இந்தியா

சண்டிகரில் நான் கண்டு வியந்ததும் நெகிழ்ந்ததும்

மு.கண்ணகி

‌இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செப்டம்பர் 21-25 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் பிரதிநிதிகளாகப் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

மாநாட்டிற்குச் சென்றபோது ஏற்கெனவே இந்திய மாதர் தேசியச் சம்மேளனத்தின் சார்பில் இந்தியா முழுவதும் பிரச்சார யாத்திரை நடத்திய போது அறிமுகமான சமூகச் செயற்பாட்டாளர் சா.வெங்கடேசன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. சகோதரர் வெங்கடேசன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், அவருடைய அம்மா பாஞ்சாலி பிறந்தது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை. அப்பாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம். அப்பா சாமிக்கண்ணு சண்டிகர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்திருக்கிறார். வெங்கடேசன் சண்டிகரில் பிறந்து தமிழ்நாட்டில் கல்வியை முடித்திருக்கிறார்.

சண்டிகரில் 12 வருடங்களாக சமூக சேவை இலவசப் பயிற்சி மையம் நடத்திவருகிறார். அதில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள், ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள் கண்டறியப்பட்டு 350 குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

10 ஆசிரியர்கள் இலவசமாகப் பணி ஆற்றுகிறார்கள். குழந்தைகள் அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மானியத்துடன் சேர்க்கப்பட்டுப் படிக்க வைக்கப்படுகிறார்கள். அந்தக் குழந்தைகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் அரசுப் பணிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

படிக்கும் குழந்தைகளுக்குக் கல்விக்குத் தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்குக் கல்வி மட்டுமல்லாமல் தேசப்பற்று, ஒற்றுமை, சாதிப் பாகுபாடு இல்லாமை, சமூக ஒடுக்குமுறை பற்றிய விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இந்த சேவையைப் பாராட்டி சண்டிகரில் இரண்டு விருதுகளும் பஞ்சாபில் ஒரு விருதும் வழங்கி சிறந்த சமூக ஆர்வலர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தேர்வு செய்து 3 வருடத்திற்குத் தன்னார்வலராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருடைய கல்வி சமூக சேவை மையத்தைப் பார்க்க மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ழிதிமிகீ தேசியத் தலைவர் பி.பத்மாவதி, மாநிலச் செயலாளர் மு.கண்ணகி, மாநிலத் துணைத் தலைவர் பி.இராஜ லெட்சுமி, மாநில துணைச் செயலாளர் டி.வி.லலிதா, மாநிலக் குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வி, மதுரை மாநகர் மாவட்டக் குழு கற்பக வள்ளி முத்துலெட்சுமி, விழுப்புரம் மாவட்ட சிபிஐ துணைச் செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் திலகவதி ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் வாழ்த்தும் போது குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலம். இந்த இடத்தைப் பார்க்கும் போது நம்பிக்கை உள்ளது. இந்த மண் ஒரு புதுமையான வீரம் செறிந்த மண். சண்டிகர் பஞ்சாப் ஹரியானா போராளி புரட்சியாளர் பகத்சிங் கனவு கண்ட மண். இந்த ஆசிரியர்கள் இந்த நிறுவனத்தை நடத்துகிற சகோதரர் வெங்கடேசன் எங்கள் இயக்கத் தலைவர்கள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கல்விதான் மிக மிக முக்கியமானது. அரசியல் சாசனம் அளித்த டாக்டர் அம்பேத்கர் படி படி என்றார். உலகின் மிகப் பெரிய புரட்சியாளர் லெனின் படி படி என்றார். தென்னாப்பிரிக்க விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்த தலைவர் நெல்சன் மண்டேலா சிறையை விட்டு வரும்போது கேட்ட போது படியுங்கள் கல்விதான் உலகை மாற்றும் சமூகத்தை மாற்றும் என்றார்.

உலகம் நம்மிடம் இருக்கிறது. நாம் ஆதரவற்றவர்கள் அல்ல. ஏதும் அற்றவர்கள் அல்ல. நம்மிடம் இந்தியா என்ற சொத்து உள்ளது. கல்வியை சகோதரர் தருகிறார். உங்கள் கண்களில் கல்வி தெரிகிறது. உங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் நீதிபதிகள் நாளை நாட்டை ஆளப்போகும் ஆட்சியாளர்கள் தெரிகிறார்கள். புதிய சகாப்தம் படைக்கப் போகிறீர்கள் வாழ்த்துகள் என்றார்.

மாநாட்டின் நிறைவு நாள் இரவு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் மற்றும் தோழர்களையும் அழைத்துச் சென்றார். மாணவர்கள் அந்த இரவு நேரத்திலும் மகிழ்ச்சியோடு சந்தித்தார்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். தமிழர் பண்பாடு விருந்தோம்பல் அன்புக்கட்டளை ஏற்று உணவருந்திவிட்டு வரும்போது நீண்ட நேரமாகிவிட்டது.

அதிகாலை 4 மணிக்கு வாகனங்களோடு வந்து தலைவர்கள் சண்டிகர் வந்து இறங்கிய போது ரயில், விமான நிலையங்களில் வரவேற்று அழைத்துச் சென்றதைப் போல தமிழ் நாட்டிற்குச் செல்லும் போதும் ரயில் விமான நிலையங்கள் அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்தார். தோழர்கள் கேட்ட உதவிகளை மறுப்பின்றி எந்த எதிர்பார்ப்பின்றி தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு மகனாய், நண்பனாய், சகோதரனாய், உற்ற தோழனாய் நம்மோடு பயணித்த வெங்கடேசனின் மறக்க முடியாத நினைவுகளோடு நாங்கள் பயணித்தோம்.

தன்னிகரற்ற அவருடைய சேவை தொடர அனைவரின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் காணிக்கையாக்கி வியந்து நெகிழ்ந்து நிறைவு செய்கிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button