டாளர் கருதுவனவே நூல்களாகும். செல்வ நிலை உள்ளோர் தாங்களாகச் சில நூல்களை வெளியிட்டிருக்கலாம்.
இந்திய ஒன்றியத்தில் 1948லேயே பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் தங்களுக்கான நூல்களை நேரிடையாகத் தொடக்கத்தில் வாங்கிக் கொண்டிருந்தன. 1970களில் இவற்றை நடுவப்படுத்தி மாவட்டம் தோறும் வேண்டியிருந்த நூல்களைக் கணக்கிட்டு மாநில அளவில் 600 படிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. பட்டியல் தொகையும் முழுமையாகத் தரப்பட்டது. விலையில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது முறைகேடுகள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காகக் கலந்துரையாடி, 16 பக்கங்கள் கொண்ட அளவிக்கு 50 காசுகள் என்று அன்றைய அங்காடிச் செலவைக்கொண்டு முடிவு செய்யப்பட்டிருந்தது.
படிகளின் எண்ணிக்கையும் விலை அளவும் அவ்வப்போது மாறினாலும், இதில் ஒரு ஒழுங்குமுறை நிலைபெற்றிருந்தது. நூல் தேர்வில் சில பிறழ்வுகள் இருந்திருக்கலாம். ஆனல், கொள்முதல் முறைமைப்பட்டிருந்தது. நூல்கள் மற்றும் இதழ்கள் தருதல் (பொது நூலகங்கள்) சட்டம் 1954 வலியுறுத்தியவாறு, கல்கத்தா தேசிய நூலகம், சென்னை கன்னிமரா நூலகம், மும்பை நடுவண் நூலகம், தில்லி பொது நூலகம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு படியும், தமிழ்நாடு அரசுக்கு இரண்டு படிகளும் அனுப்பியிருந்தால் மட்டுமே நூலக ஆணை வழங்கப்படும்.
அடுத்து, கணினி அச்சு அறிமுகத்தில், ஒரு சில படிகளை அச்சிடலாம் அல்லது ஒளியச்சு செய்துகொள்ளலாம் என்னும் வாய்ப்பு உருவானது. இதனால், ஆயிரம் படிகள் அச்சிடுவதற்கு மாறாக ஒரு சில படிகளை மட்டுமே எடுத்து நூலக ஆணைக்கான தேர்வுக்கு அனுப்பச் சிலர் தலைப்பட்டனர். இந்த நிலையினையறிந்த கணினித் தட்டச்சர்கள் தாங்களாகவே பழைய நூல்களிலிருந்து பல பக்கங்களைப் பிரித்தெடுத்து, அவற்றுக்கு நூல் வடிவமும் தலைப்பும் தந்து, தங்களது பெயரிலேயே நூலக ஆணைத் தேர்வுக்கு அனுப்பத் துணிந்தனர். நூலக ஆணை பெற முடிந்தால் அதற்கேற்றவாறு வேண்டிய படிகளை அச்சிட்டுக்கொண்டனர்.
இந்த முறையின் இன்றைய வளர்ச்சிதான் அகல் விளக்கு, பீனிக்சு போன்ற வெளியீட்டாளர்களை உருவாக்கிவிட்டுள்ளது.
வேண்டியபோது நூல் (Book on Demand) நுட்பமும் எந்திரமும் நுழைந்த பின்னர் 4 படிகளிலிருந்து 8, 12, 16 என அவ்வப்போது வேண்டிய படிகளை அச்சிடும் வாய்ப்பு அவர்களுக்கு உதவுகிறது. முறையான வெளியீட்டாளர்களும் இதனைப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
புதிய நடைமுறைகளில் குறைகள்
தற்போது பொது நூலகங்களுக்கான நூல்கள் பெறுவதில் வெளிப்படைத் தன்மை என்ற பெயரில் புதிய நடைமுறைகளுடன் சில இடைவெளிகளும் தவறுகளும் தோன்றிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த இடத்தில் சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம், கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி போன்ற பிற மாவட்டச் சிறப்பு நூலகங்கள் ஆகியவற்றுக்கான நூல்களை வாங்குவதற்கும், மாநிலமெங்கும் பரவியுள்ள கிளை நூலகங்களுக்கான நூல்களைப் பெறுவது வேறுபட்டுள்ளது.
பொது நூலகங்களுக்கு 500லிருந்து 2000 வரை நிதி நிலைமைகளையொட்டி நூல்கள் வாங்கப்படுவதாகத் தெரிகிறது. அவற்றுக்கான பொது விலையினைக் கலந்துரையாடிப் பக்க அளவில் தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை இறுதி செய்கிறது.
