ShortNoticeஇந்தியா

ஒன்றிய பாஜக அரசின் சதிகளை மீறித் திரள்வோம்! டெல்லி சிவப்பாகட்டும்!

மக்கள் விரோத அரசு வீழட்டும்! இடது மாற்றம் ஏற்படட்டும்!!

மாற்றம் தேவை – முழக்கத்துடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2026 ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய அரசியல் பரப்புரை வெற்றிகரமாக நடைபெற்றது.

மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அடிப்படை மாற்றம் தேவை என்பதை, இந்த பரப்புரை நடைபயணங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளது. இந்தப் பரப்புரை செப்டம்பர் – 1 அன்று டெல்லியை குலுங்க வைத்திடும் பிரமாண்டப் பேரணியுடன் நிறைவடைகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“நாடு இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் அரசியல்தான் காரணம். மோடி-ஷாவின் 12 ஆண்டுகால ஆட்சி, அதானி, அம்பானி போன்ற பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்து, சாதாரண மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நீதி போன்ற உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, இந்து-முஸ்லிம் மற்றும் சாதிப் பிரிவினைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் அவர்கள் மீதான அச்சம் உடைந்து வருகிறது.

மோடி-ஷா அரசை எதிர்க்க முடியும் என்பதை மாணவர் இயக்கம் எடுத்துக்காட்டியுள்ளது. பொறுப்புக்கூறலை வலியுறுத்திப் போராட வந்த இளைஞர்கள், தடுப்புகள், தடியடிகள், கண்ணீர்ப் புகை மற்றும் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். ஆனாலும், அவர்கள் பின்வாங்க மறுத்தனர். வெல்ல முடியாதவர்கள் என்று மோடி-ஷா ஏற்படுத்தியிருந்த மாயையை மாணவர்கள் தகர்த்தெறிந்தனர்.

தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஊழியர்கள், சிறு வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ‘மாற்றம் தேவை’ என்ற செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும், பணியிடத்திற்கும், வளாகத்திற்கும், கிராமங்கள், நகரங்கள் என எங்கும் எடுத்துச்சென்றுள்ளது. மாற்றம் என்பது வெறும் விரும்பத்தக்கது மட்டுமல்ல, அவசியமானதும் கூட.

இந்தச் செய்தி டெல்லியைச் சென்றடைவதைத் தடுக்க ஒன்றிய பாஜக அரசு கடுமையாக முயன்று வருகிறது.

டெல்லி பேரணியில் பங்கேற்பதற்காக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்த சிறப்பு ரயில்கள் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டன. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில், காவல்துறையினர் நள்ளிரவில் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று கதவுகளைத் தட்டி, ஆவணங்களைக் கேட்டு, அவர்களைத் துன்புறுத்தி மனச்சோர்வடையச் செய்ய முயற்சிக்கின்றனர். மக்கள் செங்கொடியின் கீழ் திரள்வதை பாஜக விரும்பாததால், பேரணிக்கான ஏற்பாடுகள் தடுக்கப்படுகின்றன. ஆனால் எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாதது. கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மிரட்டலுக்கோ கொடுங்கோன்மைக்கோ அஞ்சியதில்லை. டெல்லி குலுங்கட்டும்” – இவ்வாறு டி.ராஜா தெரிவித்துள்ளார்.

டெல்லி மாபெரும் பேரணி தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அவை வருமாறு:

“தமிழ்நாட்டின் டெல்டா பகுதியிலிருந்தும், கேரளாவிலிருந்தும் சிறப்பு ரயிலில் சென்றிட ஏற்பாடு செய்திருந்தோம். இரண்டுக்கும் ஒன்றிய அரசு, ரயில்வேத் துறை தடை விதித்துவிட்டது.

சிறப்பு ரயில்களில் பல்வேறு நிகழ்வுகளுக்காக மக்கள் செல்கிறார்கள். மதம் சார்ந்த அல்லது பண்டிகை சார்ந்த விழாக்களுக்கு, கொண்டாட்டங்களுக்குச் செல்கிறார்கள். மாநாடுகளுக்குச் செல்கிறார்கள். அதை நாங்கள் குறை சொன்னதில்லை.

ஆனால், உழைக்கும் மக்கள் ஏழைகள், எளியவர்கள் – தங்களின் உரிமைகளுக்காக நாட்டின் தலைநகரில் பேரணி நடத்தும் போது, சட்டப்படி அதற்குரிய நிதியை முன்பணமாகக் கொடுத்து உரியவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு, கடைசி நேரத்தில் ரத்து செய்வது என்பது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது.

தலைநகர் டெல்லியில் இடது சிந்தனை கொண்டவர்கள் குவிந்துவிடக் கூடாது என ஒன்றிய பாஜக அரசு கருதுகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.

சிறப்பு ரயில் தடுக்கப்பட்டாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல்லி பிரமாண்டப் பேரணியில் பங்கேற்பார்கள்.

கோரிக்கைகள் யாவும் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்தது. நாட்டு நலன் சார்ந்தது. நமது ஒற்றுமை, ஒருமைப்பாடு சார்ந்தது. அதை டெல்லிப் பேரணி பறைசாற்றும்.” – இவ்வாறு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மக்கள்தான் மாற்றத்தை வழிநடத்துகிறார்கள், மக்கள்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். இதை பிரமாண்ட டெல்லி பேரணி மீண்டும் உலகுக்கு எடுத்துரைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button