Uncategorized

திருப்பங்களை நோக்கி ஐரோப்பா

மாநிலச் செயலாளர் கடிதம்

தோழர்களே!

13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்த தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற போராட்டம் நாடு முழுவதும் கடுமையாக நடைபெறுகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் தொடங்கி, பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் தொடர்கிறது. ஜனநாயகத்தை காக்கும் இந்த போரில் இடதுசாரி மாணவர்கள், இளைஞர்கள், காங்கிரஸ் மாணவர்கள், இளைஞர்கள், சிஜேபி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் மாணவர்கள், இளைஞர்கள் முனைப்போடு முன்னணியில் இருக்கிறார்கள்.

சிபிஐ(எம்)மின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டோஸ், சிபிஐ தேசிய செயலாளர் சந்தோஷ் குமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய தலைவர் சுஜிந்தர் மகேசரி, ரோஷன் குமார் உள்ளிட்ட பலர் காயமடைந்து நாள்தோறும் கைதாகி விடுவிக்கப்படுகின்றனர். மேலும் தினமும் தீரமுடன் இப்போராட்டம் தொடர்கிறது.

ஆளும் பிஜேபி அரசு நாட்டின் பிரதமர் இதுகுறித்து மௌனம் சாதிக்கின்றனர். வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் கூறியது போல, “இருட்டில் திருடனைப் பார்த்து குறைக்காத நாயும், அவனது கூட்டாளிதான்” என்பது ஒன்றிய அரசுக்கும் பொருந்தும் அல்லவா?

பிரான்ஸ் தொடங்கி ஐரோப்பா முழுவதும் போராட்டத் தீ பற்றி எரிகிறது. மாணவர்கள் தங்கள் உரிமைக்காக தொடங்கிய போராட்டத்தில் பலரும் பங்கேற்கின்றனர். பல பிரிவு மக்கள் நாள்தோறும் போராட்டங்களில் முன்னணியில் நிற்கின்றனர், வேலையின்மை, வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டுக் கட்டண உயர்வு என இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உழைக்கும் மக்களும், நடுத்தர மக்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக அரசின் அடக்குமுறைகள் ஐரோப்பா முழுவதும் பற்றி எரியச் செய்திருக்கிறது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த மக்களை அனுமதித்ததால்தான் இந்த விளைவு என்று பிரான்சை பார்த்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஊளையிடுகிறார். புலம்பெயர்ந்த மக்கள் புதிய குடியுரிமை பெற்றதால்தான் ஐரோப்பா இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

ஆனால் உண்மை அதுவல்ல.

ஈரான் மீது அமெரிக்கா தொடுத்த போர்தான் முதல் காரணம். கார்பரேட் நிறுவனங்களையும், செல்வந்தர்களையும், நாடு கடந்த நிறுவனங்களையும் காக்கும் கொள்கைதான் இந்த நிலைக்கு காரணம்.

ஐரோப்பிய நாடுகளின் உழைக்கும் மக்கள் புலம்பெயர்ந்த மக்கள் நாட்டில் வசிக்கும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும் நாட்டிற்கு விசுவாசமாகவே உழைக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கும் துணை நிற்கிறார்கள்.

முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை திட்டமிட்டு மூடி மறைப்பதற்காக புலம்பெயர்ந்த மக்கள் மீது பழியை போடுகிறது ஏகாதிபத்தியம்.

பிரான்ஸ் ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆப்பிரிக்காவின் விடுதலையை அடக்கி, ஒடுக்கி, அந்நாட்டின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் தங்கம், வைரம் போன்ற உயர்ந்த கனிமங்களை எல்லாம் கொள்ளையடித்து, பிரான்சின் செல்வந்தர்களின் காலடியில் வைத்த பிரான்ஸ் அரசு உழைக்கும் மக்களுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையே ஆன இடைவெளியை குறைக்க தவறிவிட்டது. பிரான்ஸ் அரசு ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து பல போர்கள் செய்துள்ளது. இதன் விளைவாகத்தான் தற்போது பற்றி எரிகிறது பிரான்ஸ்.

பிரான்ஸ் தொடங்கி இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரியா போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்

முதலாளித்துவத்தின் சுரண்டல், மூலதனக் குவியல், போர் செலவுகள் என்று ஐரோப்பா முழுவதும் திக்கு முக்காடுகிறது. எங்கு பார்த்தாலும் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக, மக்கள் ஒற்றுமை ஓங்குக, போர் வேண்டாம் என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன.

கருப்பின மாணவர்கள், வெள்ளை இன மானவர்கள் இணைந்து, மாணவர்கள் உரிமைகளுக்கான முழக்கங்களை எழுப்புகின்றனர். முதலாளித்துவம் வீழட்டும், சோஷலிசம் மலரட்டும், உழைக்கும் மக்கள் உரிமை வெல்லட்டும் என்று பிரான்ஸ் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் மீண்டும், மீண்டும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். உரிமைக்கான போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டு அரசு ஒடுக்குகிறது. ஆனாலும் அநீதிக்கு எதிரான உரிமைக்கான முழக்கங்கள் ஓயாது.

தற்போது இத்தாலியில் பிரான்சைக் காட்டிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அந்தப் போராட்டங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் புகழ்வாய்ந்த பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தின் மீது பாலஸ்தீனத்தின் கொடி ஏற்றப்படுகிறது. இத்தாலி நாட்டின் கொடியை கூட அத்தனை ஆயிரம் மக்கள் ஒன்று கூடி ஏற்றவில்லை. இது இஸ்லாமியர்களின் ஆதரவு என்கிறார் ட்ரம்ப். ஆனால் இது விடுதலையின் ஆதரவு என்கிறார்கள் மக்கள்.

உலகப் புகழ்வாய்ந்த ரோம், வாடிகன் நகரங்களில் பாலஸ்தீனத்தின் ஆதரவு முழக்கங்கள் விண்ணை பிளக்கிறது. போர் ஒழிக! பாலஸ்தீனம் விடுதலை ஓங்குக! என்ற முழக்கம் வீதி எங்கும் தன்னெழுச்சியாக ஒலிக்கிறது.

ஐரோப்பிய வரலாறு காணாத திருப்பங்களை நோக்கி நகர்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஆம்!

19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது போல அக்டோபர் புரட்சியின் வரலாறு தான் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

உரிமைகள் வெல்லட்டும்…

தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button