கட்டுரைகள்

தனியார் நிலங்களுக்கு உரிமை கொண்டாடும் கோயில்கள்

மே.து.ரா.

அண்மையில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசின் கரூர் நிலப் பதிவுகள் குறித்த ஆணை கோவில்களுக்கு எதிரானது எனத் திரித்துப் பேசப்பட்டு வருகிறது. கரூரைச் சுற்றியுள்ள ஊர்களில் கோயில் நிலங்களைத் தனிப்பட்ட நில உற்பத்தியாளர்களுக்கு அரசு தாரைவார்த்துவிட்டதாகப் பாசகவினரும் இந்து அமைப்பினரும் பரப்புரை செய்து வருகின்றனர்.

25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3804.85 ஏக்கர் கோயில் நிலங்கள் தனியாருக்குக் கொடுக்கப்பட்டதாகத் தமிழகப் பா.ச.க.த் தலைவர் நைனார் நாகேந்திரன் பொய்யுரைக்கிறார்.

புதிய அரசாணை கூறுவதென்ன?

நில உரிமையுடன், பட்டா போன்ற சான்றுகளையும் பெற்றுள்ளோர் தங்கள் நிலங்களை விற்கக் கடந்த இருபது ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த தடை மட்டுமே புதிய அரசாணையில் நீக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களுக்கும் இந்த அரசாணைக்கும் தொடர்பு ஏதுமில்லை. நில உரிமை மாற்றம் எதுவும் நடைபெறவில்லை.

கோவில் பணியாளர்களுக்கும் வழிபாடு தொடர்பான பணிகளுக்கும் விசய நகரம், மைசூர் அரசர், பிற மன்னர்கள், திப்பு சுல்தான் போன்றோர் கோயிலுக்குக் கொடுத்த கொடைகளே இனாம் நிலங்களாகக் கருதப்படுகின்றன. இந்த நிலங்கள் யாவும் கோயில் நிலங்களா, கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்டனவா, யார் எப்பொழுது அளித்தார்கள் என்னும் வினாக்களுக்கு விளக்கங்கள் தரக்கூடிய ஆவணங்கள் எதுவும் கோயிலிடம் இல்லை; தனியாரிடமும் இல்லை; அரசிடமும் இல்லை.

இனாம் நிலங்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், இவை எப்படி வந்தன என்பதைப் பற்றிய தெளிவான சான்றுகள் இப்போது கிடைக்கவில்லை. ஆனாலும், பல நூற்றாண்டுகளாக அந்த நிலங்களில் உற்பத்தி நடந்து வருகிறது. சில இடங்களில் இல்லங்களும் கட்டப்பட்டு எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவையெல்லாம் இனாம் நிலங்கள் என்று அறியப்பட்டாலும், இனாம் என்ற சொல்லுக்கான தெளிவான விளக்கங்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இனாம் என்பது நில உரிமையைக் குறிக்கவில்லை. மேலும், இனாம் நிலங்கள் கோயில் பெயரிலும் பதிவாகவில்லை.

இனாம் ஒழிப்புச் சட்டம்

இந்திய ஒன்றியம் முழுமையாக 4 கோடி ஏக்கருக்கு மேல் இனாம் நிலங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1948லிருந்து பல மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்த இனாம் நிலங்கள் எல்லாம் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. மாற்றங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை.

தமிழ்நாட்டில் 1948ஆம் ஆண்டு பெரும் தோட்டம் மற்றும் சமீன் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதைப் போன்று, 1963ஆம் ஆண்டு இனாம் என்று அழைக்கப்பட்ட நிலங்களை முறைப்படுத்தக் காமராசர் ஆட்சி ஒரு குழுவினை அமைத்தது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவக்குறிச்சி சதாசிவம், காங்கயம் கே.ஜி. பழனிசாமிக் கவுண்டர் போன்றோர் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரையினை ஏற்று ‘தமிழ்நாடு இனாம் (நீக்கம் மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம் 1963 (30/1963) நிறைவேற்றப்பட்டது. 29-01-1964இல் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று, 05-02-1964 அன்று அரசாணையும் வெளியானது.

தமிழ்நாடு அரசு, மண்டல வாரியாகச் சிறப்பு முறைப்படுத்தல் வட்டாட்சியர் (Special Settlement Thasildar) என்ற அலுவலர்களைப் பணியமர்த்தி, முழுமையான ஆய்வினை மேற்கொண்டு, ‘ரயத்வாரி பட்டா’ வழங்கி வந்தது. இந்தப் பணி 1975 வரை இடையீடின்றித் தொடர்ந்தது.

