
திமுக ஆட்சியில் போராடிய செவிலியர்களிடம், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள்” என த.வெ.க. வாய்வீச்சு காட்டியது. ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்குப் பின்பு பணிநிரந்தரம் கேட்டுப் போராடிய செவிலியர்களை இரவில் அடித்துக் கைது செய்துள்ளது விஜய் அரசு! அம்மாவோடு உடனிருந்த சின்னக்குழந்தையின் கன்னம் பழுக்க மூர்க்கமாக அடித்திருக்கிறான் ஒரு போலீஸ்காரன்.
480 நாட்கள் வேலை பார்த்தால் நிரந்தரத் தகுதி என்கிறது தமிழ்நாடு அரசின் சட்டம். 5 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னும் செவிலியர்களைத் தற்காலிகமாகவே வைத்திருக்கும் அரசாங்கத்தை எதைக்கொண்டு அடிப்பது?
ஜனநாயகத்தில் மக்கள் அரசிடம் கேள்வி கேட்பார்கள், கோரிக்கை வைப்பார்கள், எதிர்ப்புத் தெரிவிப்பார்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், ஊர்வலம் செல்வார்கள், உண்ணாவிரதம் இருப்பார்கள். இவைதான் ஜனநாயகத்தின் உயிரோட்டம். இவற்றை இடையூறாக அதிகார வர்க்கம் பார்த்தால், அதைத் தவறென்று ஒதுக்கி, ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கடமை.
ஆனால், ஆட்சிக்கு வர மக்களிடம் வாக்குகளைப் பெற வேண்டும்; அதற்கு உங்களுக்கு உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள் என்று வசனம் பேசலாம். உங்கள் அம்மா, அப்பா, அண்ணன், மாமா என்று உறவு கொண்டாடலாம். ஒரே நாளில் உங்கள் துயரங்களை எல்லாம் ஒழித்து விடுவோம் என்று உறுதியளிக்கலாம்.
ஆட்சியைப் பிடித்தபின்பு ஆணையிடும் அதிகாரம் அரசுக்கு வந்து விடுகிறது. அதற்கு முன்பு சொன்னதெல்லாம் மறந்து விடுகிறது. மக்கள் தமது நியாயமான, சட்டபூர்வமான கோரிக்கைகளையும் கெஞ்சித்தான் கேட்க வேண்டும். அரசு ஏற்க மறுத்தால் அடங்கிக் கிடக்க வேண்டும். நமது ஆட்சியாளர்களின் ஜனநாயக லட்சணம் இவ்வளவுதான். அதனால்தான் தமிழ்நாட்டில் மக்கள் தமது கோரிக்கைகளுக்காகப் போராடினால், அது அரசுக்கு எதிரான சதி போலவும், சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது. வீதியில் கால் வைத்தவுடன், லத்தியைச் சுழற்றிக் கொண்டு போலீஸ் வருகிறது.
ஒரு காலத்தில் சென்னையில் தலைமைச் செயலகம் வரைக்கும் பேரணிகள் அனுமதிக்கப்பட்டன. அமைச்சர்கள் வெளியில் வந்து போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசியும் இருக்கிறார்கள். பிறகு பேரணி சேப்பாக்கத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போதோ ஊர்வலங்களுக்கு அனுமதியே இல்லை.
மின்சார வாரிய அலுவலகத்துக்குப் பின்னால் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொன்னார்கள். வள்ளுவர் கோட்டத்திற்கு பின்புறம் தந்த இடமும் இல்லை என்றார்கள். இப்போது எல்லா ஆர்ப்பாட்டங்களும் போலீஸ் ஸ்டேடியத்தின் முன்பு காவல்படையின் கண்ணெதிரே தான் நடத்த வேண்டும்.
இது ஏதோ நிர்வாகப் பிரச்சினை அல்ல; ஜனநாயக உரிமையின் பரப்பைக் குறைக்கும் ஆபத்தான போக்கு. அரசிடம் கோரிக்கை வைக்கும் மக்கள், அதன் நிர்வாக மையத்தை நோக்கிச் செல்வது இயல்பான ஜனநாயகச் செயல். ஒரு போராட்டத்தின் நோக்கம் அரசின், மக்களின், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கோரிக்கையை முன்வைப்பதும்தான்.
இந்திய அரசியல் சாசனத்தின் 19(1)(ஏ) பிரிவு, பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும், 19(1)(பி) பிரிவு அமைதியாகவும், ஆயுதமின்றியும் கூடுவதற்கான உரிமையையும் வழங்குகின்றன.
“வீட்டுக்குள் இருந்து பேசிக்கொள் அல்லது ஆள் அரவம் இல்லாத இடம் தருகிறேன், போய் கத்திக்கொள் உன் அரசியல் சாசன உரிமை அத்தோடு முடிந்து விடுகிறது” என்று அரசு ஆணவத்தோடு ஆடுகிறது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். ஏதொரு போராட்டத்துக்கும் ஐந்து வேலை நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனுக் கொடுக்க வேண்டும். போராட்டம் நடக்கும் நாளுக்கு முந்தைய நள்ளிரவில் காவல்துறை அனுமதி மறுக்கும். அமைதியாகப் போராடினாலும் வழக்குகள் போட்டு ஆண்டுக்கணக்கில் வாய்தாவுக்கு அலையவிடும்! அரங்கத்துக்குள் நடத்தப்படும் கூட்டத்துக்குக் கூட, இப்போதெல்லாம் காவல்துறை அனுமதி வேண்டும் என்கிறார்கள்.
இதற்கெல்லாம் சலித்துப் போய், மாற்று ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தால், அது குழந்தையின் கன்னத்தைப் பதம் பார்க்கிறது. பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று பிரதிநிதிகளை அழைத்து ஏமாற்றிக் கைது செய்கிறது.
காவல்துறை மக்களை அடக்குவதற்கான கருவியாக அல்ல; மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை அமைதியாகப் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பளிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும். வெள்ளைக்காரப் போலீஸிடம் அனுமதி வாங்கியா, விடுதலைப் போராட்டம் நடந்தது?
அரசு, காவல்துறையின் தடுப்புச் சுவருக்குப் பின்னால் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க முடியாது. கதவுகளே இல்லாத சுவர் தகர்க்கப்படும்.