அறிக்கைகள்

மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும்

தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய அடையாள அட்டையில் மாணவர்களின் சாதி குறித்த விவரங்களையும் இடம் பெறச் செய்யப் போவதாக தமிழ்நாடு அரசின் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களின் சாதி விவரங்கள் அடையாள அட்டையில் வெளிப்படுத்துவது அவசியற்றது. இது மாணவர்களிடையே சாதிப் பாகுபாட்டை அதிகரிக்கும்.

ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி பாகுபாடுகளும், மோதல்களும் அதிகரித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு திட்டம் சரியானது அல்ல. தீண்டாமை ஒழிப்பு, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்றவற்றிற்கும் சமத்துவ சிந்தனைக்கும் எதிராக இது அமைத்துவிடும்.

கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை களைவது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதி அரசர் சந்துரு தலைமையிலான குழு மாணவர் மத்தியில் சாதியை வெளிப்படுத்தும் அடையாளங்களை களைந்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உட்பட ஏராளமான பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

அவற்றை நடைமுறைப்படுத்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி பெயரை இடம்பெறச் செய்வது என்பது ஏற்புடையதல்ல.

இத்தகைய முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button