தொழிலாளியைப் பலியிடாதீர் அமைச்சரே!

சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், இசிஆர் பகுதிகள் உள்ளிட்டவற்றில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது பற்றி மே 24ம் தேதி விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர், மாநிலத்தில் மின் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், சில இடங்களில் மின் வாரியத்தில் இருக்கும் சில “கறுப்பு ஆடுகளால்” திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஜூன் 9ம் தேதி பேசிய அமைச்சர், மின்தடை ஏற்பட்ட இடங்களில் கூடுதல் ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்படுவதாகவும் “சதிக் கோட்பாட்டை” வலியுறுத்தினார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது இல்லை. ஐந்து கம்பெனிகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. முன்பு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நிர்வாகப் பொறுப்பேற்றதற்குப் பதிலாக ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர்.
மின்சாரத்துறை பணிகளுக்கு 1,74,000 தொழிலாளர்கள் தேவை. ஆனால் இப்போது வெறும் 60,000 தொழிலாளர்களும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகளும் மட்டுமே உள்ளனர். சராசரியாக ஒரு தொழிலாளி மூன்று பேரின் வேலைகளைச் சுமக்கிறார்.
மின்சாரத் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று கூறப்படுவதும் சரியல்ல. அரசின் சொந்த மின்நிலையங்களிலிருந்து 6,000 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 14,000 மெகாவாட் மின்சாரம் தனியார் மின்நிலையங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது. உற்பத்தி செய்து, கம்பிகளில் அனுப்பப்படும் மின்சாரத்தை தேவைக்குப் போக மிச்சப்படுத்தவோ, சேமிக்கவோ முடியாது. பயன்படுத்தாவிட்டாலும், போனது போனதுதான்.
இப்போது கோடை மழை இல்லாததால், காற்றில் ஈரப்பதமே இல்லை. இதனால் இதுவரை இல்லாத கடும் வெப்பம் நிலவுகிறது. மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை, அனைத்து வீடுகளிலும் குளிர்சாதனமும், மின்விசிறிகளும் முழு அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது மின்சாரத் தேவையை அதிகப்படுத்துகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு மின் தேவை 21,000 மெகாவாட் அளவுக்குச் சென்றுவிட்டது. 20,000 மெகாவாட் மின்சாரத்தை வைத்து எவ்வாறு இதை ஈடுசெய்வது? கூடுதலாக மின்சாரத் தேவை ஏற்படும்போது, அந்த நிமிடத்திலேயே, உடனே தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கவும் முடியாது.
சென்னைப் புறநகர்ப்பகுதிகள் முன்னர் கிராமங்களாக இருந்தவை. அன்றைய மின் தேவைக்கு ஏற்ப, மின்மாற்றிகளும், கேபிள் மின்இணைப்புகளும் நிறுவப்பட்டிருந்தன. இப்போது அவை விரிவடைந்து நகரப்பகுதிகளாகி விட்டன. அவற்றின் மின் தேவை மிகப் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இந்த அதிக சுமையை (லோடு), பழைய மின்மாற்றிகளால், மின்கட்டமைப்பால் தாங்க முடியவில்லை. புதிய தேவைக்கேற்ப இவற்றை மாற்றியமைக்க முதலீடும், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் தேவை.
இவை பற்றியும், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது, மின்மாற்றிகள் விலை நிர்ணயம் போன்றவற்றில் முறைகேடுகள் பற்றியும் அரசு தனது நிலையை விளக்க வேண்டும்.
யாரோ இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து, ஃபியூஸ் அகற்றிச்செல்வது போல இன்ஸ்டாகிராம் பதிவுகள் போட்டு, ஆளும் கட்சியினர், அமைச்சரின் கூற்றை மெய் போலக் காண்பிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மின்வாரிய ஊழியர்களா அல்லது வெளியிலிருந்து வந்தவர்களா எதுவும் தெரியாது.
ஊழியர் எனக் கண்டறிந்தால் உடனே ஏன் கைது செய்யவில்லை; வழக்கு தொடுக்கவில்லை? அரசின் மீது குற்றச்சாட்டு வைக்கும் பத்திரிகையாளர்களை வீடு தேடிச்சென்று கைதுசெய்வதற்கும், விமர்சிக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பை, அரசு கேபிள் டிவியிலிருந்து உடனே அகற்றுவதற்கும் இந்த அரசுக்கு திறனும் நேரமும் இருக்கிறதே!
கொரோனா கொடுந்தொற்றின் போதும் உயிர் அச்சத்தையும் துறந்து மின் தடை ஏற்பட்டுவிடாமல் உழைத்த, புயல், சுனாமி நேரங்களில் மின் கட்டமைப்பு முழுக்கச் சீரழிந்தபோது, மாநிலம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்து, ஓரிரு நாட்களில் மாயாஜாலம் போல சீர்படுத்திய, “எனது வாரியம்” எனும் அர்ப்பணிப்போடு பெரும் வேலைச்சுமையைத் தாங்கிப் பணியாற்றுகிற மின்சாரத் தொழிலாளர்கள் மீது இவ்வாறு பழிசுமத்துவது அநியாயமானது; முறையற்றது. அமைச்சரின் அபாண்டமான குற்றச்சாட்டு, அவர்களை மக்களின் கோபத்துக்கும், தாக்குதலுக்கும் கூட ஆளாக்கி விடலாம்.
எனவே, மின்தடைக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செல்லாமல், தங்களின் நிர்வாகத் தோல்விகளுக்கு மின்சாரத் தொழிலாளர்கள் மீது மொத்தப் பழியையும் சுமத்தி, பலிகடாவாக்க முயல்வதை அரசு கைவிட வேண்டும்.