அறிக்கைகள்

இஸ்லாம் மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு – அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது

சட்டத் திருத்தம் செய்ய சிபிஐ வலியுறுத்தல்

இஸ்லாம் மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு – அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, உடனடியாக அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, மதம் மாறியோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட மதநம்பிக்கை மற்றும் மத வழிபாட்டிற்கான சுதந்திரத்தை ஓர் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் பகுதி III-ல் உள்ள பிரிவுகள் 25 முதல் 28 வரை சமயம் சார்ந்த உரிமைகளைப் பற்றி விரிவாக விளக்குகின்றன. இந்த நிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் தங்களின் முந்தைய சாதி அடையாளத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

மதம் மாறியோர் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அமர்வு தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு என்பது மத அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல. சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கியோர் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.

இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, வர்ணம் மற்றும் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கல்வி, கலாச்சார வாழ்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, பலவந்தமாக பிற்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு வந்துள்ளனர்.

நிலம், உழைப்புக் கருவிகள் உள்ளிட்ட உற்பத்திச் சாதனங்களும் பறிக்கப்பட்டு, உடல் உழைப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த உழைக்கும் மக்களால் உற்பத்தியாகும் சமூக செல்வத்தையும் அபகரித்து கொண்ட சமூக ஆதிக்க சக்தியினர், உழைக்கும் மக்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கி வந்தனர்.

சாதி அடிப்படையில் வழிவழியாக, குலத்தொழில் முறை கட்டாயமாக்கப்பட்டு, சில குறிப்பிட்ட சாதிப் பிரிவினரை தூய்மையற்ற தொழில் செய்பவர்களாக அடையாளப்படுத்தி, அதிலிருந்து விடுபட முடியாத நிலையை உருவாக்கியிருந்தது.

இந்த சமூக ஒடுக்குமுறைகள் மதத்தின் அடிப்படையில் உருவானதல்ல. மதம், மதக் கோட்பாடுகள் பொருளாதாரச் சுரண்டலை நியாயப்படுத்தி, சமூக செல்வத்தை கொள்ளையடிப்பதை பாதுகாக்கும் கருவியாக ஆளும் தரப்பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சாதியப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புகள், ஒரு குறிப்பிட்ட மதம் என்றில்லாமல், இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நிலவி வருகிறது. மதம் மாறுவதால் மட்டுமே ஒருவரின் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கி நிலை மாறி விடுவதில்லை.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பட்டியல் சாதியினர் அனைவரும் சமூக ரீதியான ஒடுக்கு முறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே தான் நமது அரசியல் சட்டம், சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்துள்ளது. இவற்றை, கவனத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது.

எனவே, மதம் மாறிய போதிலும் ஏற்கனவே பெற்றுவந்த அதே இட ஒதுக்கீட்டு உரிமைகளை பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்டோரும் தொடர்ந்து பெறும் வகையில் உடனடியாக அரசியல் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இதற்கான உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button