
தோழர்களே! வணக்கம்!
இந்த வார ஜனசக்தி இதழ் தங்கள் கரங்களில் தவழும் போது, தமிழ்நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்களின் பிரம்மாண்டமான மறியல் போர் நடந்து முடிந்திருக்கும். உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் போராட்டமும்தான் சமூக மாறுதலை உந்தித் தள்ளும்.
தோழர்களே,
ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நாடு முழுவதும் மாற்றத்தை நோக்கிய மக்கள் சந்திப்பு பரப்புரை நடைபயண இயக்கம் நடைபெறுகிறது. நகரங்கள், கிராமங்கள் என ஆயிரக்கணக்கான பகுதிகளில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை ஏந்தியபடி ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான தோழர்கள் நடந்து சென்று மக்களை சந்தித்து உரையாடுகின்றனர். துண்டுப் பிரசுரங்களை தருகின்றனர். நிதி பெறுகின்றனர்.
பல இடங்களில் தோழர்கள் சீருடை அணிந்து செல்கின்றனர்.
பிரச்சார வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
பதாகை ஏந்தி முழக்கமிட்டுச் செல்கின்றனர்.
பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், அறிஞர்கள், பிரமுகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறுகின்றனர்.
பல இடங்களில் பொதுமக்கள் நமது அணிவகுப்பை புகைப்படம் எடுக்கிறார்கள். ஓடிவந்து வாழ்த்துக் கூறுகிறார்கள்.
மாவட்டங்கள் தோறும் காலை, மாலை நடைபயணத்திற்குப்பின் பொதுக்கூட்டம், வீதிக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. நமது தேசியக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அமைப்பின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் தலைமையேற்று வழிநடத்துகிறார்கள்.
ஆகஸ்ட் 15ல் தேசியக் கொடியேற்றத்துடன் பரப்புரை நடைபயணம் நிறைவடைகிறது. இதில் பொதுச்செயலாளர் உள்பட தேசியத் தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.
தோழர்களே,
நாடு முழுவதும் 10 நாட்கள் நடைபயணம் என்பது சாதாரணமானதல்ல. பெரும் பொருள் செலவு- 10 தினங்களில் பணி பாதிப்புகள், எண்ணற்ற இடர்கள் என அனைத்தையும் தாண்டி, கட்சியின் அழைப்பை ஏற்று தோழர்கள் சுடர் முகம் காட்டுகிறார்கள்.
இந்த நாட்டை இடது பக்கம் திருப்பும் வரை இந்தப் போராட்டப் பயணங்கள் தொடரும்.
தோழர்களே,
செப்டம்பர்-1 புதுடெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது. டெல்டா பகுதியிலிருந்து தோழர்களின் தனித்த முயற்சியில் சிறப்பு ரயில் செல்கிறது. தமிழ்நாடு கட்சிக்கு பெரும் சிறப்பு இது. ஆயிரக்கணக்கான தோழர்கள் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டார்கள்.
தோழர்களே,
பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. டெல்லிப் பேரணி முடிந்ததும், அக்டோபர் மாதம் திருச்சி மாநகரில் இடதுசாரிகளின் பிரமாண்ட பேரணிக்கு திட்டமிட்டுள்ளோம்.
தோழர்களே,
அயராத உழைப்பால், ஆகப்பெரிய தியாகத்தால், கட்டி வளர்த்த நமது கட்சியை, இன்னும் மேல் உயர்த்துவோம். மேலும் மேலும் உயர்த்துவோம். நாடு, நகரம் எல்லாம் செங்கொடி பட்டொளி வீசட்டும்.
தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்