இந்தச் சட்டத்தின் 8(2) 1(ஏ) பிரிவின் அடிப்படையில், 01-04-1960க்கு முன் 60 ஆண்டுக் கால அளவு நிலத்தைப் பயன்படுத்தியோருக்குக் கட்டுப்பாடில்லாத வகையில் முழு நில உரிமைக்கான பட்டா வழங்கப்பட்டது. அதாவது, 60 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தியோர், அவர்களது நிலங்களின் உரிமையாளராக மாறினர். 01-04-1960ஆம் ஆண்டுக்கு முன் 12 ஆண்டுக் காலம் உற்பத்தி செய்து துய்த்து வந்திருந்தால், சில கட்டுப்பாடுகளுடன் பட்டா பெற்றனர். இதுவும் அவர்கள் நில உரிமை பெற்றதை ஏற்றுக்கொண்டதாகவே அமைந்தது.

ஏறத்தாழ 6.22 லட்சம் ஏக்கர் நிலங்கள் இனாமிடங்களாகக் கண்டறியப்பட்டிருந்தாலும், இரண்டு லட்சம் ஏக்கர் தொடர்பான நிலங்களுக்கு மட்டுமே உரிமையுடன் கூடிய பட்டா வழங்கப்பட்து. பின்னர், அவசரநிலைக் காலத்தில் காங்கிரசாரின் குடியரசுத் தலைவர் ஆட்சியில் இது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும், இடைப்பட்ட சில காலங்களில் முறைப்படுத்தல் நடந்தது.

இவ்வாறு முழு நில உரிமை பெற்று பட்டாவும் வழங்கப்பட்டிருந்ததால், இந்த நிலத்தினை விற்பனை செய்கின்ற வாய்ப்பு உழைக்கும் உற்பத்தியாளர்களுக்குக் கிடைத்தது. இதனால், பலர் தங்களது வேண்டல்களுக்கு ஏற்பவும் நிலைமைகளையொட்டியும் நிலங்களை விற்பனை செய்து வந்தனர்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலங்களை விற்க முடியாதவாறான தடை ஏற்படுத்தப்பட்டது.

ரயத்வாரி என்றால் நில உரிமைதான்

1963ஆம் ஆண்டுச் சட்டத்தில் உள்ள ரயத்வாரி என்ற சொல், நில உரிமையாளரிடமிருந்து நேரிடையாக அரசு வரி பெறுவதைக் குறிக்கிறது. இந்தப் பெயரிலிருந்தே நிலம் முழு உடைமை கொண்டது என்பதும், அரசுக்கு வரி செலுத்துவது அந்த நில உரிமையை உறுதிப்படுத்துகிறது என்பதும் தெளிவாகிவிடுகிறது.

ஆனால், இவை கோயில் நிலங்கள் என்று தவறாகக் கூறி, கரூரில் இருக்கின்ற சில கோயில்களின் மேலாண்மை அலுவலர்கள் கரூரில் இருக்கின்ற சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மடல் எழுதினர். இதனையடுத்து முழு உரிமை பெற்ற நிலங்களாக இருந்தாலும்கூட, அவற்றை விற்பதற்குத் தடைகள் உருவாக்கப்பட்டன. சார்பதிவாளர் அலுவலகப் பதிவுகளில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு இடம்பெற்றிருக்கும். நிலத்தினுடைய அங்காடி விலை, அருகிலுள்ள நிலங்களின் விற்பனை விலை போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இத்தகையதொரு வழிகாட்டு மதிப்பு முடிவு செய்யப்படும். இந்த வழிகாட்டு மதிப்பை வைத்துத்தான் முத்திரைத்தாள் கட்டணத்தைச் சார்பதிவாளர் அலுவலகங்களில் பெறுவர். நிலத்தின் மதிப்பு சுழி (0) என்று பதியப்பட்டிருந்தால், அது அரசு தொடர்புடைய நிலங்கள் என்பதாகப் பொருள் கொள்ளப்படும். அந்த நிலங்களை யாரும் எவருக்கும் விற்க இயலாது.

இனாம் என்ற நிலையிலிருந்து முழு உரிமை கொண்ட பட்டா நிலங்களாக மாறியிருந்தும், கடந்த 20 ஆண்டுகளாக இத்தகைய நிலங்கள் கோயில் நிலங்களாகத் தவறாகக் கருதப்பட்டு, ‘0’ வழிகாட்டு மதிப்புக்கு மாற்றப்பட்டு, விற்பனைகள் தடுக்கப்பட்டன.

அந்த நிலங்கள் கோயில் நிலங்களாகவும் இருக்கவில்லை, இனாம் நிலங்களாகவும் இருக்கவில்லை, அரசு நிலங்களாகவும் இருக்கவில்லை. மாறாகத் தனியாருக்குரிய விளைநிலங்களாக 50 ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றம் பெற்றுவிட்டன. உடைமை கொண்ட தனியரின் விற்பனை உரிமை மறுப்பை எதிர்த்துத்தான் போராட்டங்கள் தொடர்ந்தன.

