அறிக்கைகள்

மின்கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தமிழ்நாடு அரசு தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் மின்கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை அடுத்த 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் மேற்கொள்ள மின்வாரியம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கானப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன எனவும் செய்திகள் வெளிவருகின்றன.

பணியாளர் பற்றாக்குறையைச் சமாளித்து, மின்நுகர்வோருக்குத் தொய்வின்றி துல்லியமாகக் கணக்கீட்டை மேற்கொள்ள இந்தத் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை சார்பில் கூறப்படுகிறது. இத்தகைய தனியார் மயமாக்கல் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இது மின்கட்டண உயர்வு, முறைகேடுகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் “ஆள்” பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி, தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமுறைக்கு செல்வது எந்தவகையிலும் ஏற்கதக்கதல்ல. மின்வாரியத்தில் காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களை முறையான தேர்வுகள் மூலம் நிரந்தர அடிப்படையில் நேரடியாக அரசே நிரப்பிட வேண்டும். இதன் மூலமே வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நிரந்தரமான அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்டவற்றையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த முடியும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button