சுவாமிநாதனின் சர்ச்சைத் தீர்ப்பு

தமிழ்நாடு அரசு ஆணையை ரத்து செய்து, மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி பி.பி. பாலாஜியுடன் சேர்ந்து வழங்கியிருக்கிறார்.
சமீர் அகமது என்பவர், தனக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என சான்றிதழ் வழங்க மறுத்ததாகவும், சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுமாறு கோரியும் சென்னை உயர்நீதி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
9.3.2024 நாளிட்ட தமிழ்நாடு அரசாணை ஜி.ஓ.(எம்எஸ்) எண்.31ன் படி, அத்தகைய சான்றிதழை அரசு வழங்க வேண்டும் என்பதே அந்த மனுவின் கோரிக்கையாகும்.
தமிழ்நாடு அரசாணை தவறானது என்று யாரொருவரும் நீதிமன்றத்தின் முன்பு மனு தாக்கல் செய்யவில்லை.
ஆனால் நீதிபதிகள் தமது தீர்ப்பில்,
“அரசாணை செல்லத்தக்கது என்றால் மனுதாரர் வெற்றி பெறுவார். அரசாணை செல்லத்தக்கதல்ல என்றால் மனு தோல்வி அடையும்” என்று கூறி அந்த அரசாணை செல்லத்தக்கதல்ல என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அரசாணையின்படி சான்றிதழைப் பெறுவதற்கு மனுதாரர் தகுதி உள்ளவரா என்று ஆய்வு செய்வதற்கு பதிலாக, மனுதாரருக்கு அந்தச் சான்றிதழ் கிடைக்கக்கூடாது என்றால் அந்த அரசாணை செல்லத்தக்கதல்ல என்று முடிவு செய்தாக வேண்டும் என்ற அணுகுமுறையிலேயே தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்றே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் தீர்ப்பு வழங்குவதற்கு ஆதாரமாக ஜி.மைக்கேல் -எதிர்- தமிழ்நாடு அரசு, என்ற வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, கிறித்துவ மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியதால் அவர் பிற்படுத்தப்பட்டவர் என்ற சான்றிதழ் பெறுவதற்கு உரிமை கோர முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அந்தத் தீர்ப்புக்குப் பிறகு தான் தமிழ்நாடு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின் கீழ், சமூகரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கான கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள், இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும், சமூக ரீதியான, கல்வி ரீதியான முன்னேற்றத்தை பெற முடிவதில்லை. சமூகத் தீமைகளை தொடர்ந்து அவர்கள் அனுபவிக்கிறார்கள். எனவே மத மாற்றம் நிகழ்ந்தாலும், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர் என்ற சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு தீர்மானித்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
கைலாஷ் சோன்கர் வழக்கில், “மதமாற்றம் என்பது சமூக ஊனத்தை தானாகவே அழித்துவிட முடியாது” என்று 1984ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
மீண்டும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில், “சமூக அடையாளம் என்பது மதத்தை மட்டுமே வைத்து தீர்மானிக்கத் தக்கதல்ல. இது குறித்த வழக்குகளில் சமூக மறுப்பையும், தொடர்ந்து நிகழ்கிற தீமைகளையும் சேர்த்து நீதிமன்றங்கள் பரிசீலித்தாக வேண்டும்” என்று உத்தரவிட்டு, சமூகத்தில் பின் தங்கிய நிலைமைக்கு மதத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து தீர்ப்புகளை வழங்கக்கூடாது என்ற தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.
ஆனால் மாண்புமிகு நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமது நிலைக்கு உதவியாக இருப்பதை மட்டுமே மேற்கோள் காட்டி இருக்கிறார்கள்.
பிராமணர்கள் உணவருந்திய பிறகு எஞ்சிய எச்சில் இலைகளில் மற்ற சாதியினரை உருளச் செய்வதை தடை செய்ய முடியாது என்று நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில், அவர் வழங்கிய தீர்ப்பு, மலை மீதுள்ள முஸ்லிம் தர்காவை அகற்ற வேண்டும் என்ற போராட்டமாக உருவெடுக்க வழி வகுத்தது.
கோவில் அருகில் இருப்பதால், சர்ச் கட்டக்கூடாது என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்தார்.
மதங்களால் பிளவு பட்டு நிற்காத, மதநல்லிணக்கத்தை மரபாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தை, மதத்தின் அடிப்படையில் மோத வைக்க முயல்கிற தீய சக்திகளுக்கு துணை புரிவதாகவே இந்த தீர்ப்புகள் அமைகின்றன.
அவரது தீர்ப்புகளும், பொதுவெளியில் தெரிவித்த சில கருத்துகளும் இந்துத்துவ பெரும்பான்மைவாத, பழமைவாதச் சிந்தனையையே பிரதிபலிக்கின்றன.
அரசியல் சாசனத்தின், உயிராக விளங்கும் சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் மனித கண்ணியம் ஆகிய விழுமியங்களைக் காக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.