கட்டுரைகள்

மேற்கு வங்க வாக்காளர்களுக்கு இருபக்கமும் இடி!

த.லெனின்

இன்று வங்கம் சிந்திப்பதை நாளை இந்தியா சிந்திக்கும்” (What Bengal thinks today, India thinks tomorrow) என்பது, கோபால கிருஷ்ண கோகலே கூறியதாகும். ஆனால் இன்று மேற்குவங்கம் பாஜகவின் மதவெறி அரசியல், மறுபக்கம் மம்தாவின் ஆணவ அரசியல், என்று படாத, பாடுபட்டு வருகிறது.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வங்காளம் இந்தியாவின் மறுமலர்ச்சி, இலக்கியம், கல்வி, தத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து வீரத்துடன் போரிட்டதிலும், தேசபக்த சிந்தனைகளை உருவாக்குவதிலும் வங்காளத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் கவிஞர்கள் முன்னணியில் இருந்தனர்.

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கட்டம் நிறைவுற்று இரண்டாவது கட்டத்தையும் முடித்துள்ளது.

பிரதமர் மோடியின் பக்தி நாடகம்!

தேர்தல் என்றாலே தனது அபார பயணங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துபவர் பிரதமர் நரேந்திர மோடி.

தனது சாலை வலத்தின் போது கொல்கத்தாவின் புகழ் பெற்ற காளி கோயிலில் வழிபாடு செய்தார்.

அரசியல் பதற்றம் நிறைந்த சூழலில், ஏப்ரல் 29 அன்று கடைசி கட்டத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் சாலை வலத்துக்குச் செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி இந்தக் கோயிலில் ஆசி பெறுவது என்பது அவரது அப்பட்டமான தேர்தல் நாடகமாகும்.

கொல்கத்தாவின் முறையான உருவாக்கத்திற்கு முன்பே 1703-ல் நிறுவப்பட்டது இக்கோயில், இங்குள்ள பிரதான தெய்வம் ‘ஜாக்ரத்’ எனக் கருதப்படுகிறது, அவர் என்றும் விழித்திருந்து பக்தர்களின் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பதாக நம்பப்படுகிறது.

தேர்தல் நடைபெறவிருக்கும் கொல்கத்தாவிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கடந்த வாரம் முழுவதும் பிரதமர் மோடி மேற்கொண்ட சிறு பயணங்கள், மக்களைச் சென்றடைவதற்கான ஒரு உள்ளார்ந்த நோக்கத்தைக் கொண்டுள்ளன.

மத்துவா சமூக குடியுரிமை என்ன வேணும்?

காளி கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு, பிரதமர் மோடி வடக்கு 24 பர்கானாஸில் உள்ள மத்துவா தாகூர்பாரியில் பிரார்த்தனை செய்தார். இது, பாஜகவின் முக்கிய வாக்கு வங்கிகளில் ஒன்றாகும். இந்தச் சமூகம், வங்கதேச எல்லையை ஒட்டிய சில தொகுதிகள் உட்பட, குறைந்தது 50 தொகுதிகளில் நேரடி மற்றும் மறைமுக செல்வாக்கைக் கொண்டுள்ளது.

மத்துவா சமூகம் (Matua Community) என்பது வங்காள தேசத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கு இடம்பெயர்ந்த, முக்கியமான நாமசூத்ரா (Namashudra) பிரிவைச் சேர்ந்த பட்டியல் இன (Scheduled Caste) மக்கள் குழுவாகும்.

அரிசந்த் தாகூர் (Harichand Thakur) அவர்களால் நிறுவப்பட்ட மத்துவா மகாசங்கத்தின் மூலம், சமத்துவம், கல்வி மற்றும் சமூக கண்ணியத்திற்காக போராடும் இவர்கள், வைணவ வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

மத்துவா சமூகத்தினரை குடியுரிமை தருவதாக கூறி தொடர்ந்து, ஏமாற்றி வருகிறது பாஜக. இதன் காரணமாக பாஜகவின் முக்கிய வாக்காளர் தளத்தை சிதைக்கக்கூடும் என்று இடதுசாரிகளும், திரிணாமூல் காங்கிரஸும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பின்னணியில், பிரதமர் மோடியின் தாக்கூர்பாரிப் பயணம் அமைந்துள்ளது.

அசைவ பிரசாதம்!

தாக்கூர்பாரிக்குச் சென்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் மத்துவா சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று உறுதியளித்தார், முன்பு இதே போன்ற உறுதி மொழியை இதுவரை அவர் காப்பாற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகு, பிரதமர் மோடியின் அடுத்த பயணமான காளிக் கோயில், இங்கு காளி தேவி, சித்தேஸ்வரி தேவியாக வழிபடப்படுகிறார். மேலும், இங்கு நடைபெறும் நீண்டகால சடங்குகள் தொடர்ந்து பக்தர்களை ஈர்த்து வருகின்றன. இந்தியாவில் தெய்வத்திற்கு அசைவப் பிரசாதம் வழங்கப்படும் ஒரு சில கோயில்களில் தந்தானியா காளிபாரியும் ஒன்றாகும்.

