தொழிலாளர்களின் தியாகம் மூலதனத்தின் லாபத்திற்காக அல்ல!
உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) மே தின அறைகூவல்

2026 மே தினத்தை முன்னிட்டு உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) வெளியிட்டுள்ள அறிக்கை:
1886 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் 140 வது ஆண்டு நினைவாக, உலகம் முழுவதும் உள்ள வர்க்கம் சார்ந்த தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் மே தினத்தை போராட்ட உணர்வுடன் கடைப்பிடிக்கின்றனர். மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் வீரமிக்க போராட்டத்தின் சின்னமாகவும், முதலாளித்துவத்தின் கொடுமைக்கு எதிரான இடையறாத எதிர்ப்பின் நாளாகவும் பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 105 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் WFTU, அனைத்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் போராட்ட வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. 1886 சிகாகோ தொழிலாளர் போராட்ட வீரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன என்று அது கூறுகிறது.
இன்று முதலாளித்துவத்தின் நெருக்கடி மேலும் தீவிரமாகியுள்ளது. சமூக சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. ஜனநாயக உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் பல நாடுகளில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அதே நேரத்தில் பேராதிக்க நாடுகளின் போர்களும் தலையீடுகளும் அதிகரித்து வருகின்றன. உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்கள் அதிகமாகின்றன. அணு ஆயுத பேரழிவின் அபாயமும் இன்னும் நீடிக்கிறது.
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலை, இஸ்ரேல் அரசின் கொடூரத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல், வெனிசுலாவுக்கு எதிரான தலையீடுகள், சோசலிச கியூபாவுக்கு எதிரான பொருளாதார முற்றுகை போன்றவை பேராதிக்கத்தின் மனிதமற்ற முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.
ஒருபுறம் ராணுவ செலவுகள் மிக வேகமாக உயர்கின்றன. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள் போர் பொருளாதாரத்தை வளர்ச்சிக்கான வழி என விளம்பரப்படுத்துகின்றன. மறுபுறம் சாதாரண மக்கள் மீது சிக்கனக் கொள்கைகள், தனியார்மயமாக்கல், சமூக நலன்களின் அழிப்பு போன்ற சுமைகள் திணிக்கப்படுகின்றன.
மின்சார நெருக்கடி, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவை தொழிலாளர்களின் வருமானத்தை சுரண்டுகின்றன. ஊதியங்கள் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய எரிசக்தி நிறுவனங்களும் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கின்றன.
பெண்கள், இளைஞர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரே இந்த சுரண்டலின் முதல் பலியாகின்றனர். குறைந்த ஊதியம், வேலை பாதுகாப்பின்மை, கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான குறைந்த அணுகல் ஆகியவற்றை அவர்கள் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைகள் இவர்களை இன்னும் அதிகமாக பாதிக்கின்றன.
பணி இடங்களில் பாதுகாப்பும் சுகாதாரமும் மோசமடைந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை முதலாளிகள் செலவாகவே பார்க்கின்றனர். இதனால் பணியிட விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. தினமும் தொழிலாளர்கள் லாபத்தின் பெயரில் பலியாகின்றனர்.
டிஜிட்டல் மயமாக்கலும் செயற்கை நுண்ணறிவும் தொழிலாளர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படாமல், பணிச் சுமையை அதிகரிக்கவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும், ஒப்பந்த வேலை மற்றும் பாதுகாப்பற்ற வேலைகளை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிரந்தர வேலை வாய்ப்புகள் குறைகின்றன.
அதே நேரத்தில் தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க அரசு மற்றும் முதலாளிகள் இணைந்து செயல்படுகின்றனர். தொழிற்சங்கத் தலைவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். வேலைநிறுத்தங்கள் குற்றமாக்கப்படுகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உழைப்பு மலிவு உழைப்பாக பயன்படுத்தப்பட்டு இனவெறி மற்றும் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர் வர்க்கத்தின் பதில் இவற்றை அமைதியாக ஒப்புக்கொள்வதாக இருக்க முடியாது என்று WFTU வலியுறுத்துகிறது. ஊதிய உயர்வு, முழு உரிமைகளுடன் கூடிய தொழிலாளர் கூட்டு ஒப்பந்தங்கள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அனைவருக்கும் இலவச பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வி, சமூக பாதுகாப்பு, வேலை நேரக் குறைப்பு, நிரந்தர வேலை, வேலை இடங்களில் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகளுக்கான மரியாதை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சம உரிமை ஆகியவை உடனடி கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன.
தொழிலாளர்களுக்கு அதிகார வர்க்கத்தின் போர்களில் எந்த நலனும் இல்லை. அவர்களுக்கு உண்மையான பலம் ஒற்றுமையிலும், சர்வதேச ஒத்துழைப்பிலும், கூட்டு போராட்டத்திலும் தான் உள்ளது. தொழிற்சங்கங்கள் சமரசத்தையும் அடக்குமுறையையும் நிராகரித்து, ஒவ்வொரு பணி இடத்திலும் எதிர்ப்பை கட்டியெழுப்ப வேண்டும் என்று WFTU அழைக்கிறது.
“எங்கள் வாழ்க்கை எங்கள் தேவைகளுக்கா? அல்லது அவர்களின் லாபத்திற்கா?” என்ற முழக்கத்தின் கீழ் 2026 மே தினத்தை உலகம் முழுவதும் போராட்ட நாளாக மாற்ற வேண்டும் என்று அது அழைக்கிறது. மூலதனத்தின் லாபத்திற்காக தொழிலாளர்கள் தியாகம் செய்யக்கூடாது. உரிமைகளுடன் கூடிய வேலை, தொழிலாளர்களின் நவீன தேவைகளின் பூர்த்தி, சமத்துவம் மற்றும் அமைதி கொண்ட உலகம் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.
மே தினம் வாழ்க! சர்வதேச தொழிலாளர் ஒற்றுமை வாழ்க!