ஆனால், சிறப்பு நூலகங்களுக்கு ஒவ்வொரு படிதான் வாங்கப்படுகிறது. தேர்வு முறையும் வேறு. விலை நிலைப்படுத்தப்படாமல், கழிவு அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. பொது நூலகங்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டில் வெளியான நூல்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. ஆனால், சிறப்பு நூலகங்களுக்கு ஆண்டு வரையறைக் கட்டுப்பாடு இல்லை.
வாய்ப்பில்லாத வல்லுநர்கள்
கோவை பெரியார் அறிவுலகத்துக்குப் பெறப்பட்ட நூல்களைத் தேர்ந்தெடுக்க 135 வல்லுநர்கள் செயல்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவற்றில் பல வேறுபாடுகள் இருப்பதாகச் சுட்டப்படுகிறது. ஒரு சிலருக்கு நூல்களின் பட்டியலை அனுப்பி, அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. வேறு சிலரிடம் நூல்களின் பட்டியலை அவர்களே குறித்துத் தருமாறு வேண்டப்பட்டுள்ளது. ஒரு சிலர் நூலின் அட்டை, உள்ளடக்கம், சில பக்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் எவரும் நூலினை முழுமையாகப் பிரித்துப் படித்துப் பார்க்கும் வாய்ப்பினைப் பெறவில்லை என்றுதான் தெரிகிறது.
இவர்களில் யார் அகல் விளக்கு, பீனிக்சு போன்ற பதிப்பகங்களின் நூல்களைப் பரிந்துரைத்தனர் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. பரிந்துரையையடுத்துக் கொள்முதல் செய்ய முடிவெடுத்த தேர்வுக் குழுவினர் யார் என்பதும் கூறப்படவில்லை.
தேர்வுக் குழுவினர் முடிவெடுத்து நூல்களை இறுதி செய்த பின்னர், கொள்முதல் ஆணை வழங்குவதும், வந்த நூல்களை வரவு வைப்பதும், பட்டியல் தொகையினை விடுவிப்பதும் அலுவலகச் செயல்பாடுகள் மட்டுமே. அவற்றில் நூலக அலுவலர்களைக் குறை கூற இடமில்லை.
தற்போது ‘வின்டேஜ்’ என்ற நிறுவனம் 300 பக்க அளவுக்கு ரூ. 9990 ரூபாய் விலையுள்ள 100 போலி நூல்களை வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் பல இருக்கலாம்.
மேலும் வினாக்கள்
இப்போது எழும் வேறு வினாக்கள் பலவுள்ளன.
1. இத்தகைய போலி நூல்கள் பொது நூலகங்களுக்கும் வாங்கப்பட்டிருந்தால், அவற்றை மதிப்பிட்டது யார்? ஏனெனில், நூலின் ஒரு படியினைப் பார்வைக்குத் தந்தால் மட்டுமே தேர்வாகும்.
2. கன்னிமரா நூலகத்துக்கும் வேறு பொது நூலகங்களுக்கும் தரப்பட்டிருந்தால், அவற்றில் குறித்துள்ள ஆண்டு எது? விலை எவ்வளவு?
3. பெரியார் அறிவுலகத்துக்கு வழங்கிய நூல்களில் மட்டும் பொருத்தமில்லாத விலை குறிக்கப்பட்டதா?
4. நூல்களில் குறித்துள்ள விலை ஒருபுறமிருக்க, கழிவு நீக்கி வாங்கிய விலை யாது?
5. தலைப்பு அல்லது நூலாசிரியர் பெயர்களில் மாற்றங்கள் உள்ளனவா?
6. பத்தாண்டுகளுக்கும் மேலாக நூல்களை வெளியிட்டு வந்தாலும், முகவரியில் குழப்பங்கள் ஏன்?
இவையனைத்தையும் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, குற்றமிழைத்தோர் எந்த நிலையில் இருப்பினும் தண்டிக்கப்படவேண்டும். ஆளும் கட்சியினரைக் கைகாட்டி எவரும் தப்பிவிடக்கூடாது. வணிக நோக்கில், அறிவைப் புறந்தள்ளிய வல்லூறுகளை இனம் காணவேண்டும்.
அத்துடன், நூலகங்களுக்குப் படிகளைப் பெற வெளிப்படையான முறைகளை வகுக்கவேண்டும்.