பிரம்மானந்த கேசவ சந்திர சென் குணமடைய வேண்டி, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை மா சித்தேஸ்வரிக்கு ‘டப்-சிங்ரி’ (தேங்காயில் வேகவைத்த இறால்) படைத்த காலத்திலிருந்து இந்த வழக்கம் இருந்து வருகிறது.

அன்று முதல் அந்தச் சடங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஷ்யாம்புகூரில் தங்கியிருந்தபோது ராமகிருஷ்ணர் நோய்வாய்ப்பட்டபோதும் , பக்தர்கள் அவர் குணமடையப் பிரார்த்தனை செய்தவாறே அசைவப் பிரசாதம் படைத்து, அதே வழக்கத்தைப் பின்பற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்சர் இங்கு அடிக்கடி வந்து பக்திப் பாடல்களைப் பாடியதாக நம்பப்படுகிறது.

உணவை அரசியலாக்கும் சங்கப் பரிவாரங்களின் சதி அரசியல், மேற்கு வங்க அசைவ உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, இன்று ஒரு, நெருடலை சந்தித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இடதுசாரிகள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் உணவுப் பண்பாட்டில் தலையிடுவர் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

பீகார் மற்றும் குஜராத் போன்ற சில என்டிஏ ஆளும் மாநிலங்களில் இந்துப் பண்டிகைகளின் போது மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கங்கையில் மீன் தின்றால் கைது வங்கத்தில் வாக்கு வாங்க மீன் தின்னும் பாஜக என்று மாநிலத்துக்கு மாநிலம் நடிப்பு அரசியலே அதன் நடப்பு அரசியல்!

இடது சாரிகள் எதிர் மமதா பானர்ஜி எதிர் பாஜக

இந்தத் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக மற்றும் இடசாரிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 32 லட்சம் வாக்காளர்களை உச்ச நீதிமன்றப் போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்ததையும் முன்வைத்து மமதா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதே போல், சோனார் பங்களா என்ற முழக்கத்துடன் சட்டம் ஒழுங்கு மற்றும் ஊழல் புகார்களை முன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் செய்கிறது. மேலும் களத்தில் உள்ள இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஊழலற்ற, மத வெறியற்ற வங்கம், என்று பரப்புரை செய்வதுடன், தங்களது இழந்த செல்வாக்கை மீட்கப் போராடி வருகின்றனர்.

பாசிச பாஜக வளர்ந்த விதம்

2016க்கு பிறகு பாஜக பெருவாரியான பணத்தை செலவழித்தது. சமூக ஊடகங்களில் பெருமளவிலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ராம நவமி போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, ஒவ்வொரு நாளும் வைரலான போலி வீடியோக்கள் என ஒருங்கிணைக்கப்பட்ட பல முயற்சிகள் பாஜகவால் மேற்கொள்ளப்பட்டன.

இம்மாதிரியான ஓர் அரசியலை இதற்கு முன் பார்த்திராத மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் திரிணாமுல் மற்றும் இடதுசாரிகள் ஆகிய இரண்டு கட்சிகளாலும் இதற்கான சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை, என்கிறார் புகழ்பெற்ற அரசியல் நிபுணர்.

கடந்த காலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் மேற்கு வங்கத்தின் சமூக சீர்த்திருத்தவாதி வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர். அந்த வாக்குப்பதிவில் பெருவாரியான இடங்களிலும் மம்தாவின் கட்சி வெற்றி பெற்றது. பாஜக பிரித்தாலும் யுக்தியை பயன்படுத்தினால் அதனை எதிர்கொள்ளும் விதமாக வங்க தேசியவாதம் இங்கு எழும் என்று தெளிவாக உணர்த்தப்பட்டதாகவே அறிய முடிகிறது.

பாஜகவின் அரசியல் அணியா அமலாக்கத்துறை?

முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது பாஜக தலைவர்கள் பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், பாஜகவின் தேர்தல் தில்லுமுல்லுகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட கோதுமை, பெரிய அளவில் திசை திருப்பப்பட்டதாக, கோஜதங்கா சுங்கத் துறை துணை ஆணையர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், பசீர்ஹட் காவல் நிலையத்தில் கடந்த 2020, அக்டோபர் 23-ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் கொல்கத்தா மண்டல அலுவலகம் இந்த சோதனையை நடத்தியது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கொல்கத்தா, பர்த்வான், ஹாப்ரா ஆகிய நகரங்களில் உள்ள 9 இடங்களில் தற்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

அங்கு இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) மற்றும் மாநில அரசு முத்திரைகள் கொண்ட கோணிப் பைகள் அகற்றப்பட்டு, புதிய கோணிப் பைகளில் கோதுமை நிரப்பப்பட்டுள்ளது. பிறகு அந்த கோதுமை சந்தை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையற்ற ஆதாயம் அடைந்துள்ளனர். குற்றச் செயல் மூலம் வருமானம் ஈட்டியுள்ளனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் உட்பட பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன இன்று வழக்கம்போல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ மேற்குவங்கம் மேலும் பங்கம் அடையாமல் காக்கப்பட வேண்டும் என்றால், அதன் மதச்சார்பற்ற பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், இடதுசாரிகள் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அது சாத்தியம்!
மீண்டும் இந்தியாவிற்கு மேற்கு வங்கம் வழிகாட்டுமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button