இப்பொழுது இந்த விற்பனைத் தடையை மட்டுமே கூட்டணி அரசு நீக்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நில உரிமை பெற்று, அதற்கான வருவாய்ச் சான்றையும் வைத்துக்கொண்டுள்ள விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். அந்தத் தடையை மட்டும்தான் அரசாணை நீக்கியிருக்கிறது. புதிதாகக் கோயில் நிலங்கள் எதுவும் தனிப்பட்டோருக்குத் தரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், நிறுத்தப்பட்டுள்ள இனாம் நிலங்களுக்கான பட்டா என்ற புதிய சான்றையும் அரசு தரவில்லை. அப்படி எவரும் கேட்கவுமில்லை. முன்னரே பெற்றிருந்த உரிமை மட்டுமே வலியுறுத்தப்பட்டது.

விற்கின்ற உரிமை தடுக்கப்படும்போது, அவர்களுடைய நில உரிமையும் மறுக்கப்படுகிறது; பறிக்கப்படுகிறது.

இவ்வாறு நில உரிமைப் பட்டா பெற்ற விவசாயிகள், தங்களது உழைப்பிலும் முயற்சியிலும் செலவிலும் நிலங்களை மேம்படுத்தி, தங்களது முன்னோரைப் போன்றே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எந்தத் தடையும், தலையீடும், சிக்கலும் இல்லாமல் உற்பத்தியைத் தொடர்ந்து வருகின்றனர்.

1863ஆம் ஆண்டில் சிறு இனாம் ஆணையம் ஒன்று அன்றைய ஆங்கில அரசால் அமைக்கப்பட்டது. அது விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் 6.50 லட்சம் ஏக்கர் நிலங்களைக் கண்டறிந்தது. இவற்றைப் பதிவு செய்ய உரிமை குறித்த ‘தெளிவான பதிவேடு’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்த நிலங்கள் யாவும் கோயிலுக்கு உரியதாக இருக்கவில்லை என்பதும் இவையெல்லாம் உற்பத்தி செய்யும் உழவர்களின் பொறுப்பில் நீடித்திருந்தன என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் தடுமாற்றம்

ஒன்றியத்தில் உள்ள பிற மாநிலங்களில் எல்லாம் இனாம் நிலங்கள் கோயில் நிலங்களாகக் கருதப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இனாம் என்றால் அவை கோயிலுக்குரியவை என்னும் தவறான கண்ணோட்டம் ஏனோ மக்கள், அரசு, நீதிமன்றம் ஆகிய அனைத்துத் தரப்பினரின் மனதிலும் விழுந்துவிட்டது. இதனால் ஏற்படுகின்ற தடைகள், தலையீடுகள், சிக்கல்கள் தொடர்கின்றன.

விளக்கங்கள் வேண்டும்

1. ‘தமிழ்நாடு இனாம் (நீக்கம் மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம் 1963, இனாம் என்ற பெயரில் இருந்த அனைத்து நிலங்களையும் அரசு நிலங்களாக எடுத்துக்கொண்டது.

2. அந்த நிலங்களில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

3. தகுதி கொண்டோருக்கு நிலங்கள் முழு உரிமையுடன் உடைமைகளாக்கப்பட்டன.

இந்த நிலையில் கோயில்கள் அந்த நிலங்களில் உரிமை கொண்டாட எந்த அடிப்படையும் இருக்கவில்லை. சிக்கல் நீதிமன்றம் சென்றுள்ளது. நீதிமன்றம் குழப்பத்தை மிகுவிக்கும் என்பது வரலாறு.

கோயில்கள் ஏன் உரிமை கொண்டாடுகின்றன, சார்பதிவாளர் அலுவலகங்கள் வழியாகத் தடைகளை ஏன் ஏற்படுத்துகின்றன, நீதிமன்றங்கள் உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் ஏன் கோயில் மேலாண்மை அலுவலர்கள் கூறுவதை உண்மை என எடுத்துக்கொள்கின்றன என்பவையெல்லாம் விரிவான ஆய்வுக்குரியன.

நில உரிமையும் பட்டாச் சான்றும் கொடுத்து நில வரி பெறுவது அரசு. இதனால், நில உரிமை ஏன், எப்படித் தரப்பட்டது என்பவற்றை அறிய கோயில்கள் அரசின் மேல்தானே வழக்குகள் தொடுக்கவேண்டும்? அரசு கொடுத்த நில உரிமைகளைப் பெற்றுள்ள உணவு உற்பத்தியாளர்கள்மேல் ஆயிரக்கணக்கில் வழக்குகள் நீதிமன்றங்களில் முடிவு காணாது காத்துக் கிடக்கின்றன.

இவற்றுக்கான வரலாற்றுப் பின்னணி யாது?

இவை யாவும் அடுத்தடுத்து விளக்கங்களை எதிர்நோக்கியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button