மக்கள் ஆணைக்குத் துரோகம்!

9 மாநிலங்கள் தவிர்த்து மீதமுள்ள இந்தியா, பாஜக அல்லது அதன் கூட்டணியின் ஆட்சியில் உள்ளது. தன்னால் காலூன்ற முடியாத இடம் தமிழ்நாடு என்பதும் அதற்குத் தெரியும்.
ஒரு மாற்றத்துக்காக தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்திருந்தாலும், பாஜகவின் தாமரை சின்னம் போட்டியிட்ட 32 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே தட்டுத்தடுமாறி வெற்றியைத் தந்திருந்தனர்.
இது போன்ற நிலைமையில், நிலையற்ற அரசியல் சூழலை உருவாக்கி, அதன் பின்பு ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாஜக உள்நுழைய முயற்சிக்கும் என்பது பல மாநிலங்களின் அனுபவம்.
அதனால்தான், 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்த த.வெ.க.வை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரித்து, 112 ஆக ஆதரவு எண்ணிக்கையை உயர்த்திய பின்னரும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதங்களைக் கொடுத்து நிரூபித்தால்தான் அழைக்க முடியும் என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். 118 பேருடன் யார் வந்தாலும் அழைப்பேன் என்று பாஜகவின் அரசியல் கருவியாக, மரபுகளை மீறிப் பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைக் கோருவதில்லை என்ற நிலையில் தான் உறுதியாக இருப்பதாகவும், தனக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் தவெக தலைமை இடதுசாரிகளிடம் கோரியது.
6 பேரின் ஆதரவு கூடுதலாகத் தேவைப்பட்டபோது, பாஜக விளையாடுவதற்கான ஒரு நிலையற்றத் தன்மை உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவுக் கடிதம் தர முடிவு செய்தன. விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் அதே நிலையை எடுத்து 120 என ஆதரவு எண்ணிக்கையை உயர்த்தின.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற போதிய பலம் இருந்த போதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற அதிமுகவில், 25 எம்எல்ஏக்கள் அவர்களின் கட்சி முடிவுக்கு எதிராக, தவெகவை ஆதரித்து வாக்களித்ததும், பிளவுபட்ட அந்தக் குழுவினரை முன்னதாக முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேசியதும் பல ஐயங்கள் உருவாக இடமளித்தன.
நிர்வாக அனுபவம் இல்லாத கட்சி, ஆட்சிக்கு வந்திருப்பதால், அது கற்றுக்கொண்டு செயல்படத் தொடங்க கால அவகாசம் தேவை. குறிப்பாக, அரசியல் தலைமைக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இடையிலான நெறிபிறழ்ந்த கூட்டை உடைக்க அவர்கள் ஏதேனும் செய்வார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில் ஆட்சி மிக நன்றாக நடந்து கொண்டிருப்பதாக பொய்த்தோற்றம் சமூக வலைத்தளங்களில் உலவ விடப்படும் போதும், தவறான நிலைப்பாடுகளை எடுக்கும்போதும், அதனைச் சுட்டிக்காட்டுவது தவிர்க்க இயலாததாகிறது.
இப்போது, விசிக, முஸ்லீம் லீக் இரு கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்று ஆளும் கூட்டணியில் சேர்ந்து விட்டன. பெரிதாக ஏதும் நிகழ்ந்தாலன்றி, எதற்கெடுத்தாலும் ஆதரவைத் திரும்பப் பெறப்போவதாக கூறமாட்டோம் என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெளிவாகத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள், பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த நிமிடமே அரசு தலைமையகத்திலேயே தயாராக வைக்கப்பட்டிருந்த அவர்களது பெயர் பொறித்த உறுப்பினர் அட்டைகளைப் பெற்று தவெகவில் சேர்ந்துள்ளனர்.
வெற்றி பெற்ற 15 நாட்களுக்குள், பதவி விலகி வேறொரு கட்சியில் சேருவது பல்வேறு அரசியல், ஜனநாயகக் கேள்விகளை எழுப்புகிறது. மக்கள் கொடுத்த ஆணை தனிப்பட்ட சொத்தல்ல. அரசியல் என்பது கொள்கைக்கான போராட்டமா அல்லது பதவி வாய்ப்புக்கான நகர்வா? இது மக்கள் ஆணைக்குத் துரோகம்; அரசியல் சந்தர்ப்ப வாதத்தின் உச்சம்; வாக்காளர்களை ஏமாற்றும் செயல்; கொள்கையற்ற அரசியல் வியாபாரம்.
தான் ஒரு தூய சக்தி, என்று பிரகடனப்படுத்திக்கொண்ட இன்றைய ஆளும்கட்சி, பிற கட்சிகளில் வெற்றி பெற்றவர்களை விலக வைத்து, உடனடியாக இணைத்துக் கொள்வது அதன் அரசியல் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்குகிறது.
அதிலும் அந்த 4 என்ற மந்திர எண்ணிக்கை ஏன்? இடதுசாரிகள் ஆதரவு இல்லாமலும் ஆட்சி நடத்த இப்போதே தயாராகிறார்களா? தானாகவே இடதுசாரிகளிடம் உறுதியளித்த நிலைப்பாடுகளிலிருந்து மாற வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சிக்கு வந்துவிட்டதா? பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்பட முடியாது என்ற சட்டத்திற்கு அழுத்தம் தரப்போவதில்லை என்பது அதன் துவக்கமா?
அந்த நால்வரை மீண்டும் தேர்தலில் தனது கட்சி சார்பில் நிறுத்தி, வெற்றி பெற்றால், ஒப்புக் கொண்ட ஒழுக்கம் சார்ந்த அரசியலிலிருந்து விலகிச்செல்லப் போவதன் அறிகுறியா என்ற கேள்விகள் தாமாகவே எழும்புகின்றன.
காலம் பதில்தரும், காத்திருப்போம்.