
ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஊர்வலம் செல்ல அனுமதி கூறியுள்ளது. இதில் 70 இடங்களுக்கு அனுமதி தந்த தமிழ்நாட்டு காவல்துறை, 58 இடங்களில் கேட்டுள்ள ஊர்வலப் பாதையில் தேவாலயங்களும் மசூதிகளும் இருப்பதால் அனுமதி தர இயலாது என்று தெரிவித்துள்ளது.
இதுவெல்லாம் காரணமா?
இதனை எதிர்த்து வழக்கு தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டபோது, அதனை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நரசிம்மன் அவர்கள் “தேவாலயங்கள், மசூதிகள் போன்ற மத வழிபாட்டுத் தலங்களை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது.
எத்தனை இஸ்லாமியர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? அவர்களைத் தவறாகச் சித்தரிக்கக்கூடாது. நீங்கள் இப்போது அனுமதி மறுத்தால் நாளைக்கு நீங்கள் எதிர்க்கட்சியாகும்போது உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்’’ என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இப்போது யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள்? அது எதிர்க்கட்சியாகும் போது யார் ஆளுங்கட்சியாக வருவார்கள்? காவல்துறை அனுமதி மறுப்பதற்கு ஆளுங்கட்சிதான் காரணமா? நீதிமன்ற கருத்துக்களின் உட்பொருள் என்ன? என்பது போன்ற அறிவார்ந்த கேள்விகளை மாண்பமை நீதிபதியிடம் நாம் கேட்க கூடாது!
இடிக்கப்பட்ட மசூதி
1991ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி, பாபர் மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம், ஊர்வலத்துக்கு அனுமதி தரலாம் என்று நீதிமன்றத்திடம் உத்தரப் பிரதேசத்தின் மாநில முதல்வரும், ஆர் எஸ் எஸ் இயக்கத்திலேயே பிறந்து வளர்ந்த வருமான கல்யாண் சிங் உறுதி அளித்தார். நீதிமன்றமும் அனுமதித்தது.
டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபர் மசூதி தரைமட்டமானது. உறுதி மொழியை காப்பாற்ற தவறியதற்காக கல்யாண் சிங்குக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் காலையில் நீதிமன்றத்திற்கு வந்து மாலையில் புறப்பட்டு போனார்.
ஆனால் அது தொடர்பாக நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் 2000 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும் பகுதி முஸ்லிம்கள்.
திருவல்லிக்கேணியில் நடந்தது
அது கூட வட இந்தியாவில் நடந்தது. இதே சென்னையில், 1990ல் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பிஜேபி நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் “நாளும் நாளும் எட்டு முஸ்லிமைப் பார்த்தால் வெட்டு” எனும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஐஸ் ஹவுஸ் மசூதிக்குள் ஊர்வலம் நுழைந்தது. அந்தப் பகுதியில் இருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன, எரிக்கப்பட்டன. ஆறு முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர்.
நமது நினைவுக்கு வரும் இந்த செய்திகள், மாண்புமிகு நீதிபதிக்கு தெரியாமலா போயிருக்கும்?
அவர்கள் சிரமப்படக்கூடாது
ஆர்எஸ்எஸ் கேட்கும் ஊர்வல பாதையில் சர்ச், மசூதி இருப்பதாக சொல்வதெல்லாம் ஒரு காரணமா? அக்டோபர் 25ஆம் தேதி அவர்கள் ஊர்வலம் நடத்த இருப்பதால், 19ஆம் தேதிக்குள் இறுதிப்படுத்தி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உறுதிபடத் தெரிவித்து விட்டார்.
“அவர்கள் ஊர்வலம் நடத்த ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழலை காவல்துறையை ஏற்படுத்தக் கூடாது” என்றும் கூறி, எதிர்காலத்துக்கும் சேர்த்து ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அது மட்டுமல்ல, 125 இடங்களிலும் அனுமதி மறுக்கப்படுவது சரியல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது காவல்துறையின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
மற்றவர்கள் மீது ஏன் அக்கறை இல்லை?
ஆர் எஸ் எஸ் உரிமை பாதுகாப்பு உள்ள அதே அக்கறை, கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், அரசின் கொள்கையின் மீது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் போராட்ட உரிமையைப் பாதுகாப்பதிலும் இருக்க வேண்டும் அல்லவா?
சென்ற 2018ல், மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி ஒரு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நீதிமன்றத்தில் மனுச் செய்தார். தனி நீதிபதி அனுமதி அளிக்க, காவல்துறையின் மேல் முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் விடுதி, மின்வாரிய அலுவலகத்திற்கு பின்னால் கூவம் கரையில் இருக்கும் திறந்த வெளி கழிப்பிடம் என மூன்று இடங்களை காவல்துறை மாற்றிடமாகத் தந்தது. (இப்போது அந்த மூன்று இடங்களிலும் கூட, போராட்டங்கள் நடத்த காவல்துறை இப்போது அனுமதிப்பதில்லை).
நாலு பேருக்கு நன்றி
2025 நவம்பரில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்கள் பணிபுரியும் மாநகராட்சியின் வளாகத்தில் இருந்து அவர்களை அகற்ற வேண்டும் என்று இதே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போனால் போகிறது என்று, சங்க அலுவலகத்தில் நான்கு சுவர்களுக்குள் நான்கு பேர் உண்ணாவிரதம் இருக்கலாம், அவர்களைப் பார்க்க 50 பேருக்கு மேல் அருகில் வரக்கூடாது என்று அரசியல் சாசன உரிமைகளை அந்தத் தொழிலாளர்களுக்கு அனுமதித்தது. என்ன தாராளமான மனசு!
அரசியல் சாசனத்தின் 19(1)ஏ, 19(1) பி உரிமைகள் எல்லாம் ஆர்எஸ்எஸ்க்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் தான் பொருந்தும் போல!
தீயினும் அஞ்சப்படும்
இந்துத்துவ அமைப்புகள், சென்னை, கோவை, மண்டைக்காடு போன்ற இடங்களில் சிறுபான்மையினர் மீது நடத்திய தாக்குதல்கள், சேதமடைந்த பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், உயிரிழப்புகள் பெரும் ஆவணங்களாக இருக்கின்றன.
அவ்வாறு இருந்தும், சர்ச், மசூதி இருக்கும் பாதையில் ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறுவது தக்க காரணம் அல்ல என்று நீதிமன்றம் சொல்கிறது.
ஆனால் நீதி கேட்டு எந்த வன்முறையும் இன்றி அமைதி வழியில் போராடுபவர்களை காவல்துறை அனுமதிக்க மறுப்பதும், போராடுபவரில் பெண்களைக் கூட முரட்டுத்தனமாக காவல்துறை கண்ணியம் தவறிக் கையாள்வதையும் நீதிமன்றம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அரச வன்முறைக்கு ஆளானவர்களும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்காக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது காவல்துறையின் பொறுப்பு என்றால், மற்ற போராட்டங்களில் யாருடைய பொறுப்பு?
அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மட்டுமே சொந்தமானவையா?
போராடும் மக்களுக்கும் அந்த உரிமைகள் உண்டு!
ஆளுக்கொரு நீதி வழங்குவதும், அரசியல் சாசனத்தை குத்திக் கொலை செய்வதும் வேறு வேறல